சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் என தமிழக அரசு தெளிவுபடுத்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று (அக்.12) சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
அதன்படி, 19-ம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை (ஒரு நாளைக்கு 5 காட்சிகள்) சிறப்புக் காட்சிகள் திரையிடலாம்” என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் அதிகாலை 4 மணி அளவில் ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சி தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். மேலும், இது தொடர்பான குழப்பங்களும் நீடித்து வந்தன.
இந்நிலையில் அதனை தெளிவுபடுத்தும் வகையில், தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் திரையரங்குகளில் ‘லியோ’ படத்தின் முதல் காட்சியை காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் எனவும், இறுதிக் காட்சி நள்ளிரவு 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை விதிமீறல் இல்லாமல் முறையாக பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours