இந்திய சினிமாவில் தற்போது ‘லியோ’ திரைப்படம் குறித்த பேச்சுதான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பலரின் எதிர்பார்ப்பைத் தொடர்ந்து அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது ‘லியோ’.
இத்திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நாள் முதலே பலர் ஆர்பரிப்புடன் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வி ‘லியோ LCU-வில் வருமா ?’ என்பதுதான். விஜய் போன்ற ஸ்டார் நடிகரின் படம் என்பதைத் தாண்டி, லோகேஷ் கனகராஜின் இயக்கம் மீதான எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கிறது. தன் முந்தைய படங்களின் கதாபாத்திரங்களின் தொடர்ச்சியாக்கி இவர் அமைக்கிற LCU பாணி திரைக்கதை குறித்த ஆவல் பல ரசிகர்களுக்கும் உள்ளது. `Lokesh Cinematic Universe’ என்கிற இந்த LCU-வின் தொடக்கபுள்ளியிலிருந்து தொடங்கி அதன் முழு விவரத்தை இக்கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சினிமாடிக் யுனிவர்ஸ் (Cinematic Universe):
ஒரு திரைப்படத்தின் கதாபாத்திரங்களையும் அதன் கதைகளத்தையும் மற்றொரு படங்களில் தொடர்வதுபோல் அமைப்பதை ‘யுனிவர்ஸ்’ எனக் குறிப்பிடுவார்கள். மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்துதான் இந்த யுனிவர்ஸ் வரிசை முறை பலருக்கும் பரிச்சயமானது. தமிழ் சினிமாவில் முதன் முதலில் இந்த யுனிவர்ஸ் முறையை புஸ்கர்- காயத்ரியின் ‘ வ குவாட்டர் கட்டிங்’ திரைப்படத்திலும், தியாகராஜா குமாராஜாவின் ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்திலும் கண்டிருப்போம். புஸ்கர் காயத்ரியின் ‘ஓரம் போ’ திரைப்படத்தில் வரும் ஒரு ஆட்டோ தியாகராஜா குமாராஜாவின் ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்திலும் வரும்.
அதுமட்டுமின்றி ‘ஓரம் போ’ திரைப்படத்தின் சந்துரு கதாபாத்திரதில் ‘வ குவாட்டர் கட்டிங்’ திரைப்படத்திலும் கேமியோ செய்திருப்பார், ஆர்யா. இதை லோகேஷ் கனகராஜும் ஒரு நேர்காணலில் மேற்கோள் காட்டியிருப்பார். இதைத் தொடர்ந்து சில தமிழ் திரைப்படங்களில் ஆங்காங்கே சில காமெடி எலமென்ட்டுகளுக்காக இந்த முறையைப் பின்பற்றியிருப்பார்கள். இந்த யுனிவர்ஸ் முறையை அனைவருக்கும் புரியும் வண்ணத்தில் தனது திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வைத்து ‘ LCU – லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ என்கிற மாபெரும் பிராண்டை உருவாக்கியிருக்கிறார், லோகேஷ் கனகராஜ். ஆனால், இந்த யுனிவர்ஸுக்கு பெயரிட்டது என்னவோ ரசிகர்கள்தான்.
LCU :
‘லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் ‘ ( Lokesh Cinematic Universe) என்பதைச் சுருக்கமாக ‘LCU’ என பெயர் வைத்து ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினர். இந்த யுனிவர்ஸுக்கு கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படம்தான் வினையூக்கியாக செயல்பட்டு வருகிறது. லோகேஷ் தனது கரியரில் நான்காவதாக இயக்கிய ‘விக்ரம்’ திரைப்படம்தான் இந்த யுனிவர்ஸுக்கு முதற்புள்ளி வைத்தது. விக்ரம் திரைப்படம் வெளியாவதற்கு முதல்நாள் கைதி திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வரவும் என்கிற அறிவிப்பு வர பலருக்கும் ஆச்சர்யம். படம் பார்த்த பிறகு அது ஏன் எனப் புரிந்தது.
கதாபாத்திரங்களின் வழி LCU :
‘கைதி’ – ‘விக்ரம்’ திரைப்படத்தை எவ்வாறு லோகேஷ் தனது சினிமாடிக் யுனிவர்ஸில் கனெக்ட் செய்திருக்கிறார் என பார்த்தால்…’கைதி’ மற்றும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் முக்கியப் புள்ளி ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரம்தான். அவரிடமிருந்துதான் போதை பொருட்கள் மற்ற இடங்களுக்கு செல்லத் தொடங்கும். 5000 டன் எடையுள்ள போதை பொருளின் ரா (Raw) பொருட்களைத்தான் மற்ற இடங்களுக்கு ரோலக்ஸ் அனுப்புவார்.
ஆனால், ‘கைதி’ திரைப்படத்தில் போதைப் பொருட்களை ரோலக்ஸ்தான் அனுப்புவார் என்பதை நேரடியாகக் காட்டியிருக்கமாட்டார்கள். ஆனால், ஸ்கார்ப்பியோ அடையாளத்தைக் காட்டியிருப்பார்கள். அதை தமிழகத்திற்குள் அடைக்கலம் – அன்பு தலைமையிலான குழு எடுத்து வருவதாக ‘கைதி’ திரைப்படத்தின் கதை தொடங்கும்.
நரேன் நடித்த பிஜாய் கதாபாத்திரம்:
‘கைதி’ படத்தின் தொடக்கத்தில் 5000 டன் பொருட்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாக பிஜாய் கூறுவார். அதன் மூலமே அந்தக் கதாபாத்திரத்தின் பயணம் தொடங்கும். ‘கைதி’ திரைப்படத்தின் இறுதியில் ‘ சரி, டில்லி மாமா, வாங்கி கொடுத்தார்ன்னு சொல்றேன்’ என டில்லி பிஜாயின் மகளுக்கு தங்கக் கம்மலை பரிசாகக் கொடுத்ததற்கு பிஜாய் கூறியிருப்பார்.
அந்த ஒற்றை வசனத்தால் நாம் உருகி பிஜாய்யின் குடும்பத்தை குறித்து ஆழ்ந்து யோசித்திருப்போம். ‘கைதி’ திரைப்படத்தின் சாரம்சம் என உள்நோக்கிப் பார்த்தால் அதன் கதாபாத்திரங்களே !. கதாபாத்திரங்களை காட்சியில் காட்டாமல் வசனத்தின் மூலமாகவே பெயரை மட்டும் கூறி அந்த கதாபாத்திரத்தோடு நம்மை ஒன்ற வைத்திருப்பார்கள். எடுத்துக்காட்டாக, டில்லியின் மனைவியைப் பற்றி ஒரு நீண்ட உரையாடலில் ( தீனா) காமாட்சியுடன் பேசியிருப்பார். ஆனால், டில்லியின் மனைவி கதாபாத்திரத்தை காட்சிப்படுத்தியிருக்கமாட்டார்கள். இருப்பினும், அந்த கதாபாத்திரம் நம்முள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
‘விக்ரம்’ திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியில் பிரபஞ்சன் (காளிதாஸ் ஜெயராம்) கதாபாத்திரம் போனில் பேசுவதாக ஒரு காட்சி அமைந்திருக்கும். அந்த வேளையில் பிரபஞ்சன் பிஜாய்யிடம்தான் பேசுவார். ‘கைதி’ திரைப்படத்தின் ஒரு காட்சியில் பிஜாய் டில்லியின் லாரியில் அமர்ந்து கொண்டு போனில் பேசுவார். இதை ‘விக்ரம்’ திரைப்படத்தின் காட்சியிலும் காட்டியிருப்பார்கள். அதன் மூலமாக நாம் புரிந்துக் கொள்ளலாம். அதுதான் பிஜாய்- பிரபஞ்சன் கதாபாத்திரத்தின் யுனிவர்ஸ் கனெக்ட். அதன் மூலமே பிஜாய் – விக்ரம்(கமல்) கதாபாத்திரத்திற்கு தொடர்பு ஏற்பட்டிருக்கும் என நாம் எண்ணிக் கொள்ளலாம்.
மேலும், ஸ்டீபன் ராஜ் கதாபாத்திரத்தின் மூலமாகதான் ‘கைதி’ திரைக்கதை மோதல் என்கிற புள்ளியைச் சந்திக்கும். ஸ்டீபன் ராஜ் கதாபாத்திரத்தை சந்தேகத்தின் பேரில் சந்தனம் ‘விக்ரம்’ திரைப்படத்தில் கொலை செய்திருப்பார்.
இதனைத் தொடர்ந்து யுனிவர்ஸ் கனெக்ஷனில் டில்லி கதாபாத்திரத்தின் கையையும், டில்லியுடன் லாரியில் பயணிக்கும் காமாட்சி கதாபாத்திரத்தையும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஒரு காட்சியில் காட்டியிருப்பார்கள். ‘கைதி’ திரைப்படத்தில் டில்லிக்கும் அன்பு- அடைக்கலம் குழுவிற்கும் தொடர்பு இருப்பதாகப் படத்தை எதிர்பார்ப்புடன் முடித்திருப்பார்கள். அதைப் பற்றி நாம் முழுமையாக ‘கைதி -2’ திரைப்படத்தில் எதிர்பார்க்கலாம். இதை தொடர்ந்து ‘விக்ரம்’ திரைப்படத்தின் இறுதியில் அன்புவும் அடைக்கலமும் ரோலக்ஸ் குழுவைச் சேர்ந்தவர்கள் எனக் காட்டியிருப்பார்கள். இதெல்லாம் தான் ‘கைதி’ – ‘விக்ரம்’ திரைப்படத்தின் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் கனெக்ஷன்ஸ் !.
கதையின் வழி LCU :
இந்த யுனிவர்ஸின் மூலக் கதையை உள்நோக்கிப் பார்த்தால், ரோலக்ஸிடமிருந்துதான் 5000 டன் ரா போதைப் பொருட்கள் தமிழகத்திலுள்ள சந்தனத்தின் கைகளுக்கு வருகிறது. அவரிடமிருந்து அன்பு – அடைக்கலம் குழுவிற்கு கிடைக்கும் சமயத்தில்தான் இன்ஸ்பெக்டர் பிஜாய் அதைக் கைப்பற்றிக் கொள்கிறார். அதுமட்டுமின்றி அடைகலத்தையும் அவரின் குழுவையும் கைது செய்கிறார், பிஜாய். இந்த 5000 டன் எடை கொண்ட போதை பொருட்களின் மற்றொரு பங்கு ‘போதைப் பொருள் தடுப்பு அதிகாரி’ பிரபஞ்சனிடம் இருக்கும். பிரபஞ்சன் அதை பிஜாய்யிடம் தெரிவிப்பார் .
இதற்கிடையில், பிஜாய் தனது உயர் அதிகாரியின் விழா ஒன்றில் கலந்துக் கொள்வதற்கு செல்கிறார். அங்கு போலீஸ் அதிகாரிகள் அருந்தும் மதுவில் ஏதோ சில பொருட்களை கலப்பதால் அதன் மூலமாக காவல் அதிகாரிகளின் உடல்நிலையில் பிரச்னை ஏற்படுகிறது. அவர்களை மருத்துவமனையில் சேர்பதற்கு இன்ஸ்பெக்டர் பிஜாய்யிற்கு ஜெயிலிலிருந்து ரிலீஸான ஒரு கைதி உதவி செய்கிறார். அந்த கைதிதான் டில்லி. அந்த சமயத்தில் ஒரு நாள் இரவு முழுவதும் பழைய காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரிகள் எவரும் இல்லாத சூழல் நேர்கிறது. அந்த பழைய காவல் நிலையத்திற்கு அன்பு மற்றும் அவரின் குழு விரைகிறது. அங்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஒரு கான்ஸ்டபிள் (நெப்போலியன்) அன்புவின் குழுவை எதிர்க்கொள்ள உதவி செய்கிறார்.
அப்போது டில்லியும் பிஜாய்யும் அந்த பழைய காவல் நிலையத்திற்கு வந்து விடுகிறார்கள். அங்கு டில்லிக்கும் அன்புவின் குழுவிற்கும் மோதல் நேர்கிறது. அந்த மோதல் முடிந்தப் பிறகு அடைகலத்திற்கும் டில்லியும் ஏற்கெனவே தொடர்பு இருப்பதாக தெரியவரும். இதனை தொடர்ந்து இச்சம்பத்திற்காக காவல் அதிகாரி பிஜாய்யின் குடும்பத்தை அன்புவின் குழு கொலை செய்துவிடுகிறார்கள். அதனைத் தொடர்ந்து பிஜாய் ஏஜென்ட் விக்ரமுடன் இணைந்துக் கொள்கிறார். ஏஜென்ட் விக்ரம் குறித்து விசாரிக்க ‘பிளாக் ஸ்குவாட் ‘ அமர் வருகிறார். இந்த போதை பொருட்கள் போலீஸிடம் சிக்கியதற்கு அதிகளவில் கோபப்பட்டு பிரபஞ்சன் உட்பட பலரை கொலை செய்கிறார், சந்தனம்.
தான் இறந்துவிட்டதாக நடித்து மற்ற அனைத்து விவரங்களையும் சேகரித்துக் கொள்வார், ஏஜென்ட் விக்ரம். இதைத் தொடர்ந்து ஏஜென்ட் விக்ரம் ‘பிளாக் ஸ்குவாட்’ அமருடன் சேர்ந்து சந்தனத்தை கொலை செய்துவிடுவார்கள். இதனையடுத்து இறுதியாக ரோலக்ஸ் மீட்-அப் வைத்து அன்பு – அடைக்கலம் குழுவிடமும் மற்ற குழுவிடமும் ஏஜெண்ட் விக்ரமை கண்டுபிடித்து கொடுப்பவனுக்கு “லைஃப் டைம் செட்டில்மென்ட் ரா ! ” எனக் கூறுவார். இதுவரைதான் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் கதை முற்றுப் புள்ளி அல்லாத முடிவை பெற்றிருக்கிறது. இந்த கனெக்ஷன்களையெல்லாம் தாண்டி தனது கதாபாத்திரங்களை தனித்தனியாக வைத்து அடுத்தடுத்து திரைப்படங்களாகவோ, வெப் சீரிஸாகவோ LCU-விற்குள் இயக்கலாம் என்கிற ஐடியாவை லோகேஷ் கனகராஜே ஒரு நேர்காணலில் பகிர்ந்திருந்தார். அந்த வகையில் ‘கைதி’ திரைப்படத்தின் பிஜாய், டில்லி, நெப்போலியன், அன்பு, அடைக்கலம் ஆகிய கதாபாத்திரங்களை வைத்தும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் அமர், ஏஜென்ட் டீனா, ரோலக்ஸ் ஆகிய கதாபாத்திரங்களை வைத்து தனி திரைப்படமாகவோ, வெப் சீரிஸாகவோ வெளிவரும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சிலாகித்து வருகின்றனர்.
LCU-வும் ஐடியாக்களும் :
‘கைதி’ திரைப்படத்தில் நரேன் நடித்துள்ள பிஜாய் கதாபாத்திரத்தையும் அவரது குழுவின் கதாபாத்திரங்களையும் வைத்து தனியாக ஒரு படம் வரும். கார்த்தியின் டில்லி கதாபாத்திரத்தை மையப்படுத்தி அவரின் வாழ்க்கையில் முன்பு நடந்ததை (prequel) வைத்து ஒரு படம் பண்ணலாம். லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் ” கைதி திரைப்படத்தின் இறுதியில் ,டில்லி கதாபாத்திரத்தின் கையில் ஒரு கட்டைப்பை இருக்கும், அது கபடி விளையாடி ஜெயித்த கோப்பைகளை வைத்திருந்தோம்” எனக் கூறியிருந்தார். இதற்கு பின்னுள்ள கதையையே ஒரு படமாக பண்ணலாம் எனவும் ஜார்ஜ் மரியன் நடித்த நெப்போலியன் கதாபாத்திரத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு படம் உருவாக்கலாம் என்றெல்லாம் கூறினார்கள். இது மட்டுமின்றி அர்ஜுன் தாஸ் – ஹரிஷ் உத்தமனின் அன்பு – அடைக்கலம் குழு கதாபாத்திரங்களை வைத்து ஒரு தனி கேங்ஸ்டர் திரைப்படம் என்கிற ஐடியாவையும் விக்ரம் திரைப்படத்தின் பகத் ஃபாசிலின் அமர் கதாபாத்திரத்தை வைத்து ஒரு திரைப்படம், ஏஜென்ட் டீனாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு கதைகளம், ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கென ஒரு தனித் முழுநீள கேங்ஸ்டர் திரைப்படம் என்கிற ஐடியாக்களையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களின் கூறி வருகின்றனர்.
இவற்றில் சில ஐடியாக்களை லோகேஷும் ஒரு நேர்காணலில் ‘இந்தந்த கதாபாத்திரங்களை தனியாக வைத்து ஒரு படமாகவோ வெப் சீரிஸாகவோ பண்ணலாம்’ எனக் கூறியிருந்தார். ஆனால், சமீபத்திய நேர்காணல்களில் பத்து திரைப்படங்களுடன் தனது சினிமா கரியரிலிருந்து விலகிக் கொள்வதாகவும் கூறி வருகிறார். அதற்குள் இந்தத் திரைப்படங்களை இயக்க வேண்டும் என ஒரு வரிசை வைத்திருப்பதாகவும் கூறினார். அதில் தனது ஐந்தாவது திரைப்படமான ‘லியோ’வைத் தொடர்ந்து ‘தலைவர்- 171′,’கைதி -2′ ,’விக்ரம் – 2’, சூர்யாவுடன் ‘இரும்பு கை மாயாவி’ என ஒரு லிஸ்டை கையில் வைத்திருக்கிறார்.
‘லியோ’ திரைப்படமும் இந்த யுனிவர்ஸுக்குள் வரவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், படக்குழுவோ அந்த விஷயத்தை சஸ்பன்ஸாக வைத்திருக்கின்றனர். ரசிகர்களும் இணையத்தளங்களில் லியோ திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் ஸ்டில்களை வைத்து இது ‘ LCU-வில் வரும்….இல்லை, விக்ரம் திரைப்படத்தில் மன்சூர் அலிகானின் பாடல் ஒளிபரப்படும், அது LCU-வில் வரும் போது ,லியோ திரைப்படத்தில் அவர் ஒரு தனி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார், இது LCU-வில் வராது’ எனக் கூறி வருகின்றனர். இந்த வினாவிற்கான வெளிச்சம் அக்டோபர் 19 ஆம் தேதிதான் கிடைக்கும்.
இது போன்ற யுனிவர்ஸ் பாணியில் மல்டி ஸ்டாரர் திரைப்படமாக உருவாகுவது தமிழ் சினிமாவுக்கு புதுமையானது. இந்த மாதிரியான படங்களைப் பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆவலாகத்தான் இருப்பார்கள். இருப்பினும், உச்சநட்சத்திரங்களின் மார்கெட் என்பதை தாண்டி தனது நுட்பமான மாறுபட்ட பாணியின் மூலமாக ‘LCU’ என்கிற மாபெரும் பிராண்ட்டை உருவாக்கி தனக்கென ரசிகர்களையும் உருவாக்கியிருக்கிறார்.
LCU-விற்குள் வேறு எந்த கதாபாத்திரத்தைக் கொண்டு வரலாம் என்பதையும், வேறு கனெக்ட் இருந்தால் அதையும் கமென்ட்டில் பதிவிடுங்கள் !
+ There are no comments
Add yours