அடுப்பைப் பற்ற வைத்து ஆட்டத்தை ஆரம்பித்து வைத்த விசித்ரா
‘எதிரியிடமிருந்து ஒரு வார்த்தையை பிடுங்கி விட்டு பதிலுக்கு மிஷின் கன் மாதிரி நூறு வார்த்தைகளை எறியும்’ நுட்பமான விளையாட்டில் மாயா ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம், விஷ்ணுவோ ‘யார் தொட்டாலும் ஷாக் அடிக்கும்’ ரிப்பேர் ஆன இயந்திரம் மாதிரி கோபப்படுகிறார். விசித்ராவின் தலையீடு அவருக்கு எரிச்சலைத் தர ‘அதெல்லாம் நீங்க கேட்கக்கூடாது. கெளம்புங்க’ என்று துரத்திவிட்டார். அந்த வீட்டின் அமைதிப்புறாவான யுகேந்திரன் அந்தப் பக்கம் வந்து எதையோ சொல்ல, அந்தப் புறாவையும் ஃபிரை செய்து சாப்பிடும் கொலைவெறியில் இருந்தார் விஷ்ணு. பிரதீப் எல்லாம் கேட்கவே வேண்டாம், தேங்காயைத் துறுவிக் கொண்டே ‘கிட்ட வந்தீங்கன்னா… சுடுதண்ணிய புடிச்சு மூஞ்சில ஊத்திடுவேன்’ என்கிற மோடில் இருந்தார்.
தனது உடல்நலப் பிரச்னை காரணமாக எண்ணெய் சேர்க்காத தோசையை அக்ஷயா கேட்க, “அப்படில்லாம் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா செய்ய முடியாது” என்று பிரதீப் சொன்னது அராஜகம். சின்ன வீட்டார் செய்யும் பயங்கரமான அட்ராசிட்டியைத் தாங்க முடியாமல் பெரிய வீட்டார் கூடிக் கூடி குமுறிக் கொண்டிருந்தார்கள். “இந்த கேப்டன் வேற பயப்படறான்… சண்டை வரக்கூடாதுன்னு பார்க்கறான்” என்று டென்ஷன் ஆகிக் கொண்டிருந்தார் யுகேந்திரன். ஆக… கடைசியில் அமைதிப்புறாவாக இருந்த யுகேந்திரனின் கையையும் பிடித்து இழுத்து வந்து கடைத் தெருவில் நிறுத்திவிட்டது பிக் பாஸ் வீடு.
“இந்த இடத்துல ஏழு பேர் இருக்கணும்… ஆறு பேருதான் இருக்கோம். வேலைப் பளு அதிகம். குறை வேற சொல்லிட்டே இருக்காங்க… அதனால நாங்க ஸ்ட்ரைக் பண்ணலாம்ன்னு இருக்கோம்” என்று தங்களின் சதித்திட்டத்தைப் பற்றி தனது காம்பவுண்ட் சுவர் தோழியான பூர்ணிமாவிடம் முதலில் ‘லீக்’ செய்தார் மாயா. “ஏதாச்சும் சாப்பிடறதுக்கு வேணும்னா இப்பவே எடுத்து வெச்சுக்கோ” என்று டிப்ஸ் வேறு தந்தார்கள்.
+ There are no comments
Add yours