சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஐ.டி தம்பதிகளின் (சினேகா, வெங்கட் பிரபு) மகனான கைலாஷ் தனிமையில் வாடுகிறான். அந்நிலையில் அவனது நண்பர்களான பல்லு (வேதாந்த் வசந்த்) மற்றும் பல்லவி (பிரணதி பிரவீன்) பிறந்தநாள் பரிசாக கோல்டன் ரெட்ரீவர் நாயினை (மேக்ஸ்) அவனுக்கு வழங்குகிறார்கள். ஆரம்பத்தில் தாயின் கண்டிப்பு இருந்தாலும் பிறகு பாசத்துடன் மெக்ஸினை (நாயினை) வளர்கிறான் கைலாஷ்.
இந்நிலையில் பெற்றோர் வெளியூருக்குச் செல்ல, எதிர்பாராத விதமாக மேக்ஸ் (நாய்) காணாமல் போகிறது. கைலாஷின் நண்பர்களும், அடுக்குமாடி குடியிருப்பின் வாட்ச்மேனின் மகனான ரமணாவும் (பூவையார்) நாயினைத் தேட ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் நாயைக் கண்டுபிடித்தார்களா, இந்தத் தேடலில் அவர்களுக்கு என்ன ஆனது என்பதே ‘சாட் பூட் த்ரீ’ படத்தின் கதை.
கலகலப்பான தந்தையாக வெங்கட் பிரபுவும், கறாரான தாயாக சினேகாவும் சிறிது நேரமே திரையில் வந்தாலும் தங்களுக்கான வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளனர். குழந்தை நட்சத்திரங்களாக கைலாஷ் ஹீத், பிரணதி பிரவீன், வேதாந்த் வசந்த் ஆகியோருக்கு அறிமுகப் படம் என்பதால் சிறிய தடுமாற்றம் இருந்தாலும் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளனர். குறிப்பாக வேதாந்த் வசந்த் சண்டைக் காட்சிகளில் கவனம் பெறுகிறார்.
ஆட்டோ ஓட்டுநராக யோகிபாபுவும், அந்த ஆட்டோவுக்குக் கடன் கொடுத்தவராக தீனாவும் ஒரு சில காட்சிகள் வந்து போகிறார்கள். வாட்ச்மேனின் மகனாகப் பள்ளிக்குச் செல்லாமல், சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் ‘மாஸ்டர் சிறுவன்’ பூவையார். விலங்கு நல ஆர்வலராக ‘பெட் ரேவதி’ எனும் கதாபாத்திரத்தில் ஷிவாங்கி காமிக்களான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர்களோடு சேர்த்து மேக்ஸ் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு கோல்டன் ரெட்ரீவர் நாயும் நடித்துள்ளது.
மூன்று சிறுவர்களின் நட்பு, அவர்களின் குடும்பம் என அறிமுக இத்யாதி காட்சிகளை முடித்து கதைக்குள் நுழைகிறார் இயக்குநர் அருணாச்சலம் வைத்தியநாதன். குழந்தைகள் படம் என்று சொல்லிவிட்டு ‘தனக்கும் தன் மனைவிக்கும் நடந்த “ஆக்சிடென்ட்” தான் அவர்களின் மகன்’ என்று குழந்தைகள் படத்துக்கு ஏற்பில்லாத வசனத்தோடு தொடங்கும் படம் எடுத்த எடுப்பிலே நம்மைத் திடுக்கிட வைக்கிறது. மேலும் நாயை மையமாக வைத்து நகரும் கதையில் சிறுவனுக்கும் நாய்க்குமான உறவை இன்னும் அதிகமாகக் காட்டியிருக்கலாம். அவ்வாறு இல்லாததால் நாய் தொலைந்து போகும் முக்கியமான காட்சி சாதாரண ஒரு காட்சியாகக் கடந்துவிடுகிறது.
ஒரு குழந்தைக்கு என்ன சொல்கிறோம் என்பதை விட என்ன சொல்லக்கூடாது என்பதில் அதிக கவனம் வேண்டும். இப்படத்தில் பணிப்பெண்ணின் கவனக்குறைவால் நாய் காணாமல் போவதால், குழந்தைகள் அவரை ஒருமையில் திட்டுவது போன்ற வசனங்கள் ஆபத்தான போக்கு. அதே நேரத்தில் போலீஸ் அதிகாரி “அது” என்று நாயை அழைக்க, “அது அல்ல அவன்” என்று அதே குழந்தை சொல்வது நகை முரண். படம் நெடுக இதுபோன்ற “எலைட்” மனப்பான்மை ஆங்காங்கே எட்டிப்பார்க்கிறது.
நான்கு சிறுவர்களுக்கு மத்தியில் ஒரு சிறுவனை மட்டும் பள்ளிக்குச் செல்லாதவனாகச் சித்திரித்து, பிறகு பின்கதையாக ஒன்றை வலிந்து திணித்து அதற்கு நியாயம் சேர்த்ததில் அத்தனை செயற்கைத்தனம். வறுமைதான் காரணம் என்றால் அரசுப் பள்ளிக்கூடம் இருக்கிறது இயக்குநரே! யதார்த்தமாக ஒரு படைப்பினை அணுகும் போது பொது சமூகத்தின் புரிதல் அவசியமானது. படத்தில் நாயோடு சேர்த்து அந்தச் சமூகப் புரிதலும் காணாமல் போகிறது. இருப்பினும் இறுதியாக அபார்ட்மெண்ட்டில் இருப்பவர்கள் உதவியால் தனியார் பள்ளியில் சேருகிறான் என்று முடித்த விதத்தில் விமர்சனங்கள் இருந்தாலும் சற்று ஆறுதல் அடைய வைக்கிறது.
இரவு காட்சிக்கான ஒளியமைப்பைச் சிறப்பாக வடிவமைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சுதர்சன் ஸ்ரீனிவாசன். அதே நேரத்தில் நாய் வளர்ந்து ஓடிவரும் கடற்கரைக் காட்சியில் சற்றே செயற்கைத்தனம். இன்னும் கலரிங்கில் (டி.ஐ-யில்) கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அதே போல படத்தொகுப்பளார் பரத் விக்ரமன் படத்தின் நீளத்தைச் சற்று கத்திரி போட்டிருக்கலாம். ராஜேஷ் வைத்யாவின் பின்னணி இசை தேவையில்லாத பல இடங்களில் ஒலித்து கொண்டே இருக்கிறது. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. “சிங்கார வேலனே தேவா” எனும் ‘கொஞ்சும் சலங்கை’ படத்தின் பாடல் வரும் இடங்கள் எல்லாம் மனதுக்குச் சற்று ஆறுதல்.
யோகி பாபுவை சிறுவர்கள் உட்படப் பலர் உருவக் கேலி செய்வது, காணாமல் போன நாயினுடைய உரிமையாளர் “நடிகை த்ரிஷா” எனப் பொய் சொல்வது, அதனால் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவது, அதற்காக இளைஞர்கள் 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்யத் தயாராக இருப்பது, கார்ப்பரேஷன் ஊழியர்கள் நாய்க்கு மருந்து வைத்து உயிரோடு புதைக்க முயல்வது என ஏராளமானத் தவறான உதாரணங்களைக் குழந்தைகள் படத்தில் வைத்தே ஆக வேண்டியதன் அவசியம் என்ன எனப் பல கேள்விகள் எழுகின்றன.
மேலும் சிறுவர்கள் தனியாக நாயைத் தேடுவதை காவல்துறையினர் பார்த்துவிட்ட பிறகும், அவர்கள் பெற்றோருக்கு அழைத்து பேசாமல் இருப்பது, ஆட்டோ டிரைவர் யோகிபாபு குழந்தைகள் சொல்லும் பொய்களை கூட கண்டுபிடிக்காமல் இருப்பது என நிறைய லாஜிக் பிரச்னைகளும் படத்தில் இருக்கின்றன.
மொத்தத்தில் திரைக்கதையில் சுவாரஸ்யமற்றத் தன்மை, குழந்தைகள் படத்திற்கு உரிய நியாயங்களையும் பூர்த்தி செய்யாமல் போனது போன்ற விஷயங்களில் அவுட்டாகி வெளியேறியிருக்கிறது இந்த ‘சாட் பூட் த்ரீ.’
+ There are no comments
Add yours