ரத்தம் விமர்சனம்: க்ரைம் கதைக்கான அழுத்தமின்றி தவிக்கும் திரைக்கதை; படம் சொல்ல வருவது என்ன?

Estimated read time 1 min read

பிரபல புலனாய்வுப் பத்திரிகையாளரான ரஞ்சித் குமார் (விஜய் ஆண்டனி), தாய் இல்லாத தன் மகளுடன் கொல்கத்தாவில் வசித்துவருகிறார். தன் பத்திரிகை வேலையால் மனைவியை இழந்த சோகத்தில் குடிப்பழக்கத்திற்குத் தன்னை அடிமையாக்கிக்கொண்டு, பத்திரிகைத் துறையிலிருந்து முற்றாக விலகியிருக்கிறார். மறுபுறம், சென்னையிலுள்ள ‘வானம்’ என்கிற பிரபல புலனாய்வு இதழின் பத்திரிகையாளரும் ரஞ்சித் குமாரின் உற்ற நண்பருமான செழியன் கொல்லப்படுகிறார். அதைத் தொடர்ந்து செழியனின் தந்தையும் வானம் இதழின் நிறுவனருமான ரத்தின பாண்டியனின் (நிழல்கள் ரவி) கோரிக்கையை ஏற்று, தான் ஆசிரியராகப் பணிபுரிந்த ‘வானம்’ இதழில் மீண்டும் இணைகிறார் ரஞ்சித் குமார்.

‘ரத்தம்’ படத்தில் விஜய் ஆண்டனி

செழியன் கொலையின் பின்னணியைப் புலனாய்வு செய்யத் தொடங்குகிறார். கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாக, செழியனின் கொலைக்கும் அதைத் தொடர்ந்து நடக்கும் வேறு பிற கொலைகளுக்கும் தொடர்பிருப்பதையும் இதை கைதேர்ந்த கும்பல் ஒன்றுதான் செய்கிறது என்பதையும் கண்டுபிடிக்கிறார். மீண்டும் ஒரு ‘புலனாய்வுப் பத்திரிகையாளராக’ களமிறங்கும் ரஞ்சித் குமார், அக்கும்பலைக் கண்டுபிடித்து மக்கள் மன்றத்தில் நிறுத்தினாரா இல்லை ‘புலனாய்வு செய்கிறேன்’ என்ற பெயரில் நம்மைச் சோதித்தாரா என்பதைப் பேசுகிறது சி.எஸ்.அமுதனின் ‘ரத்தம்’.

விஜய் ஆண்டனி எந்த மெனக்கெடலையும் செய்யாமல் தனது ‘வழக்கமான’ உணர்ச்சியற்ற நடிப்பையே வழங்கியிருக்கிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சோகம் வழியும் முகத்துடன் இருக்கும் காட்சிகளில் தனது தாடியின் உதவியால் ‘ஜஸ்ட் பாஸ்’ ஆகிறார். ‘வித்தியாசமான’ கதாபாத்திரத்தில் வரும் மகிமா நம்பியார், கொடுக்கப்பட்ட வேலையைக் குறையின்றி செய்திருக்கிறார். இன்னும் கூடுதலாக இவரைப் பயன்படுத்தியிருக்கலாம். நிழல்கள் ரவி தனது அனுபவ நடிப்பால் தனது கதாபாத்திரத்தை ‘கூலாக’ செய்து முடிக்கிறார். நந்திதா தனது ‘ஸ்ட்ரிட்டான’ கதாபாத்திரத்தால் பார்வையாளர்களைக் கவர முயன்று, அதில் பாதி தேர்கிறார். ‘ஸ்டாண்ட் அப் காமெடியன் ஜெகன்’ நம்மைச் சிரிக்க வைக்கப் படம் முழுவதும் போராடி, தோல்வியடைகிறார். ரம்யா நம்பிசன், ஓ.ஏ.கே.சுந்தர், மீஷா கோஷல், ஜான் மகேந்திரன் ஆகியோர் அழுத்தம் இல்லாத கதாபாத்திரத்தில் வந்து போகிறார்கள்.

ரத்தம் படத்தில்

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும், டி.எஸ்.சுரேஷின் படத்தொகுப்பும் எந்தப் பலத்தையும் சேர்க்கவில்லை. மாறாக, வழக்கொழிந்து போன கேமரா ஆங்கிள் மற்றும் ‘கட்’களால் நம்மைச் சோதிக்கிறார்கள். கண்ணன் நாராயணனின் பின்னணி இசையானது பொங்கலுக்கு வடகறியாக, எல்லா காட்சிகளுக்கும் சம்பந்தமே இல்லாத கருவிகளால் இசைத்து நம்மை இம்சிக்கிறது. கதாபாத்திரங்களின் உணர்வையோ த்ரில்லருக்கான பதற்றத்தையோ பார்வையாளர்களுக்குக் கடத்தாமல், அவர்களைக் கடுப்பேற்றியதைப் பார்க்கும்போது ‘பின்னணி இசையில் ஸ்பூஃப்’ செய்ய முயன்றிருக்கிறாரோ என்றே தோன்றுகிறது. ‘ரத்தம் ரத்தம்’ பாடல் மட்டும் ஓகே ரகத்தில் பாஸ் ஆகுகிறது. ஒரு இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படத்திற்கான சுவாரஸ்யத்தையும் பதற்றத்தையும் கொண்டு வர முடியாமல் தத்தளிக்கிறது அதீஷா, கார்க்கி பவா, தோழர் ஆதி மற்றும் இயக்குநர் சி.எஸ்.அமுதன் ஆகியோர் அடங்கிய எழுத்துக் கூட்டணி.

தனது அதிரடி சாகசங்களால் மனைவியை இழந்த சோகத்தாலும், தன் மகள் மீதான பாசத்தாலும், எல்லாவற்றிலுமிருந்து விலகித் தனித்து வாழும் ஒரு நேர்மையான போலீஸ், ஒரு சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் சார்ஜ் எடுத்துக் கொண்டு களமிறங்கி எதிரிகளை வேட்டையாடும் தொன்மையான ஒரு போலீஸ் கதையில், போலீஸிற்குப் பதிலாக `புலனாய்வுப் பத்திரிகையாளர்’ என்பதாக மாற்றி அமைத்துக் களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன்.

யூகிக்கக் கூடிய திருப்பங்கள், ஆமை வேகத்தில் நகரும் காட்சிகள், செயற்கையான நடிப்பு, நேர்த்தியில்லாத திரையாக்கம் எனச் சுவாரஸ்யமற்றே நகர்கிறது திரைக்கதை. தொடர்ந்து நடக்கும் கொலைகள், அதற்குப் பின்னணியைப் புலனாய்வது, அதை விளக்குவது போன்றவற்றை விறுவிறு திரைக்கதையில் விளக்காமல், கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து பேச்சுப் போட்டி நடத்துவது போலப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் தலையெடுக்கும் மகிமா நம்பியாரை நம்பினால், அவரும் ‘பந்தயத்துக்கு நாங்க வரலாமா?’ எனப் பேச்சுப் போட்டியில் ஃபஸ்ட் ப்ரைஸ் வாங்கும் ஆர்வத்தில் பேசிக்கொண்டே இருக்கிறார்.

ரத்தம் படத்தில்

‘வானம்’ இதழ் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் எந்நேரமும் பரபரப்பாக ‘தாட் பூட்’ என ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசி குறுக்கமறுக்க போய்க்கொண்டே இருக்கிறார்கள். முக்கிய நிகழ்வுகளை வானம் ‘இதழின்’ சார்பாக கவர் செய்ய ‘சேட்டிலைட் கேமரா’ வாகனங்களுடன் செல்கிறார்கள். எதுக்குங்க?! ஆசிரியரே இல்லாமல் ஏழு ஆண்டுகளாக ஓர் இதழை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். வானம் இதழின் முன்னாள் ஆசிரியரும் உலகப் புகழ்பெற்ற இன்வெஸ்டிகேடிவ் ஜார்னலிஸ்ட்டுமான விஜய் ஆண்டனியை, அதே இதழின் ‘க்ரைம் நியூஸ்’ ஹெட்டிற்கே தெரியாது என்பதாக வருகிறது ஒரு காட்சி. இது என்ன மாதிரியான புலனாய்வு இதழ் அலுவலகம் என்பதையே ஒருவர் புலனாய்வு செய்து நமக்குப் புரிய வைக்க வேண்டும் போல! காவல்துறை தொடர்பான காட்சிகளிலும் நம்பத்தன்மை இல்லை.

விஜய் ஆண்டனி தனது முந்தைய போலீஸ் படமான ‘கொலை’ படத்தின் தாக்கத்திலிருந்தே மீளாமல் தவிக்கிறார். ‘இவர் பத்திரிகையாளரா இல்லை போலீஸா?’ எனக் குழப்பும் வகையில் அவரின் மேனரிஸமும் புலனாய்வு செய்யும் காட்சிகளும் உள்ளன. இறுதியில் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்து, குதிரையில் ஏறிப் பறந்து ‘பரியேறும் புலனாய்வாளராக’ அவதாரமெடுத்து நம்மைப் பதற (!) வைக்கிறார். ஒரு கட்டத்தில் இதுவும் க்ரைம் ஜானரில் எடுக்கப்பட்டிருக்கும் ஸ்பூஃப் படம் போல என்றெல்லாம் தோன்றுகிறது.

ரத்தம் படத்தில்

சாதி, மதம், சினிமா போன்றவற்றின் மீதான இளைஞர்களின் வெறியை சில கொலைகார கும்பல் எப்படித் தங்களது குற்றச்செயலுக்குப் பயன்படுத்திக்கொள்கிறது, கடந்த சில ஆண்டுகளாக ‘வெறுப்புப் பிரசார’த்தின் மூலமாகக் குற்றங்கள் எப்படி அதிகரித்து வருகின்றன என்பது ஒரு க்ரைம் படத்துக்குச் சுவாரஸ்யமான கருதான். ஆனால், இதே பகுப்பாய்வைச் சித்தாந்த மோதலால் நடந்த தீவிரவாதச் செயல்களுக்கும் பொருத்திப் பார்த்துவிடும் ஆபத்து இருக்கவே செய்கிறது.

சுவாரஸ்யமான திரைக்கதையும், ரசிக்கும்படியான திரையாக்கமும் அமையாமல் போனதால், `ரத்தம்’ வேண்டிய அழுத்தமின்றி தவிக்கிறது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours