கணவன் – மனைவிக்கு இடையே வரும் வழக்கமான பிரச்னைகளையும், அதோடு சமகால வாழ்க்கைச் சூழல் அவர்களுக்கு இடையே உருவாக்கும் நவீன பிரச்னைகளையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பாடம் எடுக்காமல், தோளில் கைபோட்டு நம்முடன் உரையாடிப் புரிய வைக்கிறது இந்த ‘இறுகப்பற்று’ திரைப்படம்.
சிறு பிரச்னைகள் முரண்பாடுகளுக்குக் கூட கப்புல் கவுன்சிலிங் (Couple Counselling), சைக்காலஜிக்கள் தெரபி, அவை தொடர்பான புத்தகங்கள் மற்றும் மொபைல் ஆப்-கள், விவாகரத்து என வேகவேகமாக நவீன தலைமுறை எடுக்கும் ‘அவசர முடிவுகளை’ விமர்சிக்கிறது படம். அதேநேரம், மொத்தமாகவும் அவற்றைப் புறந்தள்ளாது, அவற்றின் ‘சிறிய’ தேவையும் பலனையும் சுட்டிக்காட்டுகிறது.
தம்பதிகளுக்கு இடையிலான அன்பு, விட்டுக்கொடுத்தல், இணையரின் சுயமரியாதையைப் பேண வேண்டிய பொறுப்பு, சிறு சண்டைகளையும் ஊடல்களையும் அணுகும் முறை போன்றவற்றை விவாதிக்கிறது. மேலும், திருமண பந்தத்தை மிகவும் ரொமான்டிசைஸ் செய்யவோ, மிகைப்படுத்தி பயமுறுத்தவோ செய்யாமல், சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள், சமாதானங்கள், அரவணைப்புகள் என ஆனந்தமாக அணுகச் சொல்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.
கதை..?
காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியான அர்ஜுனுக்கும் (ஶ்ரீ) திவ்யாவிற்கும் (சானியா ஐய்யபன்) இடையே இருந்த காதல் கரைந்து, சண்டைகள் அதிகரிக்கின்றன. ஏற்பாட்டுத் திருமண செய்துகொண்ட தம்பதியான ரங்கேஷிற்கும் (விதார்த்) பவித்ராவிற்கும் (அபர்ணதி) ஒரு குழந்தை உள்ளது. பவித்ரா தனது உடல்பருமனைக் குறைக்காததால், விவாகரத்துப் பெற்று அவரிடமிருந்து விலகும் முடிவை எடுக்கிறார் ரங்கேஷ். சைக்காலஜிஸ்ட்டான மித்ராவும் (ஷ்ரதா ஶ்ரீநாத்), அவரது கணவர் மனோவும் (விக்ரம் பிரபு) சண்டைகளே இல்லாமல் தங்கள் திருமண வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.
அர்ஜுன்-திவ்யா, ரங்கேஷ்-பவித்ரா தம்பதிகளின் பிரச்னை தன்னிடம் வரவே, அவர்களுடன் உரையாடி அவர்களுக்கு இடையிலான பிரச்னைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார் மித்ரா. பின்னர் அதற்கான ஆலோசனைகளை முன்வைக்கிறார். மித்ராவின் வேலையே மனோ-மித்ரா தம்பதியின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் சங்கடங்கள் நிகழக் காரணமாகிறது. இம்மூன்று தம்பதிகளின் பிரச்னைகள் என்ன என்பதையும் இறுதியில் அவர்கள் அவற்றிலிருந்து மீண்டார்களா என்பதையும் இறுகப் பற்றிப் பேசுகிறது இந்த ‘இறுகப்பற்று’.
ஶ்ரீ, சானியா ஐயப்பன், விதார்த், அபர்ணதி, ஷ்ரத்தா ஶ்ரீநாத், விக்ரம் பிரபு என ஆறு பிரதான கதாபாத்திரங்களின் தேர்வும் கச்சிதம். ஒவ்வொருவரும் தங்களின் கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து, அக்கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும் அக-புற சிக்கல்களையும் அழுத்தமாகப் பதிய வைத்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் விதார்த் தன் வலியை விவரிக்கும் இடத்தில் நடிப்பில் பிரமாதப்படுத்துகிறார். உடைந்து அழும் இடத்திலும், சின்ன சின்ன முகபாவனைகளிலும் விதார்த்- அபர்ணதி ஜோடி மற்றவர்களைவிட ‘எக்ஸ்ட்ரா மார்க்ஸ்’ வாங்குகிறார்கள். மறைந்த நடிகர் மனோபாலா சில காட்சிகளில் வந்து சிரிக்க வைக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் படம் முழுவதுமே சிறிதும் பெரிதுமாக நிறையப் பாடல்களால் நிரம்பியிருக்கின்றன. கார்த்திக் நேத்தா வரிகளில் கிறிஸ்டோபர் ஸ்டான்லி மற்றும் பத்மபிரியா ராகவன் குரலில் ஒலிக்கும் ‘மாயா மாயா’ பாடல் ரசிக்க வைத்து ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது. முதற்பாதியில் வரும் பாடல்கள் திரைக்கதை ஓட்டத்தோடு தொல்லை தராமல் வந்து போகிறது. பின்னணி இசையில் கதைக்குத் தேவையான Mood Justification செய்திருக்கிறார் ஜஸ்டின். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு பிரத்யேக பின்னணி இசைக் கருவிகளைத் தேர்ந்தெடுத்ததும், அவற்றைக் கதாபாத்திரங்களின் மனக் குரலாய் ஒலிக்க விட்டதும் எனச் சமகால தமிழ் சினிமாவில் தன் இருப்பை அழுத்தமாகப் பதிக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்.
ஆர்ப்பாட்டமில்லாத திரைக்கதையை அச்சு பிசிறில்லாமல் திரையாக்கம் செய்ய கோகுல் பினாயின் ஒளிப்பதிவும் ஜே.வி.மணிகண்ட பாலாஜியின் படத்தொகுப்பும் மிகச் சிறப்பாகவே கைகொடுத்திருக்கிறது. கதாபாத்திரங்களின் அறிமுக காட்சிகளில் வரும் ‘கட்’கள் ரசிக்க வைத்து, படத்திற்கான ‘மூட்’-ஐ ஆரம்பத்திலேயே செட் செய்ய உதவியிருக்கின்றன. மூன்று தம்பதிகளின் வீடுகளையும் அதன் பொருட்களையும் வேறுபடுத்தி காட்டியதோடு , அவற்றை வைத்து தம்பதிகளின் உறவு நிலையைக் குறியீடாகச் சொல்கிறது சக்தி வெங்கட்ராமனின் கலை இயக்கம்.
`இங்கே இ.எம்.ஐ கட்டுறதுக்காகவே நான் வாழ்ற மாதிரி இருக்கு’, ‘நான் உன் மேல கோபமாத்தான் இருக்கேன்…கோபத்தை வெறுப்பா மாத்திடாதே..!’, ‘மென்டலி டிஸ்டர்ப் தான்…மெண்டலி அஃபக்டட் இல்லை!’ என சிம்பிளான வசனங்களில் கொஞ்சம் நாடகத்தன்மை எட்டிப்பார்த்தாலும், மொத்தமாகப் பார்க்கும்போது வசனங்கள் படத்தின் கதையோட்டத்துக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
பொருளாதார / சமூக அடுக்கில் வெவ்வேறு நிலைகளில் உள்ள மூன்று தம்பதிகளை எடுத்துக்கொண்டு, அந்நிலைகளுக்கே உரிய பிரச்னைகளையும், தம்பதிகளின் பிரத்யேக குணங்களால் ஏற்படும் பிரச்னைகளையும் விவரிக்கத் தொடங்குகிறது திரைக்கதை. இப்பிரச்சினை ‘சைக்காலஜிஸ்ட்டான’ மித்ராவின் பார்வையிலேயே அணுகப்பட்டாலும், நமக்குப் பாடம் நடத்துவது போலக் காட்சிகளை வைக்காமல், `ஹானஸ்டி ஏர்’, `தேங்க் யூ ஜார்’ போன்ற சின்னச்சின்ன டாஸ்க்குகளை வைத்து காமெடியாக சொல்லப்படுவதால் நம்மால் எளிதாக கதைக்குள் ஒன்றிவிட முடிகிறது. மூன்று தம்பதிகளின் தனித்தனி பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக விளக்கிச் சொல்லப்பட்டு, விவாதிக்கப்பட்டு ஒருகட்டத்தில் இந்த மூன்று தம்பதிகளின் பிரச்னைகளின் மையமும் ஒன்றுதான் என்று வந்து நிற்கிறது.
இந்த பரிணாமத்தை எளிமையாகவும் யதார்த்தமாகவும் அழகுபட சொல்கிறது திரைக்கதை. தம்பதிகளுக்கு இடையிலான உறவுச்சிக்களை ஷ்ரத்தா ‘தியரிட்டிக்கலாக’ மனோதத்துவ ரீதியில் அணுகுவதும், அதை அவரது கணவர் விக்ரம் பிரபு ‘ப்ராட்டிக்கலாக’ அணுகி, அதற்கு காமெடி கவுண்டர் கொடுப்பதும் என விக்ரம் பிரபு – ஷ்ரத்தா கூட்டணி முதற்பாதியைக் கலகலப்பாக்குகிறது. மறுபுறம், மனைவியை மட்டம் திட்டும் மனோபாவத்தில் இருக்கும் ஶ்ரீயும் விதார்த்தும், அவர்களைச் சமாளிக்க முடியாமல் திண்டாடும் சானியா ஐய்யபன் மற்றும் அபர்ணதி கதாபாத்திரங்களும் என இறுக்கமாகவும் கதையின் மையத்தை விளக்குபவையாகவும் திரைக்கதை பயணிக்கிறது. மூன்று தம்பதியரின் பிரச்னையின் மையமானது நிஜத்தில் பெரும்பாலான தம்பதிகள்/ஜோடிகள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து எழுதப்பட்டதைப்போல நம்மை உணரச் செய்ததன் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர்.
உறவு முறிவுக்குக் காரணமாக உள்ள விஷயங்களை அடுக்கும்போது, ஒற்றைச்சார்புநிலையில் பேசாமல், இரு தரப்பின் மீதும் உள்ள குறைகளை சுட்டிக்காட்டப்படுவது சிறப்பு. மேலும், பொருளாதார சூழல், பணிச்சுமை, குடும்பச் சூழல் போன்றவை தம்பதிகளின் உறவுக்குள் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும் ஆழமாகப் பேசுகிறது. இத்தனையையும் நமக்கு அலுப்பைத் தராமல் சுவாரஸ்யமாகத் தந்த விதத்திற்காகவே பாராட்டலாம். படத்தில் நெகட்டிவ் விஷயங்களே இல்லையா..? இரண்டாம் பாதி முழுக்க தம்பதிகளுக்கிடையேயான பிரச்னைகளைக் காட்டி ஆலோசனைகளையும் தீர்வுகளையும் மையப்படுத்தியே கதை நகர்கிறது.
இன்னும் கச்சிதமாகச் செதுக்கியிருக்கலாம். விக்ரம் பிரபு- ஷ்ரத்தா தம்பதியின் பிரச்னையில் இன்னும்கூட அழுத்தம் சேர்த்திருக்கலாம். முதற்பாதியில் தொல்லை தராமல் வந்து போன பாடல்கள் இப்பாதியில் கொஞ்சம் நம்மைச் சோதிக்கிறது. பாடல்களாலும் வசனங்களாலும் நீண்டுகொண்டே செல்லும் இறுதிப்பகுதியில் யூகிக்கும்படியான க்ளைமாக்ஸ் காட்சியில் நாடகத்தன்மையைத் தவிர்த்திருக்கலாம்.
திருமண உறவில் காதல் குறைந்து பிரிவு வரை செல்லும் இன்றைய தம்பதிகளுக்கு, `பிரியுறதுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்… சேர்ந்திருக்குறதுக்கு ஒரு காரணம் இருந்தாலும் இறுக்கமா பிடிச்சுக்கங்க!’ என்று கியூட் மெஸேஜ் சொல்லி இருக்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன். க்ளைமாக்ஸ் மெஸேஜ் தியேட்டரைவிட்டு வெளியே வந்தும் நம் மண்டைக்குள் சுழல்வதுதான் இப்படத்தின் வெற்றி!
+ There are no comments
Add yours