சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழரான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் இளமை காலம், கிரிக்கெட் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், அந்நாட்டின் அரசியல் சூழல் போன்றவற்றைப் பேச முயன்றிருக்கிறது ‘800’.
இலங்கையின் காலேயில் உள்ள மைதானத்தில் 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம், இந்தியா – இலங்கைக்கு எதிரான பரபரப்பான டெஸ்ட் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் அதுவரை 792 விக்கெட்டுகளை எடுத்துள்ள அந்நாட்டின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் (மதுர் மிட்டல்) 800 விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனையைத் தொட இன்னும் 8 விக்கெட்டுகள்தான் உள்ளது.
முரளிதரன் இச்சாதனையை நிகழ்த்த வேண்டும் என இலங்கை கிரிக்கெட் ரசிகர் ஆக்ரோஷமாகவும் ஆர்வமாகவும் பார்த்துக்கொண்டிருக்கிறார். மறுபுறம், தீவிர கிரிக்கெட் ரசிகரும், முத்தையா முரளிதரனுடைய விளையாட்டின் மீது அன்பு கொண்டவருமான ‘வீரகேசர’ என்ற நாளிதழின் ஆசிரியர் முகுந்தன் சதாசிவம் (நாசர்), முத்தையா முரளிதரனின் இளமை காலம் தொடங்கி 800 விக்கெட் எடுக்கும் நாள் வரையிலான வாழ்க்கை கதையைத் தன் சக தொழிலாளி விநோத்திடம் (ஹரிகிருஷ்ணன்) விவரிப்பதாக முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக்குள் நுழைகிறது படம்.
முத்தையா முரளிதரனாக வரும் மதுர் மிட்டலின் தோற்ற ஒற்றுமையிலேயே கவர்கிறார். ஒரு விளையாட்டு வீரருக்கான உடல்மொழியைக் கொண்டு வந்ததோடு, முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் நிகழும் நிராகரிப்புகள், அவமானங்கள், வெற்றி – தோல்விகளை தன் பக்குவமான நடிப்பால் உயிரூட்டி நம் கண்முன் கொண்டு வருகிறார். முரளிதரனின் அப்பா முத்தையா கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் வேல ராமமூர்த்திக்கு பெரிய வேலை இல்லை. தொடக்கத்தில் ஈழத்தமிழை தென்தமிழ்நாட்டு உச்சரிப்பில் பேசுகிறார். பிறகு தென்தமிழ்நாட்டு மொழியிலேயே பேச ஆரம்பித்துவிடுகிறார். வடிவுக்கரசியும் நாசரும் தங்களது அனுபவ நடிப்பில் குறையில்லை.
முரளிதரனின் சகோதராக வரும் திலீபன், அம்மாவாக ஜானகி சுரேஷ், கோச்சாக லோகிதஷ்வா, ‘மாஸ்டராக’ நரேன், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் சில காட்சிகளே வந்தாலும் குறையில்லாத நடிப்பைத் தந்திருக்கிறார்கள். மகிமா நம்பியார், அருள்தாஸ், ரித்விகா, யோக் ஜேபி என பலர் தலையை மட்டும் காட்டி செல்கிறார்கள். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்காவாக வரும் கிங் ரத்னம், ரணதுங்காவிற்கே உரித்தான ‘கெத்து’ தோற்றத்திலும் உடல் மொழியிலும் ரசிக்க வைத்ததோடு, கச்சிதமான நடிப்பையும் வழங்கியிருக்கிறார். இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான அரவிந் டி செல்வா, ருமேஸ் களுவித்தாரன, டான் அனுசிரி, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் ஷேன் வார்னே, ஜேசன் கில்லெப்ஸி மற்றும் கபில் தேவ் போன்ற கிரிக்கெட் வீரர்களுக்கான நடிகர்கள் தேர்வும், அவர்களிடம் வாங்கப்பட்ட ‘அளவான’ நடிப்பும் கச்சிதம்.
ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல்-இன் படத்தொகுப்பும் கைகோர்த்து, ஆவணத்தன்மையால் தவிக்கும் படத்திற்கு ஒரு ரசிக்கும்படியான திரையாக்கத்தைத் தந்திருக்கின்றன. கண்டியின் குளுமையையும், கிரிக்கெட் மைதானங்களில் பதற்றத்தையும் தன் கேமராவில் கடத்தியிருக்கிறார் ஆர்.டி.ராஜசேகர். ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு ஆன்மாவாக இருக்கிறது. முக்கியமாக, இரண்டாம் பாதியில் முரளிதரன் கதாபாத்திரத்திற்கு முதுகெலுப்பாக இருக்கிறது. அக்காலத்து வடகிழக்கு மற்றும் தெற்கு இலங்கையின் கட்டடங்கள், பேருந்துகள், சுவரொட்டிகள், பலகைகள், இலங்கைக்கே உரித்தான கொண்டாட்டங்கள் நிறைந்த கிரிக்கெட் மைதானங்கள் என படம் முழுவதுமே தயாரிப்பு வடிவமைப்பாளர் விதேஷின் உழைப்பு பலனளித்தியிருக்கிறது.
விஎஃப்எக்ஸ் காட்சிகள் அப்பட்டமாக படத்தோடு ஒட்டாமல் தெரிகிறது. ஒட்டு மொத்தமாக தொழில்நுட்ப ரீதியாக தேர்ச்சி பெறும் திரைப்படம், அண்மையில் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் செகான் கருணாதிலக்க மற்றும் இயக்குநர் எம்.எஸ்.ஶ்ரீபதி கூட்டணியின் கோர்வையில்லாத தொங்கு திரைக்கதையால் தள்ளாடுகிறது.
கிரிக்கெட்டின் தோற்றம், அதன் பரிணாமம், பிரிட்டிஷார் வழியாக உலகம் முழுவதும் பரவுதல் போன்றவற்றை அனிமேஷ் காட்சித்தொகுப்பாக பேசி, இலகுவாகப் கதைக்குள் கூட்டிச் செல்கிறது படம்.
அதற்கு பின், கிரிக்கெட் மீதான முரளிதரனின் ஆசை, கிரிக்கெட்டையே தன் வாழ்க்கையாக தேர்ந்தெடுப்பது என ஒருபுறமும், இலங்கையில் நடக்கும் இனவெறி காரணமாகவும், அதைத் தொடர்ந்து நடக்கும் கலவரங்கள் மற்றும் குண்டு வெடிப்புகளால் முரளிதரனின் தனிப்பட்ட வாழ்க்கையும், கிரிக்கெட் வாழ்க்கையும் பாதிக்கப்படுபது என மறுபுறம் பேச தொடங்குகிறது. ஆனால், இந்த இனவெறியை பரப்புவது யார்? அப்படி பரப்புவதால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன? இந்த இனவெறி அரசியலை இலங்கை அரசு எப்படி அணுகுகிறது? தமிழர்கள் அவ்வெறுப்பையும் தாக்குதல்களையும் எப்படி எதிர்க்கொண்டு பதிலடிக் கொடுத்தார்கள்? என்று பல கேள்விகளுக்கான பதிலை வலுக்கட்டாயமாக சொல்லாமல் ஓடுகிறது திரைக்கதை.
தொடக்கத்தில் நிதானமாகவும் கோர்வையாகவும் நகர்ந்த திரைக்கதை, சிறிது நேரத்திலேயே வேகமெடுத்து துண்டு துண்டாக மாறிவிடுகிறது. மேலும், ஈழத்தமிழில் இருந்து பெரும்பாலான கதாபாத்திரங்கள் பொது தமிழில் உரையாட தொடங்கிவிடுகின்றன.
அதன் பின் எல்லாமே ஆவணத் தொகுப்புகளின் கண்காட்சியாக மாறிவிடுகின்றன. இலங்கை அணியில் இடம்பிடிக்க முரளிதரனின் போராட்டம், அதற்கு பின் அணிக்குள்ளே உள்ள அரசியல், முரளிதரனின் உதவியுடன் இங்கிலாந்து மண்ணில் இலங்கை பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி, அர்ஜுன ரணதுங்கா – முரளிதரனின் நட்பு என முதற்பாதியில் உள்ள பல தொகுப்புகள் நடிகர்களின் நடிப்பால் கொஞ்சம் ரசிக்க வைக்கின்றன. முக்கியமாக ‘தக் லைஃப்’ அர்ஜுன ரணதுங்காவின் ‘மாஸ்’ ஓப்பனிங் ஒரு மேஜிக் போல வருகிறது. ஆனால்….
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடர், 1996 உலகக் கோப்பை என முக்கிய நிகழ்வுகள் குறித்த தலைப்பை திரையில் ஸ்லைடாக ஓடவிட்டு, அந்நிகழ்வுகளை வரிசையாக தொகுத்துள்ளார் இயக்குநர். இந்த தொகுப்புகள் நமக்கு தெரிந்த தகவல்களைக் கொஞ்சம் புனைவு கலந்த காட்சிகளாக பார்க்கும் உணர்வை மட்டுமே தருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் அல்லாதவர்களையும் கனெக்ட் செய்யுமா என்ற கேள்வியைப் பாதியே தாண்டுகிறது. மேலும், அழுத்தம் தராமல் வேகவேகமாக ஓடும் திரைக்கதையில், 1996 இல் இலங்கை முதல் முதலாக உலகக் கோப்பை வென்ற தருணத்தையே சில ஷார்ட்டுகளில் கடந்து போகிறார்கள் திரைக்கதை ஆசிரியர்கள்.
முரளிதரன் மீது ஆஸ்திரேலிய நடுவர்கள் நிகழ்த்திய அநீதி, ஷேன் வார்ன் – முரளிதரன் உரசல், முரளிதரனின் மணிக்கட்டு மீதும், அவர் பந்து எரிவதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள், அதற்கு எதிராக முரளிதரன் போராடுவது என இரண்டாம் பாதி ஒரு தனிப்படமாகவே மாறுகிறது. அவரது பந்து வீச்சை ஐசிசி அமைப்பு சோதிக்கும் முறை, ஸ்டீல் ஆர்ம் சோதனை என பல சுவாரஸ்யமான விஷயங்களாலும், மதுர் மிட்டலின் நடிப்பாலும் ரசிக்கும்படி அமைகிறது இந்தப் பகுதி.
2009ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்கல் நிகழ்வு இரண்டாம் பாதியில் வருகிறது. அந்நிகழ்விற்கு முன்பான காட்சிகளில் இடம்பெற்றிருக்கும் வசனங்கள் வழிந்து திணிக்கப்பட்ட உணர்வை தருவதோடு, பாகிஸ்தான் அணி மீது சர்ச்சையை கிளப்பும் வகையில் உள்ளது.
அரசியல் நீக்கப்பட்ட ஒரு முத்தையா முரளிதரனை கொண்டுவர முயன்றிருக்கிறது திரைக்கதை. மொத்த படத்திலும் எங்குமே இலங்கை இராணுவத்தின் ஈழத்தமிழர்கள் மீதான அட்டூழியங்கள், இலங்கை அரசின் நிலைப்பாடுகள், ஈழத்தமிழர்களின் சமூகநிலை, சர்வதேச நாடுகளின் கண்டனங்கள் என எதுவுமே காட்சியாக்கப்படவில்லை. அந்நாட்டில் நிலவும் அரசின் இனவெறுப்பு அடக்குமுறைகள் முரளிதரனையும் அவர் சார்ந்திருக்கும் இனத்தையும் எங்கனம் பாதிக்கிறது என எதையுமே, அதற்கு முரளிதரனின் நிலைப்பாட்டையும் பேசாமல், முரளிதரனை ‘தமிழர்… தமிழர்.. தமிழர்..’ என முன்வைத்திருக்கிறது படம். மலையகத் தமிழராக அடையாளப்படுத்தப்படும் முரளிதரன், மலையகத் தமிழர்களின் அரசியலையாவது பேசுகிறாரா அல்லது அவர்களின் வாழ்வியலையாவது பிரதிப்பலிக்கிறாரா என்றால் அதுவும் இல்லை.
அதேநேரம், பதில் தாக்குதலில் ஈடுபடும் தரப்பை கேள்விக்குள்ளாக்க தவறவில்லை. நாசர் மற்றும் ஹரிகிருஷ்ணன் கதாபாத்திரங்கள் வழியாக வடகிழக்கு தமிழர்கள் – தென் இலங்கை தமிழர்களுக்கு இடையிலான உரசலைச் பேச இடம்கொடுத்திருக்கிறார்கள் திரைக்கதை ஆசிரியர்கள். ஒரு காட்சியில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே குறித்த காணொளி தொலைக்காட்சி ஓடுகிறது. இதை தவிர இலங்கை ‘அரசை’ பற்றி மூச்சு விடாமல் முழுபடமும் கடந்துச் செல்கிறது.
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ‘மாஸ்டர்’ என்ற ஒரு முக்கிய நபரோடு, இலங்கையின் போராட்டச் சூழலை முரளிதரன் விவாதிக்கும் காட்சிகள், முரளிதரனின் அரசியல் அறியாமையையே சுட்டிக்காட்டுகிறது.
“நான் தமிழனோ சிங்களவனோ இல்லை. கிரிக்கெட்டர்”, “சிங்களவர்கள் விமர்சிச்சா அவுங்க தப்பா நினைப்பாங்க. தமிழ் ஆளுகள விமர்சிச்சா இவுங்க தப்பா நினைப்பாங்க. அதான் நான் ஒதுங்கிப்போறேன்” போன்ற வசனங்களால் முரளிதரனை அரசியல்ரீதியாக நியாயப்படுத்த முயன்றிருக்கிறது படம். ஆனால், முரளிதரனை வெறும் ‘கிரிக்கெட்டராக’ மட்டுமே இலங்கை ரசிகர்களோ, இல்லை கிரிக்கெட் ரசிகர்களோ பார்க்கவில்லை என்பது உலகறிந்தது. மேலும், ‘ஒரு மலையக தமிழன் டு உலக சாதனை நாயகன்’ என்றே படத்தின் தொடக்கத்தில் இருந்து கட்டமைக்கப்படும்போது, திடீரென்று அவர் எப்படி அரசியலற்று போவார் என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.
அரசியல்ரீதியாகதான் சறுக்குகிறது என்றால் இறுதிக்காட்சியில் இருக்கும் அபத்தம் மொத்தமாகவே முரளிதரன் என்ற ‘வெறும் கிரிக்கெட்டர்’ பிம்பத்தைப் போட்டு உடைக்கிறது. ‘800 விக்கெட்டுக்கு இன்னும் ஒரு விக்கெட்தான் என இருக்கும்போது இஷாந்த் சர்மாகிட்ட போய் ‘நீ அவுட் ஆகிடேன்’னு முரளிதரன் உதவி கேட்க வைக்கலாமா இயக்குநர் சார்?’
முரளிதரனை தவிர வேறு கதாபாத்திரங்கள் படம் முழுவதும் வரும்படி அழுத்தமாக எழுதப்படாதது, மொத்த படத்தையும் ‘ஒன்மேன் ஷோ’வாக மாற்றியிருக்கிறது. படம் ஆவணத்தன்மையாகவும் முழுமை பெறாமல் புனைவாக்கமாகவும் தேர்ச்சி பெறாமல் ஒரு ‘டாக்கு-ட்ராமா’தன்மையில் தந்திருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.ஶ்ரீபதி.
+ There are no comments
Add yours