மும்பை: ‘மார்க் ஆண்டனி’ படத்தை தணிக்கை செய்ய மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக விஷால் கூறிய புகாரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால் அண்மையில் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இந்தி டப்பிங் பிரதியை தணிக்கை செய்ய சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும், அதை திரையிடலுக்கு ரூ.3.5 லட்சம் மற்றும் சென்சார் சான்றிதழுக்கு ரூ.3 லட்சம் என இரு தவணைகளாக ராஜன் என்பவரின் வங்கிக் கணக்கில் செலுத்தியதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். விஷாலின் இந்தப் புகாருக்கு பதிலளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை, இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தது.
இந்த நிலையில், சென்சார் போர்டு லஞ்சம் பெற்றதாக விஷால் கூறிய புகாரையடுத்து, இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மெர்லின் மேனகா, தீஜா ராம்தாஸ், ராஜன் ஆகிய மூன்று அதிகாரிகளின் பெயர் சிபிஐ-ன் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours