ஆந்திரா: “சித்தார்த் படத்தை யார் பார்ப்பார்கள் என கேட்டனர்” என்று ‘சித்தா’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் கண்கலங்கியபடி பேசினார்.
சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’ திரைப்படம் செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் வெளியான இப்படம் தெலுங்கில் மட்டும் வெளியாகவில்லை. வரும் 6-ம் தேதி தான் தெலுங்கில் படம் வெளியாகிறது. அதற்கான காரணம் குறித்து படத்தின் புரமோஷன் நிகழ்வில் பேசிய நடிகர் சித்தார்த், “தமிழகம் மற்றும் கேராளவின் முதன்மையான விநியோகஸ்தர்களான ரெட்ஜெய்ன்ட் மூவிஸ், ஸ்ரீ கோகுலம் சினிமாஸைச் சேர்ந்தவர்கள் இந்தப்படத்தை பார்த்து பாராட்டினர்.
கர்நாடகாவில் ‘கேஜிஎஃப்’ தயாரிப்பாளர்கள் படத்தை பார்த்துவிட்டு உரிமையை பெற்றுக்கொண்டனர். இந்தப் படம் ஒரே நேரத்தில் தெலுங்கிலும் வெளியாக வேண்டியது. ஆனால் பலரும், ‘சித்தார்த் படத்தை யார் திரையரங்குக்கு வந்த பார்க்க போகிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பினர். நான் அவர்களிடம் என்னுடைய படம் சிறந்த படமாக இருந்தால் கண்டிப்பாக மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று கூறினேன்.
தெலுங்கில் படம் செப்டம்பர் 28-ம் தேதியே வெளியாக வேண்டியது. மேற்கண்ட காரணங்களால் எனக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. இறுதியாக ஏசியன் பிலிம்ஸின் சுனில் ‘சித்தா’ படத்தை பார்த்து அதன் தரத்தை உணர்ந்து என் மீது நம்பிக்கை வைத்து வாங்கினார். நான் இப்படியான ஒரு நல்லபடத்தை இதுவரை உருவாக்கவில்லை.
படத்தில் என்ன இருக்கிறது என்பதை விளக்க விரும்பவில்லை. நீங்கள் சினிமாவை நம்பினால், சினிமாவை விரும்பினால் தயவு செய்து இந்தப்படத்தை சென்று பாருங்கள். இந்தப் படத்தை பார்த்துவிட்டு, சித்தார்த் படத்தை பார்க்க வேண்டாம் என உங்களுக்கு தோன்றினால், நான் இப்படியான ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்த மாட்டேன்” என கண்கலங்கியபடி பேசினார்.
+ There are no comments
Add yours