முரட்டுத்தனமாகவும் ஹைட் அண்ட் வெயிட்டாகவும் இருந்துவிட்டால் ஆண்களுக்கான தகுதி என்று நினைத்துவிடுகிறோம். ஆனால், தன்னைத்தானே உணர்வது, உள்ளுக்குள் இருக்கும் ஏக்கங்கள், ஆசைகள், தயக்கங்கள் என மெல்ல மெல்ல மெளனம் கலைத்து தான் யார் என மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஆடமாக நடித்துள்ள கானர் ஸ்வின்டெல்ஸ் (Connor Swindells). எரிக் மீதான காதல், பிரேக்கப்பால் ஏற்படும் வலி, அதிலிருந்து மீண்டு வெளிவருவது எனப் பாலினம் என்னவாக இருந்தாலும் காதலின் வலி ஒன்றுதான் எனப் பிரதிபலித்திருக்கிறது எரிக் – ஆடம் காதல். ஆடமின் அப்பா – அம்மாவுக்குள் இருக்கும் உறவு சிக்கல், அதற்குப்பிறகு இருவரும் புரிந்துகொண்டு சேர்வது ஆகிய தருணங்கள் நெகிழ்ச்சி.
‘பாலியல் ரீதியாக, உளவியல் ரீதியாக, சமூக ரீதியாக நீங்கள் யார்?’ என ஒவ்வொருவரையும் உணரவைக்கும் தெரபிதான் திரைக்கதை. நம் மனம், உடல் பற்றி நமக்கே தெரியாத, புரியாத புதிர்களுக்கெல்லாம் காதல், காமம், அன்பு, பாசம், நட்பு, காமெடி, சீரியஸ், சென்டிமென்ட் என ரசனையோடு ஒவ்வொரு எபிசோடும் விடை சொல்கிறது. ஒவ்வொரு பாலினத்திற்கும் ஓர் உணர்வு இருக்கிறது. அந்த உணர்வை வெளிப்படுத்தவேண்டும் என்றால், முதலில் தன்னை எந்தப் பாலினம் என்பதை உணரவேண்டும். அதை உணர முற்படுபவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாககூட இந்தத் தொடரைச் சொல்லலாம்.
+ There are no comments
Add yours