மலையாள சினிமாவின் Police Procedural Films-க்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சமீபத்தில் ‘குட்டவும் சிக்ஷயும்’, ‘இரட்ட’ படங்கள் அந்த வகையில் ரசிகர்களின் கவனத்தை எல்லைகள் தாண்டி ஈர்த்தன.
அதிலும் ‘குட்டவும் சிக்ஷயும்’ முழுக்க முழுக்க குற்றவாளிகளைத் தேடி வடமாநிலங்களுக்குச் செல்லும் காவல்துறை அதிகாரிகள் படும் பாட்டினை யதார்த்தமாக பதிவு செய்தது. ஒரு நிஜ சம்பவத்தின் பின்னணியைக் கொண்ட அந்தப் படத்தை நேர்த்தியாக இயக்கியிருந்தார் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி. படத்தில் காவல்துறை நாயகனாக நடித்த ஆசிஃப் அலி, தன் சகாக்களோடு வட மாநில தேடுதல் வேட்டையில் படும் பாடுகள் நம்மை படத்தோடு கட்டிப்போட்டுவிடும்..!
சீனியர் மம்மூட்டியும் தன் பங்குக்கு அந்த `தேடுதல் வேட்டை’ கோதாவில் குதித்திருக்கிறார். பல துப்பறியும் போலீஸ் பாத்திரத்தில் இதற்கு முன்பு நடித்திருந்தாலும், இதில் யதார்த்தமான ஒரு போலீஸ் பாத்திரத்தில் அனாயசமாக நடித்திருக்கிறார்.
ஏற்கெனவே இவரின் நடிப்பில் 2019-ல் வெளியான ‘உண்டா’ படம், சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட் ஏரியாக்களில் தேர்தல் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட கேரள போலீஸ் எதிர்கொள்ளும் சவால்களைக் காட்டியிருந்தது. ஆனால், இம்முறை ஒரு பெரிய க்ரைம் சம்பவம் ஒன்றை நிகழ்த்திவிட்டு, வட மாநிலங்களுக்குத் தப்பிச் செல்லும் நான்கு பேரை `அலைந்து திரிந்து’ பிடித்திருக்கிறார்.
பத்திரிகைகளில் நாம் அடிக்கடி பார்க்கும் ‘தனிப்படை அமைக்கப்பட்டு அது தேடுதல் வேட்டைக்காக வடமாநிலம் விரைந்தது’ என்ற வரியின் பின்னால் இருக்கும் வலியை அதிர்ச்சியோடு விளக்குகிறது இப்படம்.
பொதுவாகவே மெதுவாகத் துவங்கும் மலையாள சினிமாக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது இந்தப்படம். துவக்கக் காட்சியிலேயே கண்ணூர் ஸ்குவாடின் திறமையை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் ஒரு நள்ளிரவுக் காட்சியின் பின்னணியில் மம்மூட்டியின் மாஸ் ஓப்பனிங்கோடு காட்சியாக்கிய விதத்தில் எழுந்து உட்கார வைக்கிறார் அறிமுக இயக்குநர் இயக்குநர் ரோபி வர்கீஸ் ராஜ். மம்மூட்டி நடித்த ‘புதிய நியமம்’, ‘தி கிரேட் ஃபாதர்’ படங்களின் ஒளிப்பதிவாளர் இவர்!
படத்தின் கதை:
காசர்கோடைச் சேர்ந்த அப்துல் வஹாப் என்ற பணக்கார அரசியல்வாதி தன் வீட்டில் கொடூரமான முறையில் கொள்ளைக் கும்பலால் கொல்லப்படுகிறார். வஹாபின் மனைவி, மகன், மகள் போன்றோர் உயிர்பிழைத்திருந்தாலும், அவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். கொலை செய்யப்பட்டவர் அரசியல்வாதி என்பதாலும், Modus operandi என்று சொல்லப்படும் கொலை-கொள்ளை நிகழ்த்தப்பட்ட விதமும் அரசியலாகி மாநில முதல்வர் வரை குடைச்சல் கொடுக்கிறது. எற்கனவே குற்றப் புலனாய்வில் அசத்திய ‘கண்ணூர் ஸ்குவாட்’ என்ற நால்வர் அணியிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்படுகிறது.
எவ்வளவு புத்திசாலித்தனமான குற்றவாளியாக இருந்தாலும் ஏதாவது சின்ன தடயத்தை நிகழ்விடத்தில் விட்டுச் செல்வான் என்ற அடிப்படை விதியை வைத்தே அந்த பெரிய வழக்கின் ஆரம்பப் புள்ளியாக ஒரு லீட் கிடைக்கிறது. கையில் சிக்கிய ஒருவனை வைத்து மொத்த கேங்கையும் கைது செய்ய சாத்தியமே இல்லை என்பது போன்ற சூழல். மகாராஷ்டிரா, ஒடிஸா, உத்தரபிரதேசம், நேபாளம் என நீளும் குற்றவாளிகளின் தடயங்களை வைத்து மெல்ல மெல்ல கண்ணூர் ஸ்குவாட் என்ற அந்த போலீஸ் டீம் குற்றவாளிகளை நெருங்குகிறார்கள். எக்கச்சக்க அக-புற தடைகளைக் கடந்து குற்றவாளிகளை அவர்கள் கைது செய்யும் படலம்தான் க்ளைமாக்ஸ்!
மம்மூட்டியுடன் சேர்ந்து நான்கு பேர் கொண்ட போலீஸ் டீமின் பெயர்தான் ‘கண்ணூர் ஸ்குவாட்’. படத்தை சில ஃபேன் பாய் சம்பவங்களோடு, கூடுமானவரை யதார்த்தமான மேக்கிங்கில் உருவாக்கி கவனிக்க வைக்கிறார் இயக்குநர். படத்தின் திரைக்கதையை முகமது ஷஃபியுடன் இணைந்து எழுதி இருக்கிறார் கண்ணூர் ஸ்குவாட் டீமில் நான்கு பேரில் ஒருவராக நடித்திருக்கும் ரோனி டேவிட் ராஜ். ஏற்கெனவே குணச்சித்திர வேடங்களில் மலையாள சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் ரோனியை நீங்கள் பல படங்களில் சின்னச் சின்ன ரோலில் பார்த்திருப்பீர்கள். இந்த படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடிப்பில் மிரட்டியிருக்கிறார் ரோனி. ஒரு பிரச்னையில் சிக்கி குற்றவுணர்வில் இவர் தவிக்கும் இடமும் அதிலிருந்து மம்மூட்டியின் உதவியோடு மீண்டு வரும் தருணமும் நெகிழ வைக்கின்றன. படத்தின் இயக்குநர் ரோபி வர்கீஸ் ராஜ் இவரது சகோதரர் என்பது கூடுதல் தகவல்.
போலீஸ் படையில் ஏ.எஸ்.ஐ மற்றும் கான்ஸ்டபிள் ரேஞ்சிலிருக்கும் காவல்துறையின் கடைநிலையில் இருப்பவர்களை ‘படைவீரர்களாக’ சித்தரித்திருக்கிறது இப்படம். கடுமையான சேஸிங்கிற்கு நடுவே குடும்பத்தினரிடம் போனில் பேசி நலம் விசாரிப்பது, குழந்தை பிறந்த மகிழ்ச்சியைக்கூட கொண்டாட நேரம் கிடைக்காமல் வேலையில் பிஸியாக இருப்பது என போலீஸ்காரர்களின் வலிகளை படம் உள்ளபடி பேசியிருக்கிறது. டார்கெட்டை அடைவதற்காக கடைநிலையில் இருக்கும் காவலர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல்- உளவியல் சிக்கல்கள், குடும்பம்-வேலைகளுக்குடையேயான சமநிலை பாதிப்பு, பொருளாதார பிரச்னைகள் என படம் டீட்டெய்லிங்கோடு காவல்துறையின் சொல்லப்படாத பக்கங்களைக் காட்டியிருக்கிறது.
கொஞ்சம் எமோஷனலாக பாத்திரங்கள் ஒவ்வொன்றும் வடிவமைக்கப்பட்டிருப்பது படத்தின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது ‘நாங்கள் சாதரணமானவங்க கிடையாது…போலீஸ்காரர்கள்!’ எனக் குற்றவாளியிடம் மம்மூட்டி கெத்தாக சொல்லும் காட்சியும், ‘அவங்க ரொம்ப சாதாரணமானவங்க சார்…வேட்டை நாய்கள் மாதிரி!’ என இயலாமையில் சீனியர் அதிகாரி மம்மூட்டி டீம் பற்றி சொல்லும் இடமும் காவல்துறையின் படிநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இரண்டாம் பாதியில் ரோடு மூவியாக வேகமெடுக்கும் கதையின் போக்கிலேயே ஒவ்வொரு காவலரின் குடும்பப் பின்னணியைக் காட்டிய விதமும், அதிலும் மம்மூட்டியின் பின்னணி சொல்லப்படாததும் கூட எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. நாட்டைவிட்டே ஓடப்போகும் குற்றவாளிகளைப் பிடிக்க விமானப் பயணத்துக்கு அனுமதி கேட்கும் மம்மூட்டியிடம், ‘டி.எஸ்.பி ரேங்க் அதிகாரிகளுக்குத்தான் ஃபண்ட் ஒதுக்க முடியும்’ என அனுமதி மறுக்கும் இடமும், ஒட்டுமொத்த சேஸிங்கிலும் சாப்பாடு, வாட்டர் பாட்டில் எல்லாவற்றுக்கும் பார்த்து பார்த்து பில் வாங்கி சேகரிக்கும் காட்சியும் நிதர்சனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கண்ணூர் ஸ்குவாட் என்று நிஜத்திலும் இதே பெயர் கொண்ட போலீஸ் படை இந்தியா முழுக்க பயணித்து குற்றவாளிகளைக் கைது செய்து வந்திருக்கிறது என்பதே கொஞ்சம் அயர்ச்சியாக இருக்கிறது.
ஆக்ஷனிலும் எமோஷனல் காட்சிகளிலும் மம்மூட்டி, தான் எவர் க்ரீன் ஸ்டார் என்பதைக் காட்டியிருக்கிறார். படத்தில் அவரது கோபம், இயலாமை எல்லாமே நம்மையும் தொற்றிக் கொள்ள வைப்பதில் இருக்கிறது இயக்குநர் மற்றும் மம்மூட்டியின் வெற்றி. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நாம் பார்த்ததுதான் என்றாலும் உத்தர பிரதேச குக்கிராமத்தில் நள்ளிரவில் மாட்டிக் கொண்ட மம்மூட்டி டீம் எப்படி அங்கிருந்து தப்பிக்கிறார்கள் என்று காட்சிப்படுத்திய விதம் ஆக்ஷன் அதகளம்! படத்தில் மம்மூட்டியின் ஸ்குவாடில் நடித்திருக்கும் ரோனி டேவிட் ராஜ், அஜீஸ் நெடுமன்காட், சபரீஷ் வர்மா மூவரும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்.
மனுநீதிச் சோழன் என்ற நேர்மையான காவல்துறை அதிகாரியாக வரும் கிஷோர் மற்றும் வில்லன்கள் அனைவரும் பாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள். படத்தில் பல கேரக்டர்கள் நம்மைக் கவர்ந்தாலும், வடமாநிலம் முழுவதும் இவர்களோடு பயணிக்கும் சுமோவும் ஒரு முக்கிய கேரக்டரைப்போல வருவது சிறப்பு. வட இந்தியாவை குறுக்கு வெட்டாக சுற்றிய அந்த சுமோவை இவர்கள் பிரியும் தருணம் கவிதை. விதவிதமான லேண்ட் ஸ்கேப்புகளில் பரபர சேஸிங் செய்கிறது முகமது ரஹிலின் ஒளிப்பதிவும், பிரவீன் பிரபாஹரின் எடிட்டிங்கும்! இருவரும் இந்த ஸ்குவாடிற்காக ஓவர் டூட்டி பார்த்திருக்கிறார்கள். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம். மாஸ் மொமண்டிற்காக கடுமையாக அவர் உழைத்திருப்பது ஆக்ஷன் காட்சிகளின் இசைக்கோர்வையில் தெரிகிறது.
”போலீஸ்ல நான் இரண்டு விதமா வேலை செய்றவங்களைப் பார்த்திருக்கேன். 80 சதவிகிதம் பேர் நேரத்தைப் பார்த்துட்டே வேலை செய்வாங்க. பாக்கி 20 சதவிகிதம் பேர் நேரம் காலம் பார்க்காம வேலை மட்டுமே செய்வாங்க. அந்த 20 சதவிகிதம் பேரால தான் இங்கே எல்லா ஸ்டேட்லயும் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுல இருக்கு… அவங்க ராஜாவோட உத்தரவை நிறைவேத்தணும்னு உழைக்கிற படைவீரர்கள். இவங்க இல்லைனா இங்கே ராஜாவே இல்லை!” என்று காவல் அதிகாரி கிஷோர் சொல்லும் க்ளைமாக்ஸ் பஞ்ச் அதுவரை பார்த்த ஒட்டுமொத்த சேஸிங்கிற்கும் நியாயம் செய்யும் விதமாய் இருக்கிறது.
போலீஸ் சிஸ்டத்தை உள்ளது உள்ளபடியே பாசிட்டிவ்-நெகட்டிவ் பக்கங்களோடு காட்டியிருப்பதற்காகவும், மம்மூட்டி அண்ட் கோவின் ஆக்ஷன் நடிப்புக்காகவும் தாரளமாக இந்த கண்ணூர் ஸ்குவாடோடு நாமும் வடமாநிலங்களுக்கு ‘த்ரில் ரைடு’ போய் வரலாம்!
+ There are no comments
Add yours