சினிமாவில் சாதனை புரிய வயது ஒரு தடை அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் பள்ளி மாணவியான பி.கே. அகஸ்தி. தமிழில் ‘குண்டான் சட்டி’ என்ற 2டி அனிமேஷன் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.
குழந்தைகள் உலகில் அனிமேஷன் படங்கள் தனி கவனம் பெற்று வருகின்றன. அவர்களை கவரும் விதத்தில் ‘குண்டான் சட்டி’ என்ற படம் உருவாகி உள்ளது. இப்படத்தை இயக்கியதால் சினிமா இயக்குநர்கள் சங்கத்தில் சிறப்பு உறுப்பினராகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார் சிறுமி அகஸ்தி. அவரிடம் பேசினோம்,
” நான் எட்டாம் வகுப்பு படிக்கறேன். ரெண்டாவது படிக்கும் போதிருந்து புத்தகங்கள் வாசிக்க ஆரம்பிச்சேன். லைப்ரரிக்கு போய் படிக்க பிடிக்கும். அதன்பிறகு கதைகள் எழுத ஆரம்பிச்சேன். அந்தக் கதைகளை எல்லாம் அப்பாகிட்ட புத்தகமாக போடச் சொல்லிக் கேட்பேன். அப்பா, அம்மா, அக்கா எல்லாரும் என்னை என்கரேஜ் பண்ணுவாங்க. ‘தொடர்ந்து எழுது, அப்புறமா புத்தகம் போட்டுக்கலாம்’னு சொல்லிட்டே இருந்தாங்க. அந்த டைம்ல தான், அனிமேஷன் படங்கள் ரொம்ப பிடிச்சது. தொடர்ந்து அனிமேஷன் படங்களாக பார்த்ததில், எனக்கும் அப்படி படங்கள் பண்ணனும்னு ஆசையாகிடுச்சு.
என்னோட பூர்வீகம் கும்பகோணம். அப்பா கார்த்திகேயன், கும்பகோணத்திலேயே மூணு பள்ளிகூடங்கள் வச்சிருக்காங்க.. அப்பாகிட்ட நான் அனிமேஷன் படம் பண்ணுற மாதிரி ஒரு கதை ரெடி பண்ணியிருக்கேன்னு சொன்னேன். அப்பாவுக்கு ஆச்சரியம். ஆனா கும்பகோணத்தில் இப்படி படம் பண்றதுக்கான சூழல் கிடையாது என்பதால், அப்பா எனக்காக சென்னை வந்தார். அவருக்குத் தெரிந்த சினிமா நண்பர்களைச் சந்திச்சு, விவாதிச்சார். அனிமேஷன் ஸ்டூடியோவில் இந்தக் கதையை படமா பண்ணலாம்னு தெரிஞ்சுக்கிட்டார். அதன் பிறகு அப்பாவோட நானும் சென்னை வந்து, இந்த படத்தை பண்ணினேன். மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு நம்பிக்கை கொடுக்கும் படமா இதை பண்ணியிருக்கேன்.
இந்தக் கதையை ஆறு நாட்கள்ல எழுதிட்டேன். 8 மாத உழைப்பில் அனிமேஷன் படம் உருவாகிடுச்சு. சினிமா மாதிரியே இதிலும் இசை, எடிட்டிங், பாடல்கள் எல்லாம் இருக்கும். எம்.எஸ்.அமர்கித் சார் இசையமைச்சிருக்கார். பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகளுக்கு இரண்டு வாரம் ஆகிடுச்சு. பி.எஸ்.வாசு சார் படத்தொகுப்பை கவனிச்சார். அப்பா எஸ்.ஏ.கார்த்திக்கேயன், படத்தை தயாரிச்சிருக்கார். திரைக்கதை, வசனம், பாடல்களை அரங்கன் சின்னத்தம்பி சார் எழுதியிருக்கார்.
கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள், குறும்புத்தனங்கள் போன்றவற்றைக் கொண்டு மாணவர்கள் பள்ளிக்கூடத்திலும், வீட்டில் பெற்றோர்களிடத்திலும் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும். எப்படி படித்து முன்னேற வேண்டும் எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று சிறு சிறு விஷயங்களை ரொம்ப இயல்பாகவும் நேர்த்தியாகவும் சொல்லி இருக்கேன். ஸ்கூல்ல என் கூடப்படிக்கற எல்லார்கிட்டேயும் நான் டைரக்ட் பண்ணியிருக்கற விஷயத்தைச் சொன்னேன். அவங்க எல்லாருக்கும் ஆச்சரியம், ‘படம் பார்க்க ஆர்வமா இருக்கோம்’னு சொல்லியிருக்காங்க. இந்தப் படத்தை இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி சார், எழில் சார்னு நிறைய இயக்குநர்கள் பார்த்து ரசிச்சிருக்காங்க. அவங்க படத்தை பார்த்துட்டு, ‘சிறப்பு இயக்குநர்’னு சொல்லி என்னை பாராட்டினது சந்தோஷமா இருக்கு” என்கிற அகஸ்தியிடம் படத்தின் கதையை கேட்டோம்.
”கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் கிராமத்தில் குப்பன், சுப்பன் எனும் இருவர் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். இருவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள். இருவருக்கும் ஒரே நேரத்தில் ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. குப்பனுக்கு வித்தியாசமான தோற்றத்துடன் மகன் பிறக்கிறான். இரண்டு குழந்தைகளுக்கும் குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் என்று பெயர் சூட்டுகிறார்கள். குண்டானும், சட்டியும் மற்றவர்களின் கேலிகளுக்கு வருத்தப்படாமல் நன்றாகப் படிக்கிறார்கள். அவர்களது கிராமத்தில் கோயில் நிலத்தை வைத்திருக்கும் பண்ணையார், அதிக வட்டி வசூலிக்கும் சேட், பொருட்களை பதுக்கி வைத்திருக்கும் வியாபாரி என மூவரையும் புத்திசாலிதனமாக ஏமாற்றுகிறார்கள்.
இருவரும் செய்யும் சேட்டைகள் குப்பனுக்கும், சுப்பனுக்கும் தெரியவர குண்டானையும், சட்டியையும் மூங்கில் மரத்தில் கட்டி ஆற்றோடு விடுகிறார்கள். இருவரும் வாழைத்தோப்புக்காரர், சலவை தொழிலாளி, குதிரைக்காரன், பேராசை கிராமம் என அவர்களிடமும் தங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டி பணம் சேர்க்கிறார்கள். குண்டானும், சட்டியும் மீண்டும் ஊருக்குள் வர… இவர்களால் பாதிக்கப்பட்ட பண்ணையார், சேட், வியாபாரி மூவரும் இவர்கள் இருவரும் ஊருக்குள் வந்திருப்பதை அறிந்து அடியாட்களை அனுப்பி தூக்கி வரச் சொல்ல, அடியாட்கள் அவர்களை அழைத்து செல்வதைப் பார்த்த அணில் மற்றும் வாத்தியார் பெற்றோருக்கு தெரியப்படுத்த குண்டானும், சட்டியும் காப்பாற்றப்பட்டார்களா ? பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைத்ததா? என்பதே குண்டான் சட்டியின் கதை.” என்கிறார் அகஸ்தி.
வாழ்த்துகள் இயக்குநர் அகஸ்தி
+ There are no comments
Add yours