‘வாலி’ இந்தி ரீமேக் விவகாரம்: உயர் நீதிமன்ற அனுமதி பெற்றுவர மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவு | Vali movie Hindi remake issue: Master Court directed to obtain the HC approval

Estimated read time 1 min read

சென்னை: ‘வாலி’ படத்தின் இந்தி உரிமை தொடர்பான வழக்கில் எஸ்.ஜே.சூர்யாவிடம் குறுக்கு விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுவர வேண்டும் என மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைப்பட இயக்குநரும், பிரபல நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், நடிகர் அஜித், சிம்ரன் நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளியான ‘வாலி’ என்ற படத்தின் இந்தி உரிமையை போனி கபூர் பெற்றிருந்தார். இதை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கதை எழுதியவருக்கே சொந்தம் என்பதற்கான எந்த ஆவணங்களையும் எஸ்ஜே சூர்யா தாக்கல் செய்யவில்லை. மேலும், படத்தின் காப்புரிமை படத்தின் தயாரிப்பாளருக்கே சொந்தம் எனக் கூறி, வாலி படத்தின் இந்தி ரீமேக்கை துவங்க இடைக்கால அனுமதி வழங்கியது. இந்த பிரதான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் எஸ்.ஜே.சூர்யாவின் சாட்சியத்தை பதிவு செய்ய மாஸ்டர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நான்காவது மாஸ்டர் கோர்ட் நீதிபதி முன்பு இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நேரில் ஆஜராகி இரண்டரை மணிநேரம் சாட்சியம் அளித்தார். குறுக்கு விசாரணை நிறைவடையாததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் நான்காவது மாஸ்டர் நீதிமன்றத்தின் நீதிபதி கின்ஸ்லி கிறிஸ்டோபர் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.ஜே.சூர்யா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, உயர் நீதிமன்றம் அளித்த கால அவகாசம் முடிந்து விட்டதால், எஸ்.ஜே சூர்யாவிடம் குறுக்கு விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுவர மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours