முதல் போட்டியாளரான சுரேஷ், வீட்டிற்குள் நுழைந்ததும் தன் திருவிளையாடலை உடனே ஆரம்பித்து விட்டார் பிக் பாஸ். சுரேஷை உடனடி கேப்டன் ஆக்கி ஆட்டத்தை ஆரம்பித்தார். அடுத்து வரும் போட்டியாளரிடம் விவாதித்து வெற்றி பெறுவதன் மூலம் அந்தப் பதவியை அவர் தக்க வைத்துக் கொள்ளலாம். விவாதத்தில் தோற்றுவிட்டால் பதவியைத் தந்து விட வேண்டும். முடிவு தெரியவில்லையென்றால் இருவருக்கும் வாய்ப்பு போய், புதிதாக நுழைபவரிடம் பதவி அளிக்கப்படும் என்பதுதான் ஆரம்ப விளையாட்டு. இதில் சிலர் எளிதாக விட்டுக் கொடுத்துவிட்டார்கள். சிலர் சற்று நேரம் போராடிப் பார்த்து பிறகு கழன்று கொண்டார்கள். சிலர் விடாக்கண்டன்களாக இறுதி வரை முட்டி மோதினார்கள்.
இரண்டாவதாக வந்த போட்டியாளர் பூர்ணிமா ரவி. யூடியூப் பிரபலம். நடிப்பில் நிறைய ஆர்வம். வேலூர் பொண்ணு. ‘எமோஷனல், அட்வெஞ்சரஸ்’ என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்கிறார். பேச்சுதான் ஆயுதம் என்ற பூர்ணிமா ‘நேர்ல அழகா இருக்கீங்க சார்’ என்று கமலைப் பார்த்த சந்தோஷத்தில் எதையோ சொல்லித் தடுமாறினார். இவருக்கு விசிலை அளித்த கமல் வாழ்த்தி உள்ளே அனுப்பினார்.
உள்ளே சென்ற பூர்ணிமாவிற்கும் சுரேஷிற்கும் ‘யார் கேப்டன்’ என்கிற விளையாட்டு ஆரம்பித்தது. சுரேஷ் வெளியே கத்துவதுதான் டெரராக இருக்கிறதே தவிர, வீட்டிற்குள் கட்டிய பசு மாதிரி இருக்கிறார். சற்று நேரம் வாக்குவாதம் செய்து விட்டு பிறகு விட்டுக் கொடுத்துவிட்டார். “கேப்டன் பாண்டை நீங்களே கட்டி விடுங்கண்ணா…” என்று பூர்ணிமா கேட்க “இல்ல வேண்டாம்மா… நீயே கட்டிக்க” என்று சுரேஷ் சட்டென்று பின்வாங்கியது புத்திசாலித்தனம். (அந்தப் பயம் இருக்கணும்ல. சமீபத்தில் ஒரு பெண் நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு துடுக்குத்தனமாக மாலை அணிவிக்கப் போய் பலத்த கண்டனத்தைப் பெற்றார்).
+ There are no comments
Add yours