வழக்கம்போல அதே பிரம்மாண்டத்தோடு தொடங்கியிருக்கிறது இந்த பிக் பாஸ் சீசன் 7. ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக, இரண்டு வீடு, இரண்டு கமல் மற்றும் ஒரு எழுத்தாளர் என சில கூடுதல் சர்ப்ரைஸ்களும் வந்துள்ளன.
என்ட்ரி கொடுத்த போட்டியாளர்கள் தொடங்கி கமல் சொன்ன அரசியல் பஞ்ச் வரை நேற்று நடந்த சுவாரஸ்யத் தருணங்கள் பற்றிப் பார்க்கலாம்.
எம்.ஜி.ஆர் பாடலுடன் தொடங்கிய பிக் பாஸ்
‘நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என எம்.ஜி.ஆர் பாடலுடன் தூக்கத்திலிருந்த எழுந்த கமல் ‘சலிப்படையாமல் இருக்க வேண்டும் என்றால் வாழ்க்கையில் புதிதாக எதையாவதுச் செய்ய வேண்டும். அப்படி, புதிதாக எதையாவது செய்தால் அதில் வெற்றி – தோல்வி இரண்டுமே வரும். எதையும் அனுபவமாக எடுத்துக் கொண்டு பயணித்து, புது முயற்சிகளுக்கான நம் செயல்களின் அனுபவத்தையே மன மகிழ்ச்சியாக எடுத்து பயணிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இப்படி புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்றால் அதற்கு முதலில் தைரியம் வேண்டும். அது என்னிடம் இருக்கிறது. அதனால்தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன்’ என்ற அறிவுரையுடன் வீட்டில் இருந்து கிளம்பி, முன்னும் பின்னும் அமைச்சர்களின் கார்களைப்போல வெள்ளைக் கார்கள் அணிவகுக்க பிக்பாஸ் செட்டிற்குள் வந்தார் கமல்.
வழக்கமாக எடுத்தவுடன் நிகழ்ச்சிக்குள் செல்லாமல் புதுவிதமாக நிகழ்ச்சி தொடங்கியது சர்ப்ரைஸ்தான். அதைவிடவும், இரண்டு கெட்டப்பில் தோன்றி, இரண்டு வேரியேஷன் நடிப்பில் வீட்டைச் சுற்றிக் காட்டிய கமலின் அற்புதமான நடிப்பு நிகழ்ச்சியின் ‘செர்ரி ஆன் த டாப்’ தான்.
போட்டியாளர்கள் அறிமுகம்
இதையடுத்து வழக்கம்போல் ஒவ்வொரு போட்டியாளர்களாக அவர்களுக்கான அறிமுகத்துடன் வீட்டிற்குள் சென்றனர். எதிர்பார்த்தபடியே கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவிணா தாஹா, பிரதீப் ஆண்டனி, ராப் பாடகர் நிக்ஷன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயக்குமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷூ, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணா, சரவண விக்ரம், யுவேந்திரன் வாசுதேவன், விசித்திரா, எழுத்தாளர் பாவ செல்லதுரை, அனன்யா ராவ், டான்சர் விஜய் என மொத்தம் 18 போட்டியாளர்கள்.
பவா செல்லத்துரை, தனக்கே விருப்பமில்லாத உடையில் இருந்தது, 18-ல் பாதி போட்டியாளர்கள் விஜய் டிவி தயாரிப்புகளாக இருந்தது மட்டும்தான் நெருடலாக இருந்தது.
இந்த சீசனின் புத்தகப் பரிந்துரையின் தொடக்கமாக எழுத்தாளர் பவா செல்லத்துரை, மலையாள எழுத்தாளர் பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய ‘சிதம்பர நினைவுகள்’ புத்தகத்தைப் பரிந்துரைத்தார்.
கமல் சொன்ன அரசியல் பஞ்ச்
இன்றைய நிகழ்ச்சியின் இறுதியில் ‘உரிமைக் குரல்’ என்ற வாசகத்துடன் இருக்கும் சிவப்புக் கொடியை எல்லா போட்டியாளர்களுக்கும் கொடுத்தக் கமல் “உங்கள் உரிமைகள் மறுக்கப்படுகிறது. சக போட்டிகளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது அநீதி இழைக்கப்படுகிறது. அதற்குச் சரியான நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் இந்த சிகப்புக் கொடியை கைகளில் மடக்கி உயர்த்திப் பிடியுங்கள். இது நான் உங்களுக்கு வழங்கும் ஆயுதம்.
வார இறுதியில் உங்களை நான் சந்திக்கும் போது உங்களின் பிரச்னைகளுக்கு நியாயம் வழங்கிய பிறகுதான் நான் நிகழ்ச்சியினுள் செல்வேன். இந்த அறிவுரை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும்தான். நமக்கும், நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் அநீதி நடந்தால் நியாயம் கேட்டு ‘உரிமைக் குரலை’ நாம் எழுப்ப வேண்டும்.” என்று கூறிச் சென்றார்.
இந்த சீசனின் என்ன நடக்கப்போகிறது, யார் யார் என்னென்ன சம்பவங்களை நிகழ்த்தப் போகிறார்கள், முதல் வாரம் என்ன நடக்கிறது என்பதைக் காத்திருந்து பார்ப்போம். இந்த 18 போட்டியாளர்களில் யார் யார் சரியான தேர்வாக இருக்கிறார்கள் என்பதையும் கமெண்டில் பதிவிடுங்கள்.
+ There are no comments
Add yours