ஒரே சமயத்தில் இரண்டு பெரிய படங்கள் வெளியானால், ‘யார் பெருசுனு அடிச்சுக்காட்டு’ என ஒரே களேபரமாக இருக்கும். பெரிய படம் என்றாலே இப்போது ஒரு மொழியில் மட்டும் வெளியாவதில்லை. பல மொழிகளில் டப் செய்யப்பட்டு, அதே நாளில் வெளியாகிறது.
ஒரு பெரிய படத்தில் ரிலீஸ் தேதியை முடிவு செய்வது என்பது பெரிய டாஸ்க். விடுமுறை நாள்கள், பண்டிகை நாள்கள் எனப் பார்த்து பார்த்து முடிவெடுப்பார்கள். மற்ற மொழிகளிலும் வெளியிடத் திட்டமிருந்தால், அந்த மொழிகளில் பெரிய படங்கள் ஏதும் வெளியாகிறதா என்பதை பார்ப்பார்கள். அதற்கேற்றவாறு, ரிலீஸ் தேதி முடிவாகும். ஸ்பேரிங் என்று முடிவு செய்துவிட்டால் இறங்கிவிடுவார்கள். அப்படி, இந்த வருடத்தின் மீதமிருக்கும் மூன்று மாதங்களில் வெளியாக இருக்கும் பெரிய படங்களின் லிஸ்டை பார்க்கலாம்.
அக்டோபர் :
தமிழைப் பொறுத்தவரை அக்டோபர் மாதம் ‘லியோ’வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் ‘இறுகப்பற்று’, ‘800’, ‘ரத்தம்’, ‘தி ரோட்’ ஆகிய படங்கள் வெளியாகின்றன. இரண்டாவது வாரத்தில் பெரிதாக ஒன்றுமில்லை. மூன்றாவது வாரம் (அக்டோபர் 19) வெளியாகிறது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தப் படத்தோடு தமிழில் வேறெந்த படமும் போட்டி போடவில்லை. ஆனால், தெலுங்கில் ‘நேனு வஸ்துன்னாவ்’ என்றும் களமிறங்குகிறார், பாலையா. அனில் ரவிப்புடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், ஶ்ரீலீலா நடித்திருக்கும் ‘பகவந்த் கேசரி’ வெளியாகிறது.
மறுநாள் அக்டோபர் 20ம் தேதி, ரவிதேஜா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. அவர் ஜோனில் இருந்து வெளியே வந்து ரவிதேஜா நடிக்கும் பயோபிக் இது. கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்திருக்கும் ‘கோஸ்ட்’ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. எம்.ஜி.ஶ்ரீனிவாஸ் இயக்கத்தில் 2019ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி பேசப்பட்ட ‘Birbal Trilogy Case 1 : Finding Vajramuni’ என்ற படத்தின் தொடர்ச்சி என்றும் இதை ஒரு யுனிவர்ஸ் கொண்டு வர இருக்கிறார்கள் என்றும் பேசப்படுகிறது. இந்தியில் விகாஷ் பாஹல் இயக்கத்தில் டைகர் ஷெராஃப், அமிதாப் பச்சன், க்ரித்தி சனோன் நடித்திருக்கும் ‘கணபத்’ திரைப்படமும் அக்டோபர் 20ம் தேதி வெளியாகிறது.
நவம்பர் :
தீபாவளியை முன்னிட்டு தமிழில் ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் X ‘ ஆகிய இரண்டு படங்கள் களம் காண இருக்கின்றன. இந்த இரண்டு படங்களுமே தெலுங்கிலும் வெளியாகும். டோலிவுட்டில் பெரிய படங்கள் எதுவும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிவருவதாக இதுவரை தெரியவில்லை. ஒரு வேளை, அக்டோபரில் வெளியாக இருக்கும் தெலுங்கு படங்கள் ஏதாவது தீபாவளிக்குத் தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது.
இந்தியில் சல்மான் கான் நடிக்கும் ‘டைகர் 3’ திரைப்படம் வெளியாகிறது. ஷாருக் கானின் ‘ஃபேன்’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் மணீஷ் ஷர்மா இயக்கும் இந்தப் படம் யாஷ்ராஜ் ஃபிலிமிஸ் யுனிவர்ஸில் வருகிறது. ‘பதான்’ படத்தில் சல்மான் கேமியோவில் வந்தது போல, இந்தப் படத்தில் ஷாருக் கான் கேமியோவில் வர இருக்கிறார். அடுத்ததாக, கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து நீண்ட காலமாக வெளியாகாமல் இருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படம் நவம்பர் 24ம் தேதி வெளியாகிறது. அதே நாளில், கங்கனா ரணாவத் இயக்கி, நடிக்கும் இந்திரா காந்தி பயோபிக்கான ‘எமர்ஜென்ஸி’ படமும் வெளியாகிறது.
டிசம்பர் :
டிசம்பர் 1ம் தேதி ‘அர்ஜுன் ரெட்டி’ இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் ‘அனிமல்’ எனும் பாலிவுட் திரைப்படம் வெளியாகிறது. டோலிவுட்டில் டிசம்பர் 8ம் தேதி வருண் தேஜ், மனுஷி சில்லர் நடிக்கும் ‘Operation Valentine’ படமும் விஷ்வாக் சென் நடிக்கும் ‘Gangs of Godavari’ எனும் படமும் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். டிசம்பர் 15ம் தேதி அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ வெளியாகிறது. அதே நாள் இந்தியில் ‘அந்தாதுன்’ இயக்குநர் ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃப் நடிக்கும் ‘Merry Christmas’ ரிலீஸாக உள்ளது.
அடுத்ததாக, டிசம்பர் 22ம் தேதி. செப்டம்பர் 28ம் தேதி வெளியாவதாக இருந்த பிரபாஸின் ‘சலார்’ திரைப்படம் டிசம்பர் 22ம் தேதி வெளியாகிறது. அதே நாள், ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஷாருக் கான், டாப்ஸி நடிக்கும் ‘டங்கி’ திரைப்படமும் ஏற்கெனவே அறிவித்தபடி வெளியாகும் என்று கூறியிருக்கிறார்கள். தெலுங்கில் ‘Hit : The first case’, ‘Hit – The Second Case’ ஆகிய படங்களை இயக்கி கவனம்பெற்ற இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் வெங்கடேஷ், ஆர்யா, ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஆண்ட்ரியா, நவாஸுதின் சித்திக்கி ஆகியோர் நடித்து சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் ‘சைந்தவ்’ படம் வெளியாகும் என அறிவித்திருந்தனர். இது வெங்கடேஷின் 75வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, நானி, மிருணால் தாக்கூர் நடிப்பில் ‘ஹாய் நானா’ என்ற படமும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். நித்தின், ஶ்ரீலீலா நடிப்பில் ‘Extra Ordinary Man’ படமும் இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ‘சலார்’ வெளியாவதால் மற்ற மூன்று தெலுங்கு படங்களின் ரிலீஸ் தேதியில் நிச்சயமாக மாற்றம் இருக்கும்.
இதில் குறிப்பிட்டிருக்கும் படங்கள் எல்லாம் பெரிய படங்கள். இவை இல்லாமல், சின்ன பட்ஜெட்டில் உருவாகி பல படங்கள் நமக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கின்றன. அது போல, இந்த வருடத்தில் கடைசி மூன்று மாதங்களில் நமக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுக்க ஏதேனும் படங்கள் வருகிறதா என்று பார்ப்போம்.
இந்தப் படங்களில் நீங்கள் எதிர்பார்க்கும் படம் எது என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!
+ There are no comments
Add yours