சென்சார் போர்டு ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு விஷால் நன்றி | Vishal Thanks to PM Modi and MIB for taking action in CBFC issue

Estimated read time 1 min read

மும்பை: மும்பை சென்சார் போர்டு ஊழல் விவகாரம் தொடர்பான தனது புகாருக்கு உடனடியாக பதிலளித்த மத்திய அரசுக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “மும்பை சென்சார் போர்டு ஊழல் பிரச்சினை தொடர்பான இந்த முக்கியமான விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஊழலில் ஈடுபடும் அல்லது ஊழலின் ஒரு அங்கமாக இருக்கும் ஒவ்வொரு அரசாங்க அதிகாரிக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும், ஊழல் செய்யாமல், தேசத்திற்கு சேவை செய்ய நேர்மையான பாதையில் செல்வதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மீண்டும் ஒருமுறை என்னுடைய பிரதமர் மோடிக்கும் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் மற்றும் இந்த நடவடிக்கை மேற்கொண்ட அனைவருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன். ஊழலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற திருப்தியை இது என்னைப் போன்ற சாமானியர்களுக்கும் மற்றவர்களுக்கு தருகிறது. ஜெய்ஹிந்த்”. இவ்வாறு விஷால் தனது பதிவில் கூறியுள்ளார்.

முன்னதாக: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால் அண்மையில் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை தணிக்கை செய்ய சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும், அதை திரையிடலுக்கு ரூ.3.5 லட்சம் மற்றும் சென்சார் சான்றிதழுக்கு ரூ.3 லட்சம் என இரு தவணைகளாக ராஜன் என்பவரின் வங்கிக் கணக்கில் செலுத்தியதாகவும் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

விஷாலின் இந்தப் புகாருக்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இதில் யாரேனும் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதுகுறித்து விசாரிக்க தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இன்றே மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours