நடிகைகள் லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, சுபிக்ஷா எனப் பலர் இருந்தாலும் லட்சுமி மேனனின் கதாபாத்திரத்திற்கு மட்டுமே சற்று முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். மற்றவர்கள் படம் முழுக்கக் குடும்பத்தோடு குடும்பமாக அந்த பேய் பங்களாவுக்குள் இருக்கிறார்கள், அவ்வளவே! ராதிகா, சுரேஷ் சந்திர மேனன், ரவி மரியா, விக்னேஷ், அவர்களின் மனைவிகள், குடும்பங்கள், குழந்தைகள், வீட்டு வேலையாட்கள், சித்தர், சாமியார், பாம்பு எனக் காட்சிக்கு காட்சி அலுப்பு தட்டும் ஒரு லோடுக்கும் மேலான கதாபாத்திரங்கள் வேலையில்லாமலே வந்துபோகிறார்கள்.
பழைய சந்திரமுகி முருகேசனாக வரும் வடிவேலு ரகளையான மாடுலேஷன்கள் செய்தாலும், படமே மாடுலேஷன் மிஸ்ஸாகித் தவிப்பதால் கனெக்ட் ஆகவில்லை. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வந்த `கோவாலு!’ கேரக்டர், பேய் குறித்து லாரன்ஸ் – வடிவேலு பேசும் காட்சிகள் மட்டுமே ஆறுதல். சந்திரமுகி பட போஸ்டர், டிரெய்லர், டீசர், ட்விட்டர் என எங்கெங்கிலும் இருந்தார் கங்கனா ரணாவத். முதல் பாதி முழுக்கவே ‘கங்கனா எங்கண்ணா?’ என்று கேட்க வைத்து இரண்டாம் பாதியில் என்ட்ரி கொடுக்கும் அவருமே படத்தைக் காப்பாற்றவில்லை என்பதுதான் சோகம். சந்திரமுகியின் லுக்கிலிருந்து நடனம், நளினம், நடிப்பு என பல விஷயங்கள் கங்கனாவிற்கு ஒட்டவேயில்லை.
அதிலும் அவர் பயம் காட்டக் கொடுக்கும் சில முகபாவனைகளுக்கு தியேட்டரில் சிரிப்பு சத்தம்தான் கேட்கிறது. அதிலும் வேட்டையனையா, வேட்டை நாய்களையா யாரைப் பழிவாங்குவது என க்ளைமாக்ஸில் குழம்பிவிடுகிறார். பின்னணி இசை, `ஆஸ்கர் வாங்கிய கீரவாணியா இசையமைப்பாளர்?’ எனக் கேட்க வைக்கிறது. பாடல்களில் கிளாசிக் டச்சில் வரும் ‘ஸ்வாகதாஞ்சலி’யும், ‘ரா… ரா…’ பாடலின் ரீகிரியேஷனும் ரசிக்க வைக்கின்றன. படத்தின் ஓப்பனிங்கில் வரும் சண்டைக்காட்சியில் இருந்து ஆரம்பித்து க்ளைமேக்ஸில் நடக்கும் பூஜை வரைக்கும் பல சிஜி காட்சிகள் படத்திலிருந்தாலும், அவை அனைத்துமே படு சுமார் ரகம்! படத்தின் ஒரே ஆறுதலாக இருப்பது தோட்டா தரணியின் கலை இயக்கம்தான்.
+ There are no comments
Add yours