பாலாஜி சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவும், சுரேஷ் ஏ.பிரசாத்தின் படத்தொகுப்பும் பரபரப்பான இரண்டாம் பாதிக்குக் கைகொடுத்திருக்கின்றன. அதே சமயம் நிதானமாகக் கதைக்களத்தை விவரிக்கும் முதற்பாதிக்கும் ஏற்றவாறு இசைந்து, அதற்கும் உயிர்க்கொடுத்திருக்கின்றன. திபு நினன் தாமஸ் இசையில் யுகபாரதி வரிகளில் ஒலிக்கும் ‘கண்கள் ஏதோ’ பாடல் காதலைக் கடத்துவதோடு, நம்மை முணுமுணுக்கவும் வைக்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை உணர்வுகளின் ஆழத்தையும், பரபரப்பையும் கச்சிதமாகக் காட்சியாக்க உதவியிருக்கிறது. படத்தின் பிரதான கதாபாத்திரமாகவும் பின்னணி இசை பயணிக்கிறது.
பின்னணி இசைக்கு உறுதுணையாக ஒலியமைப்பாளர் வினோத் தணிகாச்சலம் தன் பணியினை சிறப்பாக செய்துள்ளார். மொத்தத்தில் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் தங்களுக்கான பணியை திறம்பட செய்துள்ளனர்.
காட்சி அமைப்பின் சூழலை உயிர்ப்போடு வைத்திருக்கும் யதார்த்ததன்மையை கலை இயக்குநர் சி.எஸ் பாலச்சந்தர் கலை இயக்கத்தில் சிறப்பாக கையாண்டுள்ளார். குறிப்பாக நகராட்சி அலுவலகம் மற்றும் மருத்துவமனை ஆகிய இடங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
தன் மேற்பார்வையில் பணி செய்யும் தூய்மைப் பணியாளரான தன் காதலியிடம் தன் காதலையும் குடும்பச் சூழலையும் சித்தார்த் விளக்கும் காட்சிகளும், தனக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமையை மனதிற்குள் மறைத்துக்கொண்டு நிமிஷா சஜயன் உடைந்து அழும் காட்சிகளும் எமோஷனலாக சரியாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. காவல்துறையின் விசாரணை தொடர்பான காட்சிகள் யதார்த்தமாக அதேநேரம் ஒரு பரபரப்பையும் கடத்துகின்றன. காவல்துறையும் சித்தார்த்தும் குற்றவாளியை நெருங்கும் ஷேர் ஆட்டோ காட்சித் தொகுப்பு ஒரு த்ரில்லர் படத்திற்குத் தேவையான பக்கவான காட்சியாக மாறியிருக்கிறது.
+ There are no comments
Add yours