“சிறந்த மனிதராக இருங்கள்” – தமிழ் நடிகர் துன்புறுத்தியதாக பரவிய வதந்திக்கு நித்யா மேனன் கண்டனம் | nithya menen denies about rumour on tamil actor harrasment

Estimated read time 1 min read

‘தமிழ் நடிகர் ஒருவர் தன்னை படப்பிடிப்பின்போது துன்புறுத்தியதாக’ வெளிவந்த செய்தியை நடிகை நித்யா மேனன் மறுத்துள்ளார்.

தமிழில், காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, 24, இருமுகன், மெர்சல், திருச்சிற்றம்பலம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், நித்யா மேனன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்து வரும் அவர், அக்‌ஷய்குமார் நடித்த ‘மிஷன் மங்கள்’ என்ற இந்திப் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது இந்திப் படம் ஒன்றில் கதாநாயகியாக அவர் அறிமுகமாகிறார். இந்தி இயக்குநர் விஷால் ரஞ்சன் மிஸ்ரா இயக்கும் ‘மர்டர் மிஸ்டரி’ படத்தில் அவர் நாயகியாக நடிக்கிறார்.

இதனிடையே, தெலுங்கில் அவரது நடிப்பில் ‘குமாரி ஸ்ரீமதி’ என்ற தொடர் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. இதற்கான புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் அவர் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ‘தமிழ் நடிகர் ஒருவர் தன்னை படப்பிடிப்பின்போது துன்புறுத்தியதாக’ கூறியதாக தகவல் பரவியது.

இந்த தகவலை மறுத்துள்ள நித்யா மேனன், “முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல் இது. இப்படி எந்த நேர்காணலும் நான் கொடுக்கவில்லை. இந்த போலிச் செய்தியைப் பரப்பியது யார் என்று அடையாளம் காட்ட உதவுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “மிக குறுகிய காலத்திற்குத்தான் நாம் அனைவரும் இங்கு இருக்கிறோம். அப்படியிருந்தும் நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு தவறு செய்கிறோம் என்பது எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. வெளியுலகுக்கு கூறுதல் மட்டுமே மோசமான நடத்தையை நிறுத்தும் என்பதால் இன்று இதை நான் சுட்டிக்காட்டுகிறேன். சிறந்த மனிதராக இருங்கள்” என்றும் நித்யா மேனன் பதிவிட்டுள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours