மீண்டும் வருகிறார் விஜயலட்சுமி : சீமான் தொடர்ந்த வழக்கில் ஆஜராக உத்தரவு
27 செப், 2023 – 10:49 IST
கடந்த சில வாரங்களாக நடிகை விஜயலட்சுமி, இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிவந்தார். வளசரவாக்கம் காவல் நிலையம், கமிஷனர் ஆபீசில் புகார் செய்தார். கடைசியில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் கொடுத்த 50 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு புகாரையும் திரும்ப பெற்று பெங்களூரு சென்றார். சில நாட்களுக்கு முன்பு சீமான் கட்சியினர் தொடர்ந்து டார்ச்சர் செய்வதால் நானும், எனது சகோதரியும் உண்ணாவிரதம் இருந்து சாகப்போகிறோம். எங்கள் சாவுக்கு சீமான்தான் பொறுப்பு என்று வீடியோ வெளியிட்டார்.
“விஜயலட்சுமி தனது புகார்களை வாபஸ் பெற்ற பிறகும் போலீசார் அந்த புகாரின் பேரில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தொடர்ந்து விசாரணையும் செய்து வருகிறார்கள். விஜயலட்சுமி தொடர்ந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்” என்று சீமான் உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் 2 பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. “இந்த வழக்கை வருகிற 29ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று விஜயலட்சுமி நேரில் ஆஜராக வேண்டும். அன்றே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இனி தமிழ்நாட்டு பக்கமே வரமாட்டேன் என்று கூறிச்சென்றவர், தற்கொலை செய்வதாக சொன்னவர் தற்போது மீண்டும் சென்னை வர இருக்கிறார். இந்த முறை முன்னைவிட வேகமாக சீமானுக்கு எதிராக நிற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“நீதிமன்றத்தில் ஆஜராகும் விஜயலட்சுமி தான் புகாரை வாபஸ் பெற்றதை ஒப்புக் கொண்டால் வழக்கு இத்துடன் முடிந்து விடும். என்னை மிரட்டி வாபஸ் பெறச் சொன்னார்கள், அதனால்தான் வாபஸ் பெற்றேன். என் புகார் உண்மையானது என்று அவர் சொன்னால் வழக்கு தொடர்ந்து நடக்கும். சீமான் மீது விஜயலட்சுமி கூறியுள்ள புகார்களுக்கு அவர் உரிய ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி தாக்கல் செய்யாவிட்டால் அடுத்து இரண்டொரு வாய்தாக்களுக்குள் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விடும்” என்று வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
+ There are no comments
Add yours