இந்தியத் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்தவர்களுக்கு வழங்கப்படுவது `தாதாசாகேப் பால்கே விருது’.
அவ்வகையில், இந்தியச் சினிமாவின் மிக உயரிய விருதான இது, இந்த ஆண்டு பழம்பெரும் நடிகையான வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.
இது பற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இந்தியத் திரையுலகில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக இந்த ஆண்டு மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்படுவதை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியையும் மரியாதையையும் உணர்கிறேன்.
வஹீதா ஜி இந்திப் படங்களில் நடித்ததற்காக விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுகளைப் பெற்றவர். ‘Pyaasa’, ‘Kaagaz ke Phool’, ‘Chaudhavi Ka Chand’, ‘Saheb Biwi Aur Ghulam’, ‘Guide’, ‘Khamoshi’ போன்ற பல இந்திப் படங்களில் அதற்குச் சான்று. ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது வாழ்க்கையில், அவர் தனது பாத்திரங்களை மிகவும் நேர்த்தியுடன் செய்துள்ளார். ‘ரேஷ்மா’ மற்றும் ‘ஷேரா’ திரைப்படத்தில் நடித்ததற்காகத் தேசியத் திரைப்பட விருதும் பெற்றவர். மேலும், பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருது பெற்ற வஹீதா ஜியின் அர்ப்பணிப்பு ஒரு பாரதப் பெண்ணின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது. அவர் தனது கடின உழைப்பால் இந்தத் துறையில் மிக உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார்” என்று பாராட்டியுள்ளார்.
யார் இந்த வஹீதா ரஹ்மான்?
எம்.ஜி.ஆர் தொடங்கி கமல்ஹாசன் வரை தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியா முழுவதும் பல மொழிகளில், பல படங்களில் நடன இயக்குநராகவும், பிரபல நடிகையாகவும் வலம் வருபவர் வஹீதா ரஹ்மான்.
85 வயதாகும் பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மான், தமிழ்நாடு, செங்கல்பட்டில் பிறந்தவர். நடனம் மற்றும் நடிப்பின் மீது பேரார்வம் கொண்ட இவர் முதன்முதலில் எம்.ஜி.ஆர் நடித்த ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தைத் தொடங்கியவர். இப்படம் 1956-ல் வெளியானது. ஆனால், தெலுங்கில் இவர் பணியாற்றிய அக்கினேனி நாகேஸ்வர ராவின் ‘Rojulu Marayi’ படம் இதற்கு முன்பே 1955-ம் ஆண்டில் வெளியாகிவிட்டது.
நடனக் கலைஞராகவும், சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்த இவர் அதன்பின் குரு தத் இயக்கிய ‘Pyaasa’ எனும் பாலிவுட் படம் மூலம் கதாநாயகியாக வலம் வரத் தொடங்குகிறார். இதைத்தொடர்ந்து பல இந்திப் படங்களில் நடித்துப் புகழையும், விருதுகளையும் குவித்தார். 1971ல் வெளியான ‘ரேஷ்மா அவுர் ஷெரா’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். மேலும், மத்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ’ மற்றும் ‘பத்ம பூஷண்’ விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்தது.
இந்தியில் ‘Pyaasa’, ‘Kaagaz ke Phool’, ‘Chaudhavi Ka Chand’, ‘Saheb Biwi Aur Ghulam’, ‘Guide’, ‘Khamoshi’ எனப் பல படங்களில் நடித்து இந்தியத் திரைத்துறை வரலாற்றில் நீங்கா இடத்தைப் பிடித்தார். தற்போது வயது மூப்பின் காரணமாகச் சமீப காலமாகப் பெரிதாகப் படங்களில் ஏதும் நடிக்காமல் ஓய்வில் இருக்கிறார்.
சமீபத்தில் தமிழில் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்திருந்தார். இந்நிலையில் தற்போது சினிவாவிற்கு இவர் செய்த அர்ப்பணிப்பைக் கௌரவிக்கும் விதமாக இந்தியச் சினிமாவின் மிக உயரிய விருதான ‘தாதாசாகேப் பால்கே விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது மத்திய அரசு.
+ There are no comments
Add yours