ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள படம் இறைவன்.
இப்படத்தை வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கி இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியும் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, “ நான் அஹமத் சார் கூட சேர்ந்து வேலை செய்தது இல்லை. இரண்டு மூன்று முறை மட்டுமே அவரை சந்தித்திருக்கிறேன். ரொம்ப தன்மையான மனிதர். அவர் படத்திற்கு வைக்கின்ற டைட்டில் எல்லாமே பிரமாதமாக இருக்கும். வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் என்று படத்திற்கு இவர் வைக்கின்ற டைட்டில் எல்லாமே நன்றாக இருக்கிறது. இப்போது இந்த இறைவன் என்ற டைட்டிலும் எனக்குப் பிடித்திருக்கிறது. இறைவன் என்று சொன்னாலே எல்லோருக்கும் ஒரு சாந்தமான, நம்பிக்கையான விஷயங்களை தரக்கூடிய வார்த்தை.
அந்த வார்த்தையை வைத்தே எல்லோரையும் பயமுறுத்திருக்காரு. இவர்கூட பழகும்போது கொஞ்சம் ஜாக்கிரதையா பழகுங்க. இறைவன் என்று டைட்டில் வைத்துவிட்டு ரொம்ப சைக்கோ மாதிரியான கதாபாத்திரம் கொண்ட ஒரு படத்தை எடுத்திருக்கிறார். இந்த படத்தின் புட்டேஜ் எல்லாம் பயமுறுத்துகிற மாதிரி இருக்கின்றது. ஆனால் படம் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறினார்.
பிறகு ஜெயம் ரவி பற்றி பேசிய அவர், ” நான் சினிமாவுக்கு வர வேண்டும் என்று நினைத்து முயற்சி செய்துக் கொண்டிருக்கும்போது என்னுடைய இரண்டாவது படத்திற்காக மோகன் ராஜா சாருடைய ஆபிஸிற்கு சென்றேன். அப்போது அங்குபோய் என்னுடைய போட்டோவை கொடுக்கும்போது ஜெயம் ரவி சாரை பார்த்தேன். அங்கு நான் பார்த்த முதல் நடிகர் அவர்தான். என்னுடைய முதல் படத்திற்கு 250 ரூபாய் கொடுத்தார்கள்.
ஆனால் என்னுடைய இந்த இரண்டாவது படத்திற்கு 400 ரூபாய் கொடுத்தார்கள். அது எனக்கு மிகப்பெரிய இன்கிரிமன்ட் மாதிரி இருந்தது. இந்த படம் பண்ணும்போது ஜிம்பாய் ரோலில் நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஏதோ மிகப்பெரிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது என்று நினைத்தேன். எம்.குமரன் படத்தில் நதியா மேம்-ஐ வைத்து ஒரு மாஸான டைலாக் பேசி இன்ரோடக்ஷன் ஷாட் எடுக்கும்போது ஜெயம் ரவி மேலே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அதை கீழே நின்று நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பார்த்த முதல் ஹீரோ ஜெயம் ரவிதான். ரொம்ப நல்ல மனிதர். போகன் படத்தில் அவருடன் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. ஆனால் டேட் பிரச்சனையின் காரணமாக என்னால் நடிக்க முடியவில்லை. இனிமேல் வாய்ப்புகள் வந்தால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துகள் சார்” என்று நினைவுகளையும் பகிர்ந்து பேசியிருந்தார்.
+ There are no comments
Add yours