தடைகளை உடைத்தெறிந்து முன்னேறுவேன்: விஷால்
23 செப், 2023 – 13:31 IST
மினி ஸ்டுடியோ சார்பில் வினோத் குமார் தயாரிப்பில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி ‘மார்க் ஆண்டனி’ படம் வெளியானது. விஷால் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை ஆதித் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். எஸ்.ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரித்து வர்மா, அபிநயா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். டைம் டிராவலை மையப்படுத்தி உருவான இந்த படம் 100 கோடி வசூலில் இணைய உள்ளது. இதற்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் விஷால் பேசியதாவது: இயக்குநர்கள் லிங்குசாமி, பாலா, சுசீந்திரன், மித்ரன் என என்னை வித்தியாசமாக காட்டிய இயக்குநர்கள் போலவே ஆதிக் சொன்ன இந்த கதையும் வித்தியசமாக இருந்ததும் உடனே ஒப்புக்கொண்டேன். என்னிடம் ஏன் ஆதிக்கை தேர்ந்தெடுத்தீர்கள் என்று பலரும் கேட்டனர். இப்போது அவர்கள் எல்லாம் படம் பார்த்துவிட்டு என்னிடமே ஆதிக் பற்றி பாராட்டி வருகிறார்கள் அனேகமாக ஆதிக்கிடம் அடுத்ததாக தேதி கேட்டு வந்து நிற்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
எஸ்.ஜே சூர்யா, சுனில் என இரண்டு அண்ணன்கள் இந்த படத்தின் மூலம் எனக்கு கிடைத்துள்ளனர். ஒரு வசனத்தை இப்படி எல்லாம் கூட பேசலாமா என்கிற வித்தையை எஸ்.ஜே சூர்யாவிடம் இருந்து இலவசமாக கற்றுக் கொண்டேன். நடிகர் சுனிலைப் பொறுத்தவரை அவர் ஒரு டாக்டர் என்று சொல்லலாம். மன அழுத்தம் உள்ளவர்கள் கவுண்டமணி, வடிவேலு படத்தின் நகைச்சுவை காட்சிகளை பார்த்து ரிலாக்ஸ் ஆவது போல சுனிலின் காமெடிகளை பார்க்கும்போதும் அதே அளவுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுபடுவார்கள். என் கட்டை வேகுவதற்குள் எப்படியாவது சில்க்குடன் நடிக்க வேண்டும் என ஆவலாக இருந்தேன். அதை இந்த படத்தில் ஆதித் நிறைவேற்றி விட்டார்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருப்பதை பார்க்கும்போது கடவுள் என்னிடம் உனக்கான நேரம் 2012ல் அல்ல 2023ல் தான் இருக்கிறது என்று சொன்னதைப் போல உணர்கிறேன். நான் செல்லும் பாதையில் பலமுறை ஒவ்வொரு தடையாக வந்து விழுகிறது. அது நேர்மையாக இருந்தால் ஓகே. ஆனால் தவறாக இருந்தால் அதை ஒவ்வொரு முறையும் உடைத்தெறிந்து முன்னேறுவேன். இந்தப் படம் 16 வருடம் கழித்து எனக்கு கிடைத்த வெற்றி. வழக்கம்போல இந்தப் படத்திற்கு எந்த அளவிற்கு டிக்கெட்டுகள் விற்பனை ஆகி உள்ளதோ, அதில் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஒரு ரூபாயை விவசாயிகளுக்கு பயன்படுத்த போகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
+ There are no comments
Add yours