ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனம் தயாரிக்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் கிழக்கு வாசல்.
முதலில் ஹீரோவாக நடிகர் சஞ்சீவைக் கமிட் செய்து பூஜை போடப்பட்ட நிலையில் என்ன நடந்ததோ அவர் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்து வரும் வெங்கட்டை ஹீரோவாக்கினார்கள். வெங்கட்டுக்கு ஜோடியாக ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிய ஹிட் சீரியலான ‘பூவே பூச்சூடவா’ தொடரில் நடித்த நடிகை ரேஷ்மா கமிட் செய்யப்பட்டார்.
இவர்களுடன் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் முதல் முறையாக சீரியல் பக்கம் வந்து இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆனார். கதை நடிகர் விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் கதையைத் தழுவியதாக இருக்குமெனச் சொல்லப்பட்டது. தொடரின் ஆரம்ப எபிசோடுகளை இயக்கினார் இயக்குநர் மனோஜ். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சன் டிவியில் சீரியல் தயாரித்து வந்த ராதிகா அங்கிருந்து வெளியேறி விஜய் டிவிக்கு வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் ஒளிபரப்பாகத் தொடங்கியது சீரியல்.
மேற்சொன்ன கதாபாத்திரங்களுடன் ரேஷ்மாவுடன் பூவே பூச்சூடவா தொடரில் ஹீரோவாக நடித்த தினேஷ், நடிகர் அருண் உள்ளிட்ட மற்ற சில நட்சத்திரங்களும் நடித்து வந்தனர். தொடர் தொடங்கி சில வாரங்கள் கடந்தும் என்ன காரணமெனத் தெரியவில்லை, எதிர்பார்த்த ரேட்டிங் கிடைக்கவில்லை. இதனால் ஓரிரு வாரங்களிலேயே இயக்குநர் மாற்றப்பட்டார். மனோஜுக்குப் பதில் இப்போது நீராவிப் பாண்டியன் தொடரை இயக்கத் தொடங்கியிருக்கிறார்.
இந்தச் சூழலில் தான் அக்டோபரிலிருந்து விஜய் டிவியின் ஹிட் ஷோவான பிக் பாஸ் சீசன் 7 தொடங்க இருக்கிறது. இதனால் சில சீரியல்களின் ஒளிபரப்பு நேரங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். பலரும் எதிர்பார்த்தது போலவே ‘கிழக்கு வாசல்’ தொடரின் நேரமும் மாறியிருக்கிறது. இதுவரை ஒளிபரப்பாகி வந்த இரவு பத்து மணிக்கு பதிலாக மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
ராடான் சீரியல்கள் என்றாலே பிரைம் டைமில் ஹிட் அடிப்பவை என்பதுதான் கடந்த கால வரலாறாக இருக்கும் நிலையில் ராதிகாவை இந்த இட மாற்றம் அப்செட் ஆக்கலாமெனப் பேசப் பட்ட நிலையில், ராடான் தரப்பிலிருந்து இதுவரை கருத்து எதுவும் வந்தது போல் தெரியவில்லை. மாறாக வழக்கம் போல் ஷூட் போய்க் கொண்டிருக்கிறது. தொடரில் நடிக்கும் சில நடிகர் நடிகைகள்தான் இந்த மாற்றத்தால் ரொம்பவே அப்செட் ஆகியிருக்கிறார்கள் என்கிறார்கள்.
தொடர்புடைய சிலரிடம் பேசிய போது, “ரேஷ்மா ஆயிரம் எபிசோடுகள் தொட்ட ஒரு சீரியல்ல இருந்து வந்தாங்க. வெங்கட்டுமே ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நாலு அண்ணன் தம்பிகள்ல ஒருவரா வந்திட்டிருந்த நிலையில் இந்த சீரியல்ல ஹீரோவாக் கமிட் ஆனார். பிரைம் டைம்ல இருந்து மாறியதுல இவங்க ரெண்டு பேருமே ரொம்ப அப்செட். நடிகர் தினேஷுமே ஒரு இடைவெளிக்குப் பிறகு சமீபமாத்தான் வரிசையா சீரியல்கள்ல கமிட் ஆகி வந்தார். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு அவரும் போகலாம்னு செய்திகள் அடிபட்ட நிலையில் இந்த சீரியல்ல கமிட் ஆனார். இப்ப இந்த டைம் சேஞ்ச் அவருக்குமே அதிருப்தியை உண்டாக்கியிருக்கு.
எஸ்.ஏ.சந்திரசேகருமே முதல் தடவை டிவிக்கு வந்திருக்கிறார். ’ஏம்ப்பா. நாலு மணிக்கு வீடுகள்ல யாராவது டிவியை உட்கார்ந்து பார்த்திட்டிருப்பாங்களா என்ன,’ எனக் கேட்டிருக்கிறார். எனவே அவருக்குமே மனவருத்தம்னுதான் சொல்றாங்க. தொடரிலிருந்து அவர் வெளியேறி விடுவாரோங்கிற ஒரு எண்ணமும் சிலரிடம் இருக்கு. தயாரிப்புத் தரப்பு எப்படியோ இந்த நேர மாற்றத்துல சமாதானம் ஆகிடுச்சு.
இயக்குநருக்கு பிரைம் டைம்ல புதுசா ஒரு சீரியல் தர்றதாச் சொல்லியிருக்காங்கன்னு தெரியுது. ஆக மொத்தத்துல இதுல பாதிக்கப்பட்டது யாருன்னா ஆர்ட்டிஸ்டுகள்தான்’’ என்றார்கள் அவர்கள். நான்கு மணி ஸ்லாட்டில் கிழக்கு வாசல் பிக் அப் ஆகுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
+ There are no comments
Add yours