இசை கலைஞர்கள் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை
23 செப், 2023 – 13:16 IST

தென்னிந்திய திரைப்பட இசை அமைப்பாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. வடபழனியில் அலுவலகத்தை கொண்ட இந்த சங்கத்திற்கு தலைவராக தற்போது இசை அமைப்பாளர் தினா இருக்கிறார். சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் நாளை (24ம் தேதி) நடப்பதாக இருந்தது.
இந்த நிலையில் இந்த தேர்தலுக்கு தடை கேட்டு இசை அமைப்பாளர் எம்.சி.சபேஷன்(சபேஷ்&முரளி) சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் ‘சங்கத்தின் விதிகளுக்கு எதிராகவும், சங்கத்தின் நிரந்தர மற்றும் ஆயுட்கால உறுப்பினர்களின் அனுமதியை பெறாமலும், முறைகேடான முறையில், தற்காலிக மற்றும் இணை உறுப்பினர்கள் வாக்களிக்கலாம் என்று உறுப்பினர்களின் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தகுதியற்ற நபர்களை உறுப்பினர்களாகவும் சேர்க்கப்பட்டுள்ளது. சங்கத்தின் வரவு – செலவு கணக்கையும் முறையாக தாக்கல் செய்யவில்லை. எனவே, இந்த தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் மனுதாரின் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதால் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
+ There are no comments
Add yours