நீதிமன்றத்தை விட மேலானவராக எண்ண வேண்டாம்: நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு | Don’t consider yourself above the court: High court insists actor Vishal

Estimated read time 1 min read

சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ‘விஷால் தன்னை நீதிமன்றத்தைவிட பெரிய ஆளாக எண்ண வேண்டாம். நீதிமன்றத்தைப் பொறுத்தவரை அனைவரும் சமமாகவே கருதப்படுவார்கள்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்துக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ.15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விஷாலின் நான்கு வங்கிக் கணக்குகளின் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரைக்குமான கணக்கு விவரங்களையும், விஷாலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்கள், அவை எப்போது வாங்கப்பட்டன என்பதை சொத்து ஆவணங்களுடன் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணையின்போது, நடிகர் விஷால் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. அதேசமயம், நான்கு வங்கி கணக்குகளின் விவரங்கள் மற்றும் அசையும் மற்றும் அசையா சொத்த்தின் விவரங்களின் ஆவணங்களை விஷால் தரப்பில் தாக்கல் செய்யாததால் நடிகர் விஷால் வரும் 22-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி பி.டி.ஆஷா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஷால் ஆஜராகி இருந்தார். அப்போது நீதிபதி, நீதிமன்ற உத்தரவின்படி ஆவணங்களை தாக்கல் செய்யாததால், விஷால் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என கேள்வி எழுப்பினார். விஷால் தன்னை நீதிமன்றத்தைவிட பெரிய ஆளாக எண்ண வேண்டாம். நீதிமன்றத்தைப் பொறுத்தவரை அனைவரும் சமமாகவே கருதப்படுவார்கள் என்று நீதிபதி கூறினார்.

அப்போது விஷால் தரப்பில், “வங்கியிலிருந்து ஆவணங்களை பெற தாமதம் ஆகிவிட்டது. இதனால் நீதிமன்றம் கேட்ட ஆவணங்கள் நேற்று ஆன்லைன் வாயிலாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஆன்லைனில் ஆவணங்கள் தாக்கல் செய்தது உறுதியாகாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதிபதி எச்சரித்தார்.

அப்போது விஷால் தரப்பில், 3 கார்கள், ஒரு பைக் இருப்பதாகவும், இரண்டு வங்கி கணக்குகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. விஷாலுக்கு சொந்தமான வீட்டின் கடன் தொடர்பான விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 75 வயதான தந்தையின் கிரானைட் தொழில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தின் காரணமான அவரது வீட்டுக் கடனையயும் விஷால் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான விவரங்களை தாக்கல் செய்ய 6 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என கேட்கப்பட்டது. மேலும், அடுத்த 28 நாட்களுக்கு படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள இருப்பதால், அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வங்கிகளிலிருந்து கூடுதல் ஆவணங்களை பெறவும், நீதிமன்றம் கேட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்த விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி உத்தரவிட்டு விசாரணையை செப்.25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், அடுத்த விசாரணையின்போது விஷால் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டுள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours