அஜித் பட இயக்குநருடன் இணையும் சல்மான் கான்; 25 வருடங்களுக்குப் பிறகு கரண் ஜோஹருடனும் கூட்டணி!

Estimated read time 1 min read

2018ல் ஷாருக்கான் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட `ஜீரோ’ படம் படுதோல்வியைச் சந்தித்தது. அதனால், மிகவும் வருத்தமடைந்த ஷாருக், அடுத்து சில வருடங்கள் படங்கள் எதுவும் நடிக்காமல் கதைகள் மட்டும் கேட்டு வந்தார். காரணம், ஷாருக்கானுக்குத் தேவை ஒரு ஹிட்டோ, சூப்பர் ஹிட்டோ அல்ல; பிளாக்பஸ்டர். அவரின் கணக்குத் தப்பவில்லை. ஐந்து வருடங்கள் கழித்து, இந்த ஆண்டு ஷாருக்கின் படங்கள் வெளியாகின்றன. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் `பதான்’, அட்லி இயக்கத்தில் `ஜவான்’. இரண்டுமே இந்த ஆண்டு பாலிவுட் உலகின் சென்சேஷனல் பிளாக்பஸ்டர்கள்!

என்னடா சல்மான் கானைப் பத்தி தலைப்பு இருக்கு. உள்ள ஷாருக்கான் பத்தி இருக்குன்னு நினைக்க வேண்டாம்… ஷாருக்கானிற்குக் கிடைத்த இந்த பிரமாண்ட வெற்றியைப் போல தனக்கும் அமைய வேண்டும் எனக் காத்துக்கொண்டிருக்கிறார் அவரது நண்பர் சல்மான் கான். காரணம், சல்மான் கான் நடித்த சமீபத்திய படங்கள் எதுவும் பெரிதாக வொர்க் அவுட்டாகவில்லை. முன்புபோல அவரின் ஆக்ஷன் பார்முலா இப்போது வேலை செய்வதில்லை. எனவே கட்டாய வெற்றி தேவை என்ற நிலையில் அவருமே இருக்கிறார்.

ஷாருக் கான் – சல்மான் கான்

அடுத்ததாக, அவரது நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘டைகர் 3’. இது யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸில் வருகிறது. ‘பதான்’ படத்தில் சல்மான் கான் கேமியோவில் வந்தது போல, ‘டைகர் 3’ படத்தில் கேமியோவில் வரவிருக்கிறார் ஷாருக். இதனைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தையும் முடிவு செய்துவிட்டார் சல்மான் கான். 

கரண் ஜோஹர் அந்தப் புதுப்படத்தைத் தனது தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பாகத் தயாரிக்க இருக்கிறார். 1998ல் கரண் ஜோஹர் தயாரித்து இயக்கி ஷாருக்கான், கஜோல், ராணி முகர்ஜி நடிப்பில் வெளியான ‘குச் குச் ஹோத்தா ஹை’ படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பார் சல்மான். அதற்குப் பிறகு, இதுவரை தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் சல்மான் கானும் இணையவில்லை.

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு, சல்மான் கான் – கரண் ஜோஹர் கூட்டணி இணையும் படத்தைத் தமிழ் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்குகிறார். கரண் ஜோஹர் தயாரிப்பில் ஏற்கெனவே, ‘ஷெர்ஷா’ (Shershah) எனும் வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்கிறார் விஷ்ணுவர்தன். அந்தப் படத்திற்கு 2021ம் ஆண்டிற்கான தேசிய விருது பட்டியலில் ‘ஸ்பெஷல் ஜூரி விருது’ அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது, மீண்டும் அதே நிறுவனத்தில் படம் இயக்குகிறார், விஷ்ணுவர்தன். இந்த முறை நாயகன் சல்மான் கான்!

நடிகர் அஜித்துடன் இயக்குநர் விஷ்ணுவர்தன்

அவருக்கு ஜோடியாக த்ரிஷா அல்லது சமந்தா ஆகியோர் நடிக்கப் பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. த்ரிஷா இந்தப் படத்தில் நடித்தால், ‘கட்டா மீட்டா’ படத்திற்குப் பிறகு, அவர் நடிக்கும் பாலிவுட் படமாக இது இருக்கும். சமந்தா இதுவரை நேரடி பாலிவுட் படத்தில் நடித்ததில்லை. ‘ஏக் தீவானா தா’ படத்தில் கேமியோவிலும் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கானுக்கு அட்லி கொடுத்த வெற்றியைப் போல, சல்மான் கானுக்கு விஷ்ணுவர்தன் கொடுத்து பாலிவுட்டைச் சிறப்பாக்குவார் என நிச்சயம் எதிர்பார்க்கலாம். பாலிவுட்டுக்கும் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களுக்கும் தேவைப்படும் அத்தியாவசிய வெற்றியைத் தமிழ் இயக்குநர்கள் கொடுப்பது என்பது மகிழ்ச்சியான ஒன்று.

ஆல் தி பெஸ்ட் விஷ்ணுவர்தன்!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours