பாரதி கண்ணம்மா: முதல் படத்திலேயே சாதிக்கு எதிராகக் குரல் கொடுத்த சேரன்; அதிலும் அந்த க்ளைமாக்ஸ்!

Estimated read time 1 min read

தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் சாதியை எதிர்த்து குரல் தந்து கொண்டே இருக்கிறது. சமூக அக்கறையுள்ள இயக்குநர்கள் இதைத் தொடர்ந்து செய்கிறார்கள். இந்த வரிசையில் சேரனும் ஒரு முக்கியமான இயக்குநர். அவர் இயக்கிய முதல் திரைப்படமே சாதியப் பிரச்னை குறித்துத்தான். சாதி குறித்து உரையாடும் தமிழ்த் திரைப்படங்களைப் பற்றிப் பேசும் போது ‘பாரதி கண்ணம்மா’வைத் தவிர்த்து விட்டுப் பேசவே முடியாது. அப்படியொரு அழுத்தமான திரைப்படத்தைத் தந்த சேரன், தொடர்ந்து ஆரோக்கியமான படங்களைப் பிடிவாதத்துடன் தருவது பாராட்டுக்குரியது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞனை, முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் காதலிக்கும் வழக்கமான ‘டெம்ப்ளேட்’ கதையை வித்தியாசமாக்கியிருப்பது சேரனின் திரைக்கதைதான். குறிப்பாக அந்த அட்டகாசமான ‘க்ளைமாக்ஸ்’. தனது க்ளைமாக்ஸைப் பிடிவாதமாக வைத்ததற்குப் பின்னால் பல போராட்டங்களை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. அதைப் பற்றி பின்னால் பார்ப்போம்.

பாரதி கண்ணம்மா

பொதுவாக இம்மாதிரியான சாதியம் சார்ந்த காதல் திரைப்படங்களில் அதன் பின்விளைவுகளைப் பற்றி காதலர்கள் நிச்சயம் யோசிக்க மாட்டார்கள். குறிப்பாகச் சாதிய வெறி பிடித்த அப்பாவைப் பற்றி நன்கு தெரிந்த நாயகி கூட அதன் தொடர் விளைவுகளைப் பற்றி யோசிக்க முடியாமல் காதல் கண்ணை மறைத்து விடும். \ஆனால் இதில் வரும் ஹீரோ தன்னுடைய காதலை மறைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், இந்தக் காதல் வெளிப்பட்டால் நிகழவிருக்கும் பின்விளைவுகளைப் பற்றிக் கவலை கொள்வான். அது பற்றி நாயகியிடம் எச்சரித்துக் கொண்டே இருப்பான். இவர்கள் காதலிப்பது பார்வையாளர்களுக்குத் தெரியும். ஆனால் படத்தினுள் இருக்கிற பாத்திரங்களுக்குத் தெரியாது. இப்படித் தொடரும் கண்ணாமூச்சி ஆட்டத்தையும் அட்டகாசமான க்ளைமாக்ஸ் காட்சியையும் வைத்துக் கொண்டு அழகானதொரு படத்தைத் தந்திருக்கிறார் சேரன்.

பாரதியும் கண்ணம்மாவும், தடையாக இருக்கும் சாதியும்

தேவர் பாளையத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்கிற பெரியவர் முடிவெட்டிக் கொள்ளுதல், செருப்பு தைத்தல், துணி துவைத்தல் போன்ற பணிகளைத் தனக்குத்தானே செய்து கொள்கிறார். சம்பந்தப்பட்ட சமூகத்தினருக்குச் சேர வேண்டிய கூலியை அனுப்பிவிடுகிறார். ஒரு நாள் அவர் ரயில் நிலையத்திற்குக் கிளம்பிச் சென்று அங்கு யாருக்காகவோ காத்திருக்கிறார். அவர் யார், எதற்காகக் காத்திருக்கிறார் என்பது ஃபிளாஷ்பேக் காட்சிகளாக விரிகிறது.

வெள்ளைச்சாமி தேவர் அந்த ஊரின் அம்பலகாரர். பிரச்னைகளை அம்பலப்படுத்தி கூட்டத்தில் விவாதித்துத் தீர்வு சொல்லும் ஊர்த்தலைவருக்கு ‘அம்பலகாரர்’ என்கிற பட்டம் உண்டு. வெள்ளைச்சாமி தனது சாதி குறித்த மிகையான பெருமிதம் கொண்டவர். ஆனால் இன்னொரு பக்கம் தவறு செய்தது தன்னுடைய சாதியைச் சேர்ந்த ஆசாமி என்றாலும் சரியான தீர்ப்பு சொல்லுமளவிற்கு நேர்மையானவர். தன்னை அண்டியிருக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு ஆதரவாக இருப்பவர். என்றாலும் சாதி என்று வந்துவிட்டால் அதற்கே முன்னுரிமை கொடுப்பதுதான் இவரது வழக்கம். வெள்ளைச்சாமிக்கு ஒரே மகள் கண்ணம்மா. அழகி. கல்வியைத் தொடர விரும்பாமல் வீட்டில் இருக்கிறாள்.

பாரதி கண்ணம்மா

வெள்ளைச்சாமி வீட்டின் விசுவாசமான வேலைக்காரர் பாரதி. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞன். முதலாளியின் குடும்பத்தின் மீது பாசம் கொண்டு மிக உரிமையாகப் பல பணிகளைச் செய்பவன் என்பதால் பாரதி மீது வெள்ளைச்சாமிக்குப் பிரியம் உண்டு. பாரதியின் மீதுள்ள காதலை கண்ணம்மா ஒருநாள் வெளிப்படுத்த, பாரதி அதிர்ச்சியடைகிறான். ‘இது சரி வராது’ என்று விதம் விதமாகப் புத்தி சொல்கிறான். இதற்கு முன் நடந்த சம்பவங்கள்தான் அதற்குக் காரணம். முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்ட சமயத்தில் வெள்ளைச்சாமி ஆக்ரோஷமாக அதை எதிர்த்திருக்கிறார். இழுத்துச் சென்றவனை அடித்து உதைத்திருக்கிறார். அவர்களைப் பிரித்து விட்டிருக்கிறார். அது மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒட்டுமொத்தமாக அடித்து உதைத்து, ஊரை விட்டே துரத்தவும் முடிவு செய்திருக்கிறார்.

அடிப்படையில் வெள்ளைச்சாமி நல்லவர்தான் என்றாலும் அவரிடமிருக்கும் மூர்க்கமான சாதிவெறி மற்றும் அதன் பின்விளைவுகளை எண்ணி பாரதி இந்தக் காதலைத் தொடர்ந்து மறுக்கிறான். ஆனால் கண்ணம்மாவோ “உன்னை மனதில் சுமந்து கொண்டு வேறு எவருடனும் என்னால் பொய்யாக வாழ முடியாது. அதற்குப் பதில் செத்து விடுவேன்” என்று கூறுகிறாள். கண்ணம்மாவின் காதல் பாரதிக்குப் புரிந்தாலும் நடைமுறைச் சிக்கல் காரணமாக பாரதி தொடர்ந்து மறுக்கிறான்.

இறுதியில் என்னவானது? எவருமே எதிர்பார்க்க முடியாத அந்த `க்ளைமாக்ஸ் காட்சியுடன்’ படம் நிறைந்து பார்வையாளர்களைத் திகைக்க வைக்கிறது. அந்த உச்சக்காட்சிதான் சாதி வெறி பிடித்த வெள்ளைச்சாமியின் மனதை அடியோடு மாற்றுகிறது. தனது சாதிய மூர்க்கத்தை விட்டு விட்டு அனைத்து சமூக மக்களுடன் இணக்கத்தோடு பழகத் தொடங்கும் நேர்மறையான மாற்றத்தோடு படம் நிறைகிறது.

பாரதி கண்ணம்மா

எப்படி உருவானது ‘பாரதி கண்ணம்மா?’

கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக இருந்த சேரன், இயக்குநராக முடிவு செய்த பின் வெளியே வந்து சில வணிகரீதியான திரைக்கதைகளை உருவாக்கி தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்க, ஹென்றி மட்டும் ‘ரொம்ப கமர்ஷியலா இருக்கு. வித்தியாசமான சப்ஜெக்ட் இருந்தா சொல்லுங்க’ என்று சொன்னவுடன் சேரனுக்கு ஒத்த அலைவரிசையில் இருப்பவரைப் பார்த்த நிம்மதி ஏற்பட்டது. “எனக்கு அப்படிப்பட்ட படங்களைத்தான் இயக்க விருப்பம்” என்று சொன்ன சேரன், “நான் ஒரு க்ளைமாக்ஸ் சொல்றேன். அதை வெச்சுதான் படமே” என்று இதன் திரைக்கதையைச் சொல்ல ஹென்றிக்கு மிகவும் பிடித்துப் போக, படப்பிடிப்பு வேலைகள் உடனே ஆரம்பித்தன. சேரனின் திரைக்கதை திறமையின் காரணமாக உடனே க்ரீன்சிக்னல் கிடைத்தாலும் அறிமுக இயக்குநர் என்பதால் நடைமுறையில் பல சமரசங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

“வெள்ளைச்சாமிதான் இந்தப் படத்தின் ஹீரோ. அவருடைய மனமாற்றம்தான் படத்தின் மையம்” என்பதாகத் திரைக்கதையை எழுதியிருந்த சேரன், காதலர்களாக இளம் நடிகர்களை யோசித்து வைத்திருந்தார். ஆனால் படத்தை மார்க்கெட் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக நடிகர் கார்த்திக் இந்தப் படத்திற்குள் வந்தார். கார்த்திக் திறமையான நடிகர்தான். ஆனால் சேரன் கற்பனை செய்து வைத்திருந்த தோற்றத்திற்குள் கார்த்திக் பொருந்தவில்லை. கறுத்த, திடகாத்திரமான ஒரு இளைஞனை சேரன் மனதில் உருவாக்கி வைத்திருந்தார். என்றாலும் கால்ஷீட் பிரச்னை காரணமாக கார்த்திக்கின் தேதி கிடைக்காததால் இந்தப் பிரச்னை தன்னாலேயே தீர்ந்தது.

கார்த்திக்கிற்குப் பதிலாக பார்த்திபனைப் பரிந்துரைத்தார் தயாரிப்பாளர். தோற்றப் பொருத்தம் ஓகேதான் என்றாலும் சேரனின் கற்பனையிலிருந்த இளைஞனை விடவும் பார்த்திபன் சற்று முதிர்ச்சியான தோற்றத்திலிருந்தார். எனவே அதற்கேற்ற பொருத்தமான நாயகியாக மீனா உள்ளே வந்தார். அடுத்ததாக சேரன் எதிர்கொண்டது படப்பிடிப்பு நடக்குமிடம். செம்மண் பூமியின் பின்னணியில் சிவகங்கையில் காட்சிகளை உருவாக்கலாம் என்று சேரன் நினைத்திருக்க, அங்குத் தங்குமிடம் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்ததால் ஏராளமான சினிமா படப்பிடிப்புகள் நடக்குமிடமான கோபிச்செட்டிப் பாளையத்தைத் தயாரிப்பு நிர்வாகம் பரிந்துரைத்தது. வேறு வழியில்லை, கிடைத்ததை வைத்து நாம் நினைத்ததைக் கொண்டு வர முயற்சி செய்வோம் என்று ஆறுதல் படுத்திக் கொண்ட சேரன், தன்னுடைய கற்பனைக்குப் பொருத்தமான வகையில் பின்னணிகளை இயன்ற வரையில் மாற்றம் செய்தார். ஒளிப்பதிவாளர் கிச்சாவுடன் ஆரம்பத்தில் கருத்து வேறுபாடுகள் வந்து, பிறகு இயக்குநரின் மனவோட்டத்தை ஒளிப்பதிவாளர் புரிந்துகொண்டார்.

சேரன்

‘க்ளைமாக்ஸ்’ காட்சிக்காகப் போராடிய சேரன்

ஆனால் சேரன் எதிர்கொண்ட மிகப்பெரிய பிரச்னை க்ளைமாக்ஸ் தொடர்பானது. பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் காதல் தொடர்பாக நீண்ட இழுபறியே நடக்கும். தனது காதலை விதம் விதமாக கண்ணம்மா தெரிவிக்க, நடைமுறையில் அது எப்படியெல்லாம் சாத்தியமில்லை என்று மறுத்துக் கொண்டேயிருப்பான் பாரதி. இவர்களுக்கு இடையே மட்டும் நிகழும் இந்த நீண்ட மௌன நாடகம் உச்சக்கட்ட காட்சியில்தான் பெருவெடிப்போடு உடைபடும். எனவே வசனமே இல்லாமல் க்ளைமாக்ஸ் காட்சியை அமைத்திருந்தார் சேரன். ஆனால் ஹீரோ சில ஆவேசமான வசனங்களைப் பேசி விட்ட பிறகுத் தனது நோக்கத்தைச் செயல்படுத்தினால்தான் உச்சக்காட்சி அழுத்தமாகவும் தெளிவாகவும் இருக்கும் என்பது பார்த்திபன் தந்த யோசனை. அது யோசனை மட்டுமல்ல, நடிக்க ஒப்புக் கொள்வதற்கு முன் பார்த்திபன் சொன்ன நிபந்தனையும் கூட.

“மௌனமாக நிகழும் இந்த க்ளைமாக்ஸ்தான் படத்தின் உயிர்நாடியே. எனது கற்பனைக் குழந்தையை நான் விரும்பியபடிதான் உருவாக்குவேன். அதைத்தான் மக்களும் ஏற்பார்கள்” என்று சேரன் பிடிவாதமாக இருந்தார். ஆனால் பார்த்திபன் சொன்ன ஐடியாவைத் தயாரிப்பாளர் முதற்கொண்டு வேறு சிலரும் வற்புறுத்தினார்கள். “இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகளையும் படமாக எடுத்து வைத்துக் கொள்ளலாம். பிறகு திரையிட்டுப் பார்த்து கருத்துகளைக் கேட்டு அதற்கேற்ப பொருத்தமானதை இணைத்துக் கொள்ளலாம்” என்கிற யோசனையை அரைமனதாக ஏற்றார் சேரன்.

இயக்குநர்கள் உள்ளிட்ட படைப்பாளிகளுக்காக நடந்த திரையிடலின் போதும் சேரன் உருவாக்கிய க்ளைமாக்ஸ் காட்சியைப் பலர் நிராகரிக்க, சிலர் மட்டுமே ஏற்றுக் கொண்டார்கள். சேரனின் குருநாதரான கே.எஸ்.ரவிகுமார், தனது சீடனின் யோசனையைப் பலமாக ஆதரிக்க, அதன்படியே க்ளைமாக்ஸ் இணைக்கப்பட்டு படம் வெளியானது. தன் படைப்பின் மீது கொண்டிருந்த சேரனின் உறுதியும் கலைசார்ந்த பிடிவாதமும் வெற்றி பெற்றது. மக்கள் அந்த க்ளைமாக்ஸை உணர்ச்சிகரமாக ஏற்றுக் கொண்டார்கள். பார்த்திபன் உள்ளிட்ட பலரும் சேரனின் நியாயமான பிடிவாதத்தைப் பிறகு மதித்துப் பாராட்டினார்கள். தேவர் சமூகத்துப் பெண்ணை தலித் இளைஞன் காதலிப்பது போல் அமைக்கப்பட்ட திரைக்கதைக்காக, சம்பந்தப்பட்ட சமூகத்திடமிருந்து எதிர்ப்புகளும் மிரட்டல்களும் வந்தன. ஆனால் பொதுமக்கள் இந்தப் படத்தைப் பிரமாண்டமான வெற்றிப் படைப்பாக ஆக்கியதன் முன்னால் அத்தனை எதிர்ப்பும் மழுங்கிப் போனது.

பாரதி கண்ணம்மா

அடக்கி வாசித்த பார்த்திபன், அழகு கண்ணம்மாவாக மீனா

பாரதியாக பார்த்திபன். பொதுவாகப் படம் நெடுகவே நக்கலும் நையாண்டியுமாக வசனம் பேசி நடிக்கும் அவர், இதில் கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பது நன்றாக இருந்தது. வெள்ளைச்சாமி வீட்டுப் பணியாளாக இருந்தாலும் அந்த வீட்டில் மிக உரிமையோடு புழங்குவது, சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்த கண்ணம்மாவின் மீது கரிசனம் காட்டுவது, வெள்ளைச்சாமி வீட்டுக் கிழவியை, ‘பார்த்து இருங்க… யாராவது பத்திட்டு போயிடப் போறாங்க’ என்று கலாய்ப்பது என ஒரு விசுவாசமான, பாசமான வேலைக்காரரைச் சரியாகப் பிரதிபலித்திருக்கிறார். அதே சமயத்தில் கண்ணம்மாவின் மீதுள்ள காதலை உள்ளுக்குள் மறைத்துக் கொண்டு விதம் விதமாக மறுப்பதிலும் இவரது பொறுப்புணர்ச்சி கச்சிதமாக வெளிப்பட்டிருக்கிறது.

கண்ணம்மாவாக மீனா. சேரனின் திரைப்படங்களில் நாயகியின் பாத்திரங்கள் கவர்ச்சிக்காக அல்லாமல் அழுத்தமான, முக்கியமான வகையில் அமைந்திருக்கும். அந்த வகையில் மீனா நடித்த திரைப்படங்களில் மிக முக்கியமானதாக இந்தப் படத்தைச் சொல்லலாம். “ஸ்கிரிப்ட்டைப் படித்தவுடன் இந்தப் பாத்திரத்துடன் நான் ஒன்றிவிட்டேன். சேரன் புதுமுக இயக்குநர் ஆயிற்றே… எழுதிய படி இயக்குவாரா என்று முதலில் சந்தேகமாக இருந்தது. ஆனால் படத்தை முதன்முதலில் பார்த்த போது அத்தனை மகிழ்ச்சியடைந்தேன். எனக்கு நிறைய க்ளோசப் காட்சிகளை வைத்து முகபாவங்களும் உணர்வுகளும் சரியாகப் பதிவாகுமாறு இயக்கியிருந்தார்” என்று ஒரு நேர்காணலில் மகிழ்ச்சியுடன் கூறினார் மீனா. இறுதிவரைக்கும் தன் கண்களாலேயே பார்த்திபனிடம் காதலை இறைஞ்சுவதும் பிடிவாதத்தைக் காட்டுவதும் என மீனாவின் பாத்திரம் முக்கியத்துவத்துடன் எழுதப்பட்டிருந்தது.

வெள்ளைச்சாமியாக விஜயகுமார், அந்தப் பாத்திரத்தில் அச்சு அசலாகப் பொருந்தியிருந்தார். “யாருடா தேவன்…” என்று வசனம் பேசும் காட்சி, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் இளைஞன், தங்கள் சமூகத்தின் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதை அறிந்து ஆவேசமாகும் காட்சி, பாரதியின் தங்கை பேச்சியை, வீட்டு மாப்பிள்ளையாக யோசித்து வைத்திருந்த ராஜா காதலிப்பதை அறிந்து எதிர்க்கும் காட்சி, இறுதியில் அத்தனை சாதி வெறியையும் உதறி நிதானமான மனிதனாக இயங்கும் காட்சி என்று படத்தின் பெரும்பலமாக இயங்கியிருந்தார். ‘தேவர் மகன்’ சிவாஜிக்குப் பிறகு பிரகாசித்த நடிப்பாக விஜயகுமாரைச் சொல்லலாம்.

பாரதி கண்ணம்மா

பார்த்திபனின் தங்கையாக இந்துவின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. ராஜா மீது காதல் கொள்ளுமிடம், அது நடக்காது என்கிற நடைமுறையை அறிந்து பிரிந்து வருவது, கண்ணம்மாவின் காதலை ஏற்றுக் கொள்ளாத அண்ணனிடம் கோபித்துக் கொள்ளும் காட்சி, மீனாவைப் பார்த்துத் தயக்கத்துடன் பதுங்கும் காட்சி என்று ஒரு கிராமத்துப் பெண்ணின் நடிப்பைச் சிறப்பாகக் கொண்டு வந்திருந்தார். பேச்சியைக் காதலிக்கும் இளைஞனாக ராஜா அளவான நடிப்பைத் தந்திருந்தார். ‘மாயன்’ என்கிற கேரக்ட்டரில் புரட்சிகரமான இளைஞனாக நடித்திருந்த ரஞ்சித்தின் நடிப்பு தனியாகக் கவருமளவிற்குச் சிறப்பாக இருந்தது. “அவிய்ங்க நமக்குச் சோறு போட்டாங்கன்னா சும்மா போடலை… நம்மளோட உழைப்பை உறிஞ்சுக்கிட்டுத்தான் போட்டாங்க… இவ்வளவு விசுவாசமா இருக்கியே… உன்னைச் சமமா மதிச்சு வீட்டுக்குள்ள சேர்ப்பாரா… உங்க முதலாளி?” என்று பார்த்திபனிடம் மாயன் கேள்வி கேட்பது படத்தின் முக்கியமான அரசியல் பகுதி.

பார்த்திபனும் வடிவேலுவும் இணைந்து செய்த அலப்பறைகள்

இந்தப் படத்தில்தான் பார்த்திபன் + வடிவேலு நகைச்சுவைக் கூட்டணி உருவாகி பிறகு வெற்றிகரமாகப் பல படங்களில் தொடர்ந்தது. உணர்ச்சிகரமான காட்சிகளில் அடக்கி வாசித்த பார்த்திபன், வடிவேலுவுடன் வரும் காட்சிகளில் வட்டியும் முதலுமாக தன் கலாய்ப்புகளைக் கொட்டித் தீர்த்து விட்டார். “கைய காலா நெனப்பேன்…”, “குண்டக்க மண்டக்க”, “குத்துக்கு மதிப்பு இருக்கா” என்கிற ரகளையான வசனங்களுடன் இதில் வரும் காமெடி டிராக் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. உண்மையில் சேரனின் திரைக்கதையில் இந்த காமெடி டிராக் கிடையாது. பார்த்திபனின் ஐடியா மற்றும் வடிவேலுவின் அலப்பறைகள் என்று இந்தக் கூட்டணி இணைந்து நகைச்சுவைப் பகுதியை இணைத்த அம்சமானது படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. என்றாலும் வடிவேலுவின் லவ் டிராக் மற்றும் ‘புயலு… புயலு…’ பாடல் காட்சி போன்றவை அநாவசியமான திணிப்புகளாக இருக்கின்றன.

இனிமையான பாடல்களைத் தந்து இந்தப் படத்திற்குக் கூடுதல் சுவையைச் சேர்த்திருந்தார் தேவா. ‘சின்ன சின்ன கண்ணம்மா’, ‘பூங்காற்றே’ என்று இரண்டு இனிமையான மெலடிகள், மாறி மாறி விடுகதைச் சொல்வது போல் அமைந்த ‘தென்றலுக்குத் தெரியுமா தெம்மாங்குப் பாட்டு’ என்று மறக்க முடியாத பாடல்களைத் தந்திருந்தார். சத்யஜித்ரே இயக்கிய ‘பதேர் பாஞ்சாலி’ படத்தின் தீம் மியூசிக், ரஹ்மானின் ‘தென்கிழக்குச் சீமையிலே’ போன்றவற்றின் சாயலிலிருந்தாலும் உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு அழுத்தமான பின்னணி இசையைத் தந்திருந்தார்.

பாரதி கண்ணம்மா

தனது முதல் திரைப்படத்திலேயே முக்கியமான சமூகப் பிரச்னையை கையில் எடுத்துச் சிறப்பான முறையில் இயக்கியிருந்தார் சேரன். வசனங்களும் காட்சித் திருப்பங்களும் இயல்பான முறையில் அமைந்து சுவாரஸ்யத்தைக் கூட்டியிருந்தன. சேரன் மிகச்சரியாக யூகித்தபடி, ஒரு நீண்ட மௌனப் போராட்டத்தைச் சட்டென்று கலைத்த க்ளைமாக்ஸ் காட்சியை மக்களும் சரியாகப் புரிந்து கொண்டு வரவேற்றார்கள். விஜயகுமார் பேசும் பல வசனங்களில் சாதியப்பெருமிதம் மிகையாக இருந்தாலும், சாதி வெறியுடன் இருந்த ஒரு மனிதர் பிற்பாடு எப்படித் தலைகீழாக மாறுகிறார் என்பதை உணர்த்துவதற்காக என்று அதை எடுத்துக் கொள்ளலாம். சாதிக்குத் தரும் முக்கியத்துவத்தை விடவும் மனிதர்களுக்குத் தரும் முக்கியத்துவமே அவசியமானது என்கிற செய்தியை இந்தப் படம் ஜனரஞ்சகமாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருந்தது.

பார்த்திபன், மீனா, விஜயகுமார் என்று மூவரின் சிறந்த நடிப்பு, வடிவேலு + பார்த்திபனின் காமெடி, தேவாவின் இனிமையான பாடல்கள், சேரனின் அற்புதமான திரைக்கதை மற்றும் இயக்கம் போன்ற காரணங்களுக்காகவும் சாதியப் பிரச்னையை சரியானபடி அணுகிய காரணத்திற்காகவும் இந்தப் படத்தை இன்றும் கூட கண்டு ரசிக்கலாம்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours