பிரிட்டிஷ் நாவல் எழுத்தாளரான இயன் ஃப்ளெமிங் (Ian Fleming) 1950 காலகட்டங்களில் எழுதிய புத்தகத் தொடர் `ஜேம்ஸ் பாண்ட்’. இதன் கதைநாயனாக இருக்கும் சீக்ரட் ஏஜென்டான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுப் பிரபலமானது.
1962-ல் இக்கதாபாத்திரத்தை மையமாக வைத்து இயக்குநர் டெரன்ஸ் யங் வைத்து ‘Dr. No’ எனும் படத்தை எடுத்திருந்தார். இதில், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த நடிகர் ‘சீன் கானரி’ நடித்திருந்தார். இதன் வரவேற்பைத் தொடர்ந்து ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை மையமாக வைத்துப் பல படங்கள் வெளியாகின. இப்படங்களில் ஜேம்ஸ் பாண்டாக சீன் கானரி, ஜார்ஜ் லேசன்பி, ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் ப்ரோஸ்னன், டேனியல் கிரெய்க் ஆகிய நடிகர்கள் நடித்திருந்தனர். இவர்கள் அனைவருமே வெள்ளை இனத்தவர்கள்.
இந்நிலையில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் டேனியல் கிரெய்க், அந்தக் கதாபாத்திரத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரின் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரம் 2021-ல் வெளியான ‘No Time To Die’ படத்தோடு இறந்துபோவதாகக் கதை முடிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மற்றொரு பிரபலமான நடிகரான இட்ரிஸ் எல்பா (Idris Elba) இதற்கான போட்டியில் முன்னணியிலிருந்தார். அவர்தான் அடுத்த ‘ஜேம்ஸ் பாண்ட்’ என்று செய்திகளே வெளியாகின.
ஆனால், “‘ஜேம்ஸ் பாண்ட்’ கதாபாத்திரம் அடிப்படையில் ஒரு வெள்ளையராக நினைத்து எழுதப்பட்ட கதாபாத்திரம். அதில் கறுப்பினத்தைச் சேர்ந்த நடிகர் இட்ரிஸ் எல்பா நடிக்கக் கூடாது” என்பதாக சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. ‘ஜேம்ஸ் பாண்ட்’ பாத்திரத்தை உருவாக்கிய எழுத்தாளர் இயன் ஃப்ளெமிங், தனக்குப் பிறகு ஜேம்ஸ் பாண்ட் கதைகளைத் தொடர மற்றொரு எழுத்தாளரான ஆண்டனி ஹோரோவிட்ஸுக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். அவரும் மூன்று ஜேம்ஸ் பாண்ட் நாவல்களை எழுதியிருந்தார். தற்போது இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து ஆண்டனியும் இட்ரிஸ் ஆல்பா ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடிப்பதை விரும்பவில்லை என்றே தெரிகிறது.
நிறத்தைக் காரணம் காட்டி நடிகர் இட்ரிஸ் எல்பாவுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பறிப்பது `நிறவெறி’ என்றும் அதற்குப் பல்வேறு கண்டனங்களும் எழுந்தன. ஜேம்ஸ் பாண்டாக நடிக்க ஆர்வமாக இருந்த இட்ரிஸ் எல்பா, தற்போது இந்தப் பிரச்னைக்குப் பிறகுத் தன் உற்சாகத்தை இழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நேர்காணல் ஒன்றில் இது குறித்துப் பேசியுள்ள நடிகர் இட்ரிஸ் எல்பா, “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கிறேன் என்பது எனக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது. நாங்கள் எல்லோருமே நடிகர்கள். அதனால் ஜேம்ஸ் பாண்ட் என்ற அந்தப் பாத்திரம் எத்தனைத் தனித்தன்மை வாய்ந்தது, பெருமை மிக்கது என்பதை நன்கு அறிவோம். சொல்லப்போனால் பாண்டாக நடிப்பது ஒரு நடிகராக நீங்கள் உச்சத்தை அடைந்திருக்கிறீர்கள் என்று நினைக்க வைப்பது. இதை அனைவருமே நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்.
உலகின் பல மூலைகளிலிருந்தும் எனக்கு வாழ்த்துகள் குவிந்தன. சிலர் இதை எதிர்த்தார்கள், ஆனால் அவர்கள் யார் என்பதைப் பற்றி நாம் பேச வேண்டாம். அப்படி எதிர்ப்பு தெரிவித்தவர்கள்தான் இதை அருவருப்பான ஒன்றாக, விருப்பமில்லாத ஒன்றாக நிலைநிறுத்தி, ஓர் இனவெறி பிரச்னையாகவே இதை மாற்றிவிட்டனர். இதை முட்டாள்தனம் என்பதாகவே அவர்கள் நிறுவினார்கள். எனக்கு அந்தக் கடுமை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்றார் வருத்தத்துடன்.
+ There are no comments
Add yours