மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா மதங்களைத் தாண்டி கொண்டாடப்படும் விழாவாக இருக்கிறது. எப்போதும் பாலிவுட் பிரபலங்கள் விநாயகர் சதுர்த்தியை மதங்களுக்கு அப்பாற்பட்டு அங்கே கொண்டாடுவது வழக்கம்.
இந்த ஆண்டு தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது வீட்டில் விநாயகர் சிலையைப் பிரதிஷ்டை செய்துள்ளார். அம்பானி வீட்டு விநாயகரைத் தரிசனம் செய்ய பாலிவுட் பிரபலங்கள் அங்கே குவிந்தனர். நடிகர் சல்மான் கான், ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான், சித்தார்த் மல்கோத்ரா, கியாரா அத்வானி, ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஆலியா பட், ஜூஹி சாவ்லா, ராஜ்தாக்கரே உட்பட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அங்குச் சென்று வழிபட்டனர்.
ஷாருக்கானும் தனது வீட்டில் விநாயகர் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகிறார். இது தொடர்பாக சோஷியல் மீடியா பக்கத்திலும் ஷாருக்கான் பதிவிட்டுள்ளார். இது தவிர சல்மான் கான் சகோதரி அர்பிதாவும், அவரது கணவர் ஆயுஷ் சர்மாவும் சேர்ந்து தங்களது வீட்டிற்கு விநாயகரை எடுத்து வந்துள்ளனர். நடிகை ஷில்பா ஷெட்டி, மணீஷ் மல்ஹோத்ரா ஆகியோரும் தங்களது வீட்டிற்கு விநாயகரை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் மும்பையில் உள்ள தனது வீட்டில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை விராட் கோலியின் மனைவி நடிகை அனுஷ்கா சர்மா சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகரை சாரா அலி கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ரிதேஷ் தேஷ்முக், அவரது மனைவி ஜெனிலியா தேஷ்முக், லட்சுமி ராய், ஜாக்கி ஷெராப், சுனில் ஷெட்டி, நடிகை தமன்னா மற்றும் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் வழிபட்டனர். பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் தனது மகளுடன் சேர்ந்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடினார்.
+ There are no comments
Add yours