விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் புரோமோ ஷூட் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் புரோமோவானது இம்மாத இறுதியில் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியின் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. சேனலுக்கு நெருக்கமானவர்கள், சோஷியல் மீடியாவில் வைரலானவர்கள், ஒருகாலத்தில் பரபரப்பாக இருந்து இன்று ஒதுங்கியிருக்கும் சீனியர் நடிகைகள், மாடல்கள், வெளிநாடுவாழ் தமிழர்கள், போட்டி சேனல்களில் கவனம் ஈர்த்துக் கொண்டிருப்பவர்கள் எனப் பலரிடமும் பேசி வருகிறார்கள்.
எற்கெனவே பிக் பாஸ் தரப்பில் யார் யாரிடமெல்லாம் உத்தேச பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்பது குறித்து நாம் விகடன் தளத்தில் எக்ஸ்க்ளூசிவாகத் தகவல் வெளியிட்டிருந்தோம். Bigg Boss Season 7: பிக் பாஸ் போட்டியாளர்கள் இவர்களா? சேனல் தரப்பு அணுகியது யாரை?!
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 குறித்து இன்னொரு முக்கியமான தகவலும் கசியத் தொடங்கியிருக்கிறது. அது, வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு பிக் பாஸ் வீடுகள் இருக்கலாமென்பதுதான்.போட்டியாளர்கள் சரிசமமாகப் பிரிக்கப்பட்டு இரண்டு வீடுகளிலும் தங்க வைக்கப்படலாமாம்.
இது தொடர்பாக விசாரித்த போது, “ஒரு வீட்டில் இந்த சீசனுக்கான போட்டியாளர்களும் இன்னொரு வீட்டில் பழைய பிக் பாஸ் சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களுமாகத் தங்க வைக்கப்படலாம்.
அதேநேரம் இந்த இரண்டு வீடு விஷயம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு முன்கூட்டியே தெரியுமா அல்லது சில எபிசோடுகள் கழித்து இரண்டு வீடுகளையும் ஒன்றாக்கி விஷயத்தை உடைப்பார்களாங்கிறது இன்னும் முடிவாகவில்லை.
ரெண்டு வீடுங்கிறதுக்காக போட்டியாளர்களின் மொத்த எண்ணிக்கை ரொம்ப அதிகமா இருக்காதுன்னும் வழக்கமான எண்ணிக்கையைப் பாதியாகப் பிரிச்சுத் தங்க வைக்கலாம்னு பேசப்படுது’’ என்கிறார்கள்.
பிற மொழிகளில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் இந்த இரண்டு வீடு கான்செஃப்ட் ஏற்கெனவே வந்திருப்பதாகவும் தமிழில் முதல் முறையாக வரும் சீசனில் முயற்சி செய்து பார்க்கலாமென நினைப்பதாகவும் சொல்கிறார்கள்.
இரண்டு வீடென்றால், `ஒண்ணு வழக்கமான பிக் பாஸ் செட்டில் இருக்கு. இன்னொன்னு’ என வாழைப்பழக் காமெடி போல் கேட்கிறீர்களா?
வழக்கமான அந்த பிக் பாஸ் வீட்டில் நடுவில் ஒரு சுவர் வைத்து இரண்டு வீடுகளாக்கலாம் என்கிறார்கள்.
+ There are no comments
Add yours