காதலன்: கவர்னரின் மகளைக் காதலிக்கும் சாதாரண இளைஞன்; ஷங்கரின் பிரமாண்ட காதல் கதை ஜெயித்தது எப்படி?

Estimated read time 1 min read

தமிழ் சினிமாவில் எத்தனையோ வணிக இயக்குநர்கள் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். பாக்ஸ் ஆபிஸ் ஹிட், சில்வர் ஜூப்ளி வெற்றிகளைத் தந்து தயாரிப்பாளர்களின் கல்லாவை நிறைத்திருக்கிறார்கள். நட்சத்திர நடிகர்களை உருவாக்கியிருக்கிறார்கள். ரசிகர்களின் மனங்களைக் குளிர்வித்திருக்கிறார்கள். இந்த கமர்ஷியல் டைரக்டர்கள் வரிசையில் முக்கியமானவர் என்றால் இயக்குநர் ஷங்கரைத்தான் அப்படிச் சொல்ல முடியும். ஆம், அவருடைய படங்களின் ஒவ்வொரு காட்சியின் பின்னாலும் அத்தனை உழைப்பும் மெனக்கெடலும் இருக்கின்றன. ஒவ்வொரு காட்சியிலும் தரத்தின் அடர்த்தி நிறைந்திருக்கிறது.

கமர்ஷியல் படம்தானே என்று காமா சோமாவாக ஒரு காட்சியைப் போகிற போக்கில் அவர் எடுப்பதில்லை. ஒவ்வொரு சீனையும் பல முறை திருத்தி எழுதுகிறார். அதை எப்படியெல்லாம் வித்தியாசமாகத் தரலாம் என்று யோசிக்கிறார். அப்படி வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக சினிமாவில் உள்ள சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுடன் கூட்டணி அமைக்கிறார். அவருடைய படங்களின் கருப்பொருள் வானத்தில் பறந்தாலும் அதன் கால் கீழேதான் இருக்கிறது. அது ஹைடெக் ரோபா சப்ஜெக்ட்டாக இருந்தாலும் உள்ளூர் சந்தில் உள்ள அம்மன் கோயில் வாசலில் வந்து நிற்கிறது.

இயக்குநர் ஷங்கர்

“முன் வரிசையில் அமர்ந்திருக்கும் பார்வையாளனை மனதில் வைத்துக் கொண்டுதான் ஒவ்வொரு சீனையும் நான் எழுதுவேன்” என்று ஒரு நேர்காணலில் ஷங்கர் கூறியது உண்மை. ஒரு கமர்ஷியல் படம் தரமாக அமைந்திருப்பதின் அடையாளம், அது வெளியாகி எத்தனை வருடங்கள் கழித்தாலும் மீண்டும் பார்க்கிற விருப்பம் ஏற்பட வேண்டும். உதாரணத்திற்கு ‘முதல்வன்’ படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போதெல்லாம் அதில் வரும் அர்ஜுன் – ரகுவரன் இன்டர்வியூ காட்சிக்காகக் காத்திருப்பவர்கள் பலர்.

தமிழ் சினிமாவிற்குள் ஷங்கர் நுழைந்தவுடன் அதன் வணிகம் இன்னமும் அதிகமாக விஸ்தரிக்க ஆரம்பித்தது. சர்வதேச வணிகத்திலும் பெரும் பாய்ச்சலுடன் விரிவடைந்தது. ஒரே சமயத்தில் உலகம் முழுவதிலும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகின. அதுவரை பிரமாண்ட திரைப்படம் என்பது எப்போதாவது நிகழும் அபூர்வ விஷயமாக இருந்தது. ஆனால் ஷங்கர் வந்தவுடன் பெரும்பாலான திரைப்படங்கள் பெரிய பட்ஜெட்டிற்கு மாறின. அப்படியொரு நெருக்கடியைத் தன்னுடைய முன்னுதாரணத்தின் மூலம் ஏற்படுத்தினார்.

பைக்குகளும் ஜீப்களும் வானத்தில் பறந்தன. ஒரு சிறிய காட்சியில் கூட நூற்றுக்கணக்கான நபர்கள் பின்னணியில் இருந்தார்கள். இப்படியாக தமிழ் சினிமாவின் முகத்தைப் பிரமாண்டமாக மாற்றியதற்கு ஷங்கரின் படங்கள் முக்கிய காரணமாக அமைந்தன. ஹாலிவுட்டிற்கு நிகராக இங்கேயும் திரைப்படங்களை எடுத்து சந்தைப்படுத்த முடியும் என்பதற்கான முன்னோடிகளுள் ஒருவராக ஷங்கர் இருக்கிறார்.

ஷங்கர் இயக்கிய முதல் திரைப்படமான ‘ஜென்டில்மேன்’ பற்றி இந்த டென்ட் கொட்டாய் சீரிஸில் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அவரது இரண்டாவது திரைப்படமான ‘காதலன்’ 1994-ல் வெளிவந்தது. அவருக்கு இன்று பிறந்தநாளும் என்பதால் இந்த நாளில் இந்தப் படத்தைப் பற்றி நாம் பார்ப்பது கூடுதல் சிறப்பான விஷயம். ‘ஜென்டில்மேன்’ அடைந்த பிரமாண்டமான வெற்றி காரணமாக அதே தொழில்நுட்ப கூட்டணி இதிலும் அமைக்கப்பட்டது. தயாரிப்பு குஞ்சுமோன், ஒளிப்பதிவு ஜீவா, இசை ஏ.ஆர்.ரஹ்மான், எடிட்டிங் லெனின் மற்றும் விஜயன், வசனம் பாலகுமாரன் என்று அதே டீம் இதிலும் இணைந்தது.

காதலன்

ஷங்கர் – தமிழ் சினிமாவின் வணிகத்தை மாற்றிய இயக்குநர்

பொதுவாக எந்தவொரு திரைப்பட இயக்குநருக்கும் இரண்டாவது படம் என்பது கண்டம்தான். பலர் இதில் சறுக்கி வீழ்ந்திருக்கிறார்கள். முதல் படம் தன்னுடைய நெடுங்கால கனவு என்பதால் அதன் காட்சிகளை இழைத்து இழைத்து, செதுக்கி செதுக்கி உருவாக்கியிருப்பார்கள். எனவே அது பெரும்பாலும் வெற்றியடைந்து விடும். அது மெகா ஹிட் ஆகிவிட்டால் தயாரிப்பாளர்கள் வந்து குவியும் போது புகழின் மயக்கத்தில் என்ன செய்வதென்று தலைகால் புரியாது. வந்த வாய்ப்புகளையெல்லாம் ஏற்றுக் கொண்டு எந்தப் பாதையிலும் முழுமையாகச் சென்று சேராமல் விபத்தில் சிக்கிய இயக்குநர்கள் பலர். ஆனால் ஷங்கர் இந்தக் கண்டத்தில் இருந்து ஒருவகையாகத் தப்பிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் இயக்கிய மற்ற திரைப்படங்களோடு ஒப்பிடும் போது ‘காதலன்’ படத்தின் திரைக்கதை சற்று சுமாராகத்தான் இருந்தது. ஏன் இவ்வாறு நிகழ்ந்திருக்கக்கூடும்?

ஷங்கர் திரைப்படங்களின் பெரும்பாலான ஒன்லைன் இப்படித்தான் இருக்கும் என்பது நமக்குத் தெரியும். ‘இப்படி நடந்தால் என்னவாகும்?’ என்பதுதான் அந்த ஒற்றை வரி. ஒரு சராசரி ஆசாமி ஒரு நாளைக்கு முதலமைச்சர் ஆனால் என்னவாகும், தான் விரும்பிய கல்வியைப் படிக்க முடியாத ஒருவன், கொள்ளையடித்து கல்வி நிலையம் கட்டினால் என்னவாகும், ஒரே தோற்றத்தில் இருக்கும் இரண்டு ஆண்கள், ஒரே பெண்ணைக் காதலித்தால் என்னவாகும்? இதே சமாச்சாரம்தான் ‘காதலன்’ திரைப்படத்திலும் ஒன்லைனாக அமைந்தது. ஒரு மிடில் கிளாஸ் இளைஞன், எட்டவே முடியாத உயரத்தில் இருக்கும் பெண்ணைக் காதலித்தால் என்னவாகும்?

இந்த ஒன்லைனை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர் குஞ்சுமோன், அப்போதுள்ள அரசியல் சூழலைப் படத்திற்குள் கொண்டு வர திட்டமிட்டார். அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கும் கவர்னர் சென்னா ரெட்டிக்கும் இடையே ஓர் உக்கிரமான பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. விளைவு படத்தின் மெயின் வில்லன் பாத்திரம் ‘கவர்னர்’ என்று ஆகியது. சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் கேரளப் பொறுப்பிலிருந்த குஞ்சுமோன், இதன் மூலம் ஜெயலலிதாவின் கவனத்தைக் கவர முயற்சி செய்திருக்கலாம். இந்தப் படத்தின் வில்லன் ஒரு கவர்னர் என்கிற விஷயம் வெளியில் கசிய, சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து நெருக்கடிகள் வர ஆரம்பித்தன. ஜெயலலிதாவின் உதவியைத் தயாரிப்பாளர் நாட, எந்தவொரு சென்சார் பிரச்னையும் இன்றி படம் வெளியே வந்தது. டைட்டில் கார்டின் ஆரம்பத்தில் ஜெயலலிதாவிற்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காதலன்

‘காதலன்’ படத்தின் ஹீரோவாக ஷங்கர் முதலில் திட்டமிட்டிருந்தது பிரசாந்த்தை. ஆனால் தயாரிப்பாளர் பிரபுதேவாவை ஹீரோவாகப் போட வேண்டும் என்று விரும்பினார். ஒல்லியான உடல்வாகும் தாடியும் கொண்ட இளைஞன், இந்த கேரக்ட்டருக்கு பொருந்துவானா என்று ஷங்கருக்குள் தயக்கம். ஆனால் தயாரிப்பாளர் உறுதியாக நம்பியதால் வேறு வழியில்லை. இம்மாதிரியான இடையூறுகள் ஒருவேளை இல்லாமலிருந்தால் ஷங்கர் தான் விரும்பிய படத்தை எடுத்திருப்பாரோ என்னமோ! குஞ்சுமோன் + ஷங்கர் கூட்டணி இந்த இரண்டாவது படத்தோடு அப்படியே முடிந்து போனதையும் கவனிக்க வேண்டும்.

“நான்தான் அந்தப் பையனை டைரக்டராக வளர்த்துவிட்டேன். ‘ஜென்டில்மேன்’ வெற்றியடைந்த போது ஃபிளாட்டும் காரும் கொடுத்தேன். தொடர்ந்து ஐந்து படங்கள் இயக்குவதாக ஒப்புக் கொண்ட ஷங்கர், பெரிதாக வளர்ந்த பிறகு என்னைத் திரும்பிப் பார்க்கவேயில்லை” என்று பல நேர்காணல்களில் குஞ்சுமோன் புலம்பிக் கொண்டிருந்தார்.

பிரபுதேவா – ஹீரோவாக பயணத்தை ஆரம்பித்த திரைப்படம்

நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த சாதாரண இளைஞன் பிரபு. ஒரு போலீஸ் கான்ஸ்டபிளின் மகன். பார்க்கிற பெண்ணையெல்லாம் காதலிக்காத இளைஞன், தன் மனதிற்குள் ஒரு கனவுச் சித்திரப் பெண்ணை வரைந்து வைத்திருக்கிறான். அவளைத் தினமும் ஆராதிக்கிறான். ஒரு நாள் அச்சு அசலாக அந்தச் சாயலில் உள்ள பெண்ணைக் காண நேர்கிறது. ஆனால் அவளோ செல்வாக்கு உள்ள கவர்னரின் மகள். பிரபுவின் காதலுக்கு முன்னால் இந்த நடைமுறைச் சிக்கல் எல்லாம் பெரிதாகத் தெரிவதில்லை. தமிழ் சினிமாவின் வழக்கப்படி ஒரு மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் இவர்களின் உறவு தக்காளி விலை போல நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. பிரபுவிற்குள் இருக்கும் ஓர் உன்னதமான காதலனை உணர்ந்து கொள்ளும் சுருதி அவனையே தன் எதிர்காலமாக நிச்சயித்து விடுகிறாள்.

ஆனால் இவர்களின் காதல் மசோதாவை கவர்னர் கருணையே இல்லாமல் நிராகரித்து விடுகிறார். பல்வேறு தடைகளைப் போட்டுப் பிரிக்க நினைக்கிறார். இவற்றையெல்லாம் மீறி பிரபுவும் சுருதியும் ஒன்று சேர்ந்தார்களா என்பதற்கான விடையை பைக் சேஸிங், ஜீப் ஃபிளையிங், முக்காபுலா சாங் போன்றவற்றோடு மசாலா சுவையுடன் தந்திருக்கிறார் ஷங்கர்.

காதலன்

‘எந்தவொரு சாயலும் இல்லாத அசலான, இயல்பான நடிப்பு இந்தப் பையனிடம் இருக்கிறது’ என்று இயக்குநர் மகேந்திரன் பிரபுதேவாவைப் பற்றி கூறினார். யோசித்துப் பார்த்தால் உண்மைதான். பக்கத்து வீட்டு இளைஞனின் தோற்றத்தில் இருக்கும் பிரபுதேவா நடிப்பதற்காக அதிகம் மெனக்கெடுவதில்லை. தன்னிச்சையாக வரும் உணர்வுகளை அப்படியே அநாயசமாகப் பிரதிபலிக்கிறார். நடிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும். தமிழ் சினிமாவின்… ஏன் இந்திய சினிமாவின் நடன வடிவமைப்பையே ஒட்டுமொத்தமாக மாற்றியதில் பிரபுதேவாவின் பங்கு கணிசமாக இருக்கிறது.

ஒரேயொரு உதாரணத்தைச் சொல்கிறேன். முன்பெல்லாம் ஒரு பாடல் காட்சியில் ஆட்களை மறைத்துக் கொண்டு கேமராவிற்கு முன்னால் எவரும் நடமாட மாட்டார்கள். அப்படித் தவறுதலாக வந்தால் ‘கட்… கட்’ என்று படப்பிடிப்பிலேயே அலறியிருப்பார்கள். ஆனால் பிரபுதேவா நடனம் அமைக்கும் பாடல் காட்சிகளைக் கவனியுங்கள். கன்னாபின்னாவென்று ஆட்கள் குறுக்கும் நெடுக்குமாகக் கடந்து போவார்கள். உறைந்த நிலையிலிருந்து திடீரென்று ஆடத் தொடங்குவார்கள்.

இதைப் போலவே அவர் காட்சிகளை அடுக்கும் விதத்தை, குளோசப் காட்சிகளின் பாணியைச் சற்று கவனித்துப் பார்த்தாலே பிரபுதேவாவின் அசாதாரணமான திறமை தெரிந்துவிடும். பாடலில் ஒலிக்கும் தாளத்தின் லயத்தோடு பிரபுதேவா உருவாக்கும் துரிதமான நடன அசைவுகள் எப்படிக் கச்சிதமாகப் பொருந்துகின்றன என்பதைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். ஒரு பாடல் எப்படி கவர்ச்சிகரமான இறுதி வடிவமாக வரவேண்டும் என்பதற்கான மனக்கணக்கு அவரிடம் உறுதியாக முன்பே இருக்கிறது. ‘சும்மா கை காலை உதறி விட்டுச் செல்கிறார்’ என்று பிரபுதேவாவின் நடனத்தைப் பற்றிச் சொல்லும் ஆசாமிகள் இதையெல்லாம் கவனிப்பதில்லை என்றுதான் பொருள்.

‘காதலன்’ திரைப்படத்தில் பிரபுதேவாவின் நடிப்பு ‘ஆஹா… ஓஹோ’ என்று இல்லையென்றாலும் அவசியமான நடிப்பாகவே இருந்தது. ஓர் அசலான காதலனின் சித்திரத்தை உணர்வுபூர்வமாக கொண்டு வந்துவிட்டார்.

காதலன்

ஆரம்பக் கட்டத்திலேயே அசத்திய வடிவேலு

படத்தின் ஹீரோயினாக மாதுரி தீட்சித்தையும் காமெடியனாக கவுண்டமணியையும் திட்டமிட்டார்கள். ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அது சாத்தியமாகவில்லை. விளைவு நக்மாவும் வடிவேலுவும் உள்ளே வந்தார்கள். ஒரு நாயகியின் பங்களிப்பை நக்மா சரியாக நிறைவேற்றினார். தனக்குக் கிடைத்த வாய்ப்பை வடிவேலு சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒரு பக்கம் பிரபுதேவா கஷ்டப்பட்டு நடனமாடிக் கொண்டிருக்கும் போது இவரும் இடையே புகுந்து எதையாவது ஆடி காமெடி செய்வார். (‘வேற எந்த ஹீரோவும் இதற்கு ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்கள்’ என்று பிரபுதேவாவைப் பார்க்கும் போதெல்லாம் நெகிழ்ச்சியாக வடிவேலு சொல்வாராம்). கிரீஷ் கர்னாட் என்கிற யானைக்கு கவர்னர் வில்லன் நடிப்பெல்லாம் சோளப் பொறி. ‘காகர்லா சத்தியநாராயணா’வாக இயல்பான வில்லத்தனத்தைக் காட்டியிருந்தார். வெடிகுண்டு வைக்கும் ‘மல்லிகார்ஜுனாவாக’ சில காட்சிகளில் வந்தாலும் ரகுவரனின் நடிப்பு மிரட்டலாகவும் அசத்தலாகவும் இருந்தது.

அம்மா – மகன் சென்டிமென்ட் என்பது பல திரைப்படங்களில் சொல்லப்பட்ட, செல்லுபடியாகிற சமாச்சாரம். ஆனால் தந்தை – மகன் உறவு என்பது சில திரைப்படங்களில்தான் உணர்வுபூர்வமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ‘காதலன்’ அதிலொன்று. சோகமாக அமர்ந்திருக்கும் மகன், பிரச்னை என்னவென்று சொல்லாமல் ‘அது என் பர்சனல்’ என்று கோபப்படும் போது ‘பியர்’ ஊற்றித் தந்து ‘ஞாயிறு என்பது கண்ணாக’ என்று பாட்டுப்பாடி மனதில் உள்ளதை வரவழைத்து ‘கிட்ட வாடா மவனே’ என்று கட்டியணைத்துக் கொள்ளும் யதார்த்தமான தந்தை பாத்திரத்தில் எஸ்.பி.பி. அசத்தியிருந்தார்.

‘கோபமோ, சந்தோஷமோ, அழுகையோ, ஆனந்தமோ… ஒரு அஞ்சு நிமிஷம் ஒத்திப் போடு. அதுக்குள்ள புத்தி சமநிலைக்கு வரும். அப்ப எடுக்கற முடிவு சரியா இருக்கும்’ என்பது ஒரு தகப்பனாக எஸ்.பி.பி. அடிக்கடி சொல்லும் அறிவுரை. இந்த இடத்தில் வசனகர்த்தா பாலகுமாரனுக்கு ஒரு ஸ்பெஷல் கிரெடிட் தர வேண்டும். ஏனெனில் அவர் தனது எழுத்தில் அடிக்கடி குறிப்பிட்ட விஷயம் இது. பிரபுதேவாவைத் தனிச்சிறையில் அடைத்து விதம் விதமாக டார்ச்சர் செய்யும் காவல் அதிகாரியாக கவிதாஸ்ரீ நடித்திருந்தார். ‘பி… ர… பு…’ என்று வித்தியாசமாக அழைத்து, பிரபுதேவா கட்டிக் கொண்டிருக்கும் துண்டில் எறும்புகளை விட்டு ‘சின்ன ராசாவே சித்தெறும்பு உன்னைக் கடிக்குதா’ என்று பாடியது டைமிங் குறும்பு.

காதலன்

இந்தியா முழுக்க ஹிட் அடித்த ‘முக்காபுலா’ பாடல்

ஷங்கரின் படங்களுக்கு எப்போதுமே ரஹ்மானின் இசை கூடுதல் பலமாக இருக்கும். அதிலும் ‘காதலன்’ படத்தின் வெற்றிக்கு ரஹ்மானின் பாடல்கள் முக்கியமான காரணமாக அமைந்தன. குறிப்பாக ‘முக்காபுலா’ பாட்டு இந்தியாவெங்கும் ‘ஹிட்’ அடித்துப் பல இசையமைப்பாளர்கள் காப்பியடிக்குமளவிற்குப் பிரபலமானது. வெங்கி செய்த கிராஃபிக்ஸ் மாய்மாலங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. ‘என்னவளே’ என்கிற அற்புதமான பாடலின் மூலம் தன் முதல் முயற்சியிலேயே தேசிய விருது பெற்றார் உன்னி கிருஷ்ணன். இது தவிர ஆடியோகிராஃபி, எடிட்டிங், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் என்று டெக்னிக்கல் ஏரியாக்களில் தேசிய விருதுகள் குவிந்தன.

வைரமுத்துவும் வாலியும் பாடல்களை எழுத, ‘பேட்ட ராப்’ பாடலை மட்டும் ஷங்கர் எழுதினார். சென்னை மொழியை ராப் இசையில் தோய்த்து ரஹ்மான் அமைத்த ரகளையான இசை ரசிகர்களைக் குதியாட்டம் போட வைத்தது. தாளத்திற்காகவும் அட்டகாசமான நடன அமைப்பிற்காகவும் ‘காதலிக்கும் பெண்ணின் கையில்’ பாடல் கொண்டாடப்பட்டது. ‘ஊர்வசி ஊர்வசி’ பாடலுக்காகக் கண்ணாடி கூரை அமைந்த ஸ்பெஷல் பஸ் உருவாக்கப்பட்டு சென்னை நகரின் பல இடங்களில் இதைப் படமாக்கினார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜீவாவின் உழைப்பு தனியாகக் குறிப்பிடப்பட வேண்டியது. குறிப்பாகச் சென்னையிலிருந்து கடலூருக்கு நக்மாவை அழைத்துக் கொண்டு பிரபுதேவா செல்லும் பைக் சேஸிங் காட்சியில் ஸ்டன்ட் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் அற்புதமான கூட்டணியை அமைத்துக் கொண்டு அசத்தினார்கள். இயற்பியல் விதிகளை உடைத்துக் கொண்டு பைக் எங்கெங்கோ தாவ, ஜீப்கள் வானத்தில் பறந்து விழுந்தன.

காதலன்

‘பெண்கள் மூன்று வகைப்படுவார்கள். ஜில், ஜங், ஜக்’ என்று பெண்களின் அழகு குறித்த அகராதியை இந்தப் படத்தில் நகைச்சுவையாகச் சொல்வார் வடிவேலு. அந்த வகையில் ‘காதலன்’ திரைப்படத்தை ‘ஜங்’ என்றுதான் வகைப்படுத்த வேண்டும்.

பிரபுதேவாவின் ரகளையான நடனம், ரஹ்மானின் அட்டகாசமான பாடல்கள், ஷங்கரின் திறமையான இயக்கம் போன்ற காரணங்களுக்காக ‘காதலன்’ திரைப்படத்தை இன்றும் ரசித்துப் பார்க்கலாம்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours