இயக்குநர் மாரி செல்வராஜ், தனது சொந்த படமாக `வாழை’ படத்தை இயக்கி முடித்திருக்க, இன்னும் அதன் இறுதிக் கட்ட வேலைகள் மட்டுமே பாக்கி இருக்கின்றன. அதற்கு முன்னால் `மாமன்னன்’ படம் ரிலீசாகிவிட்டது. `வாழை’ படத்தை முடித்துவிட்டு துருவ் படத்தில் களமிறங்கிவிடலாம் என்று நினைத்திருந்தார்.
இதற்கிடையில் துருவ் படத்தைக் கையில் எடுக்க நேரம் நெருங்கி விட்டதால் ‘வாழை’ இறுதிக்கட்ட வேலைகளைத் தள்ளி வைத்துவிட்டு துருவ் படத்தின் ஸ்கிரிப்ட்டை இறுதி செய்யும் பணியில் இறங்கிவிட்டார். இதற்கு முன்னால் கபடி பயிற்சிக்காகவும், உடன் நடிக்கும் ஒரிஜினல் கபடி வீரர்களுக்கு இடையே ஓர் ஒத்திசைவை உருவாக்குவதற்காகவும், நட்பு உருவாவதற்காகவும் துருவ் திருநெல்வேலியை ஒட்டியுள்ள ஒரு கிராமத்திற்குப் போய் கடந்த ஒரு மாத காலமாக அங்கேயே தங்கியிருக்கிறார்.
கிட்டத்தட்ட ஒரு கபடி வீரராகவே அவர் மாறிவிட்டாராம். கொஞ்சம் நிறம் மாறி முட்டியில் சிறு காயங்கள் வரை ஏற்பட்டுக் காய்ந்து போய் இருக்கிறதாம். அக்டோபர் தொடர்ந்து ஒரே கால்ஷீட்டில் 40 நாள்களில் படத்தை முடிக்க ஏற்பாடாகி வருகிறது. எல்லா முக்கிய காட்சிகளும் முன்னதாகவே ரிகர்சல் பார்த்து வைக்கப்படுகின்றன. துருவ் அந்தக் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் ஓய்வு நேரங்களில் போய் பேசிக் கொள்கிற அளவுக்கு ஈஸியாக இருக்கிறார்.
மாரி, தனது மொத்தமான வழக்கமான யூனிட்டை இந்தப் படத்திற்காக மாற்றியிருக்கிறார். அதற்கு விசேஷமான காரணங்கள் எதுவும் இல்லையாம். ஒரு மாற்றத்திற்கான முயற்சியே இது. அவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளராக இருந்த தேனி ஈஸ்வர் இந்தப் படத்தில் இல்லை. பா.இரஞ்சித் பாசறையிலிருந்து ஒரு புது ஒளிப்பதிவாளரைப் போடத் தீர்மானித்து விட்டார். அதே மாதிரி இதுவரை தன் படத்தில் பயன்படுத்தாத இசையமைப்பாளரைக் கொண்டுவரத் தீர்மானித்து விட்டார்.
துருவுக்கு ஜோடியாக மூன்று பேரைத் தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள். அதில் ஒருவரைத்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின்போது அறிமுகப்படுத்துகிறார்கள்.
பா.இரஞ்சித்திடம் கதையை முழுக்கச் சொல்லியிருக்கிறார் மாரி. கேட்டுவிட்டு, ‘ரொம்ப அருமையாக வந்திருக்கிறது. பரியேறும் பெருமாளை விடவும் உனக்குப் பெயர் வாங்கித் தர வாய்ப்பு இருக்கிறது’ எனத் தட்டிக் கொடுத்திருக்கிறார் இரஞ்சித்.
நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கமான நடிகர்களை இதில் தவிர்த்து விடவும் முடிவு செய்திருக்கிறார்கள். அநேகமாக துருவ் தவிர்த்து எல்லோரும் புதுமுகமாக இருக்கவே வாய்ப்பு என்கிறார்கள். ‘மாமன்னன்’ வடிவேலுவும் ‘படத்தில் வந்திட்டு போறேன்யா… கூப்பிடுங்க’ என்று நட்பு விட்டுப் போகாமல் இருக்கப் பேசியிருக்கிறார். அநேகமாக ஒரு காட்சியிலாவது வடிவேலு முகம் காட்டி விட்டுப் போக வாய்ப்பிருக்கிறது. எல்லாமே அடுத்த மாதம் வெளியாகப் போகும் முதல் பார்வை போஸ்டரில் வெளிச்சமாகும்.
+ There are no comments
Add yours