Kushi Review: `ஸ்நாக்ஸ் லேக்குண்டா இ சினிமா சூடகண்டி' விஜய் தேவரகொண்டா- சமந்தாவின் குஷி ஈர்க்கிறதா?

Estimated read time 1 min read

கடவுள் இல்லை, ஜோதிடம் இல்லை, சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம் பொய் என்று தீவிர நாத்திகவாதியின் மகன் விப்லவ் (விஜய் தேவரகொண்டா). பி.எஸ்.என்.எலில் பணியாற்றுகிறார்.

சொந்த ஊரில் வேலை செய்ய விருப்பமில்லாமல் காஷ்மீரில் போஸ்டிங் கேட்டு, அங்கே செல்கிறார். சென்னை ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் சமந்தாவும் (ஆராத்யா) அவரது டீமோடு காஷ்மீருக்கு ட்ரிப் வந்திருக்கிறார். அங்கே சமந்தாவை பார்த்ததும் பிடித்துப்போக, பின் தொடர்கிறார், விஜய் தேவரகொண்டா. பார்த்ததும் காதலாகி, ஒருதலைக் காதலராக சமந்தாவை சுற்றித் திரிகிறார்.

அவர் நடவடிக்கைகளில் இம்ப்ரஸான சமந்தா, க்ரீன் சிக்னல் கொடுக்க, இருவரும் காதலர்களாகிறார்கள்.பின்புதான், பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் சதரங்க ஶ்ரீனிவாச ராவின் (முரளி ஷர்மா) மகள் என்றும், தான் மாநில நாத்திக சங்கத் தலைவர் லெனின் சத்யத்தின் (சச்சின் கடேகர்) மகன் என்றும் இருவருக்கும் தெரிய வருகிறது. இந்த இருவரும் டிவி விவாதங்கள் உட்பட எல்லா இடங்களிலும் எலியும் பூனையுமாக இருக்கின்றனர். நாத்திகமும் ஆத்திகமும் இவர்களது காதல் வாழ்க்கையில் என்ன விளைவு ஏற்படுத்துகிறது, இவர்களது காதல், திருமண வாழ்க்கைக்குள் போனதா என்பதே ‘குஷி’.

குஷி

ஹக்ஸ், கிஸ், ரொமான்ஸ் என சாக்லேட் பாயாகவும் அடிதடி, குடி, ஆக்ரோஷம் என ரக்கட் பாயாகவும் படங்களில் காதலித்து மிரட்டும், மிரட்டிக் காதலிக்கும் விஜய் தேவரகொண்டா, இந்தப் படத்தில் சாக்லேட் பாய் மட்டும் தான். அதில் பட்டம் பெற்ற விஜய் தேவரகொண்டா, தனது கதாபாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார். சமந்தாவை ஒருதலைக் காதலோடு அணுகும் காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார், விஜய் தேவரகொண்டா. அவருக்கு இதை சொல்லியா தரவேண்டும் ? ‘மார்கெட்ல எல்லோரும் என்னை தப்பாவே நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. நான் பெண்களை ரொம்ப மதிக்கிறவன்’ என ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தை ஜாலியாகச் சொல்கிறார்.

சமந்தாவுக்கு நல்ல கதாபாத்திரம். சின்ன சின்ன ரியாக்‌ஷன்கள் சூப்பர். ஆனால், பல இடங்களில் இன்னும் மெனக்கெட்டிக்கலாம். பல பிரமாதமான கேரக்டர்களில் சிறப்பாக நடித்த சமந்தாவுக்கு இதில் பெரிய வேலை இல்லை. ‘என் ரோஜா நீயா’, ‘ஆராத்யா’ என இரண்டு பாடல்கள் சமந்தாவுக்காகவே வைக்கப்பட்டிருக்கின்றன. இருந்தும், சமந்தாவின் சார்மிங் இதில் மிஸ்ஸிங் !

குஷி

ரோகிணி, சரண்யா பொன்வண்ணன், ஜெயராம், லட்சுமி என சில சர்ப்ரைஸ் கேரக்டர்களும் இருக்கின்றன. ரோகிணி – ஜெயராம் ஜோடியை வைத்து எமோஷனலான விஷயத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், அவர்களது கதாபாத்திரங்கள் இன்னும் அழுத்தமாக அழகியலோடு எழுதப்பட்டிருந்தால் நிச்சயம் பேசப்பட்டிருக்கும். திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாதது படத்தின் பெரிய மைனஸ். அடுத்து என்ன நடக்கும் என்பதை மிக எளிதில் யூகிக்கக்கூடியதாக இருக்கிறது. இயக்குநர் ஷிவா நிர்வானாவின் முந்தைய படங்களான ‘நின்னுக்கோரி’, ‘மஜிலி’யின் பலமே கதாபாத்திரங்களின் ஆழமும் திரைக்கதையும்தான். அவர் இயக்கி நானி நடித்த ‘டக் ஜெகதீஷ்’ படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் கூட, கதாபாத்திரங்களின் உணர்வும் ஆழமும் நன்றாக இருக்கும். இந்த விஷயத்தில் இயக்குநர் ஷிவா நிர்வானா கவனம் செலுத்தியிருக்கலாம்.

‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’ படங்களின் ஒளிப்பதிவாளர் முரளி தான் இதற்கும் ஒளிப்பதிவாளர். காஷ்மீர் போர்ஷன், பாடல்கள், மெட்ரோவில் நடக்கும் ஸ்டன்ட் காட்சி என பல இடங்களில் லைக்ஸ் அள்ளுகிறார். ‘ஹ்ருதயம்’ படத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையில் ‘என் ரோஜா நீயா’, ‘ஆராத்யா’ இந்த இரண்டு பாடல்களும் பக்கா! மற்ற பாடல்களும் பின்னணி இசையும் பெரிதாக வொர்க் அவுட்டாகவில்லை. விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் காஸ்ட்யூம்கள் சிறப்பு !

குஷி

விஜய் தேவரகொண்டா – சமந்தா இடையே நடக்கும் உரையாடலில் வசனங்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. நிறைய காட்சிகள் எதற்காக என்றே தெரியவில்லை. அதை எடிட்டர் பிரவீன் புடி, கருத்தில் கொண்டிருந்தால் படம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் வந்திருக்காது. ‘க்ளைமேக்ஸ்ல என்னதான் சொல்றாங்கன்னு பார்ப்போம்’ என்று பார்த்தால், பெருதாக ஒன்றுமில்லை. படம் முடியும்போது, ‘விக்ஸ்’ங்கிறதைத்தான் இப்படி சுத்தி சுத்தி எழுதியிருக்கீங்களா? என்று கேள்வி கேட்க தோணுகிறது.

விஜய் தேவரகொண்டாவின் முந்தைய படமான ‘லைகர்’ படத்தில் ‘சாலா க்ராஸ் ப்ரீட்’ என தொடையை தட்டி, பாக்ஸிங் கதக்களி, குச்சுப்படி ஆடி, மைக் டைசனையே கேமியோவில் வந்து ‘எனக்கு பாக்ஸிங் சொல்லிக்கொடு’ என்று வசனம் பேச வைத்து, ஆடியன்ஸை ‘ஏன்டா இந்த காவியத்தை பார்க்க வந்தோம்’னு சுத்தலில் விட்டதற்கு, இந்தப் படம் எவ்வ்வ்வ்வளவோ பரவாயில்லை.

பி.கு – ஸ்நாக்ஸ் இல்லாமல் படம் பார்க்காதீர்கள். போர் அடிக்கும் !

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours