டிடி ரிட்டன்ஸ் படத்தின் கலகலக்கலான காமெடி ஹிட்டுக்குப் பிறகு வெளியாகி இருக்கும் சந்தானத்தின் படம் கிக்.
MJ ( தம்பி இராமையா) யின் விளம்பர நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் சந்தோஷ் (சந்தானம்). மறுபுறம் அதே போல மற்றொரு விளம்பர நிறுவனத்தில் வேலை செய்கிறார் நாயகி டான்யா ஹோப். இவர்களிடையே பிரபல கார் கம்பெனியின் விளம்பரத்தை எடுக்க போட்டி நிலவுகிறது. அந்நேரத்தில் கார் கம்பெனியின் விளம்பர மேனேஜரான செந்திலின் முன், கவர்ச்சி நடிகையை நடனம் ஆட வைத்து விளம்பரத்தை பெற்று விடுகிறார் சந்தானம். அதற்கு பிறகு ….? இதற்கு பிறகு இப்படத்தின் கதையை சரியாக சொல்பவர்களுக்கு இப்படத்தின் ப்ரொடியூசர் காசில் சிலை தான் வைக்க வேண்டும். தாறுமாறாக எங்கோ பயணித்து, கதாபாத்திரங்கள் எல்லாம் பேசிப் பேசிப் பேசி பேசி… கிளைமாக்ஸ் செல்கிறது கதை.
சந்தானத்தின் நகைச்சுவைக்கான பலமே அவரது “டீம்” என்று சொல்லலாம். ஆனால் இப்படத்தில் பரி”சோதனை” முயற்சியாக அவர்களை தவிர்த்து விட்டு, வெரைட்டியான காம்பினேசனில், ஒரு லிஸ்ட் எடுத்து அதில் சந்தானத்தைச் சேர்த்திருக்கிறார்கள். ஒருபுறம் தம்பி இராமையா நமது ஒரு காதைப் பிடித்து கத்த, மறுகாதில் கோவை சரளா அலறிக் கொண்டிருக்கிறார். நகைச்சுவை என்பது வாய்ஸ் மாடுலேஷனில் இருக்கிறது என்று இவர்கள் மனதில் யாரோ பதிய வைத்திருக்கிறார்கள். மேலும் நாயகி டான்யா ஹோப்பின் முகபாவனைகளில் நடிப்புக்கான எந்த “ஹோப்”பும் தெரியவில்லை.
இந்தக் கொடுமைகளுக்கு நடுவே கோனிக்கல் பிளாஸ்கில் கலர்கலராக ஃப்ண்டா, மிராண்டாவை ஊற்றி, காமெடி என்கிற பெயரில் சயின்டிஸ்ட்டாக பிரம்மானந்தத்தை அழைத்து வந்திருக்கிறார்கள், பாவம்! சயின்ட்ஸ் என்றாலே கலர் கலர் சர்பத் பாட்டில்களை அடுக்கிய ஆய்வகத்தில் வினோத செட்டப் போடும் வழக்கத்துக்கு இல்லையா சார் ஒரு எண்டு. அடுத்து வெகுநாட்களுக்குப் பிறகு செந்திலை திரையில் பார்க்கும் ரசிகர்களுக்கு, “எப்படி சிரிக்க வைத்த மனுஷன் இப்படியா இவரை பார்க்க வேண்டும்” என்கிற பரிதாப கேமியோ. அதுபோல மன்சூர் அலிகான், கிரேன் மனோகர், ஷகிலா, ஒய்.ஜி மகேந்திரன், வையாபுரி என மற்றொரு பட்டாளமும், இந்த கடுப்பேற்றும் சோதனை தர்பாரில் இணைகிறார்கள்.
படத்தின் மிகப்பெரிய ஆறுதலே ஒவ்வொரு காட்சிக்கு நடுவே வரும் இரண்டு நொடிகளின் அமைதி தான். மழை பெய்து ஓய்ந்தது போல இருக்கிறது. `பேசுவோம் இல்லாட்டி; பாட்டுப் போடுவோம்’ எது வேணும் என நீங்களே முடிவு பண்ணுங்க என விடாது கருப்பாக அரட்டுகிறார்கள். படம் – 2.05 மணி நேரம்; படத்தின் வசனம் – 2.30 மணி நேரம் என பாடாய்படுத்துகிற உணர்வு. ஆபாசமான இரட்டை அர்த்த வசனங்கள் பல இடங்களில் முகம் சுளிக்க வைக்கிறது. குறிப்பாக தம்பி இராமையாவுக்கு இன்னும் முதலிரவு நடக்கவில்லை என்று வருகிற காட்சிகள் எல்லாம் `டே டே டேய்ய்ய்’ என ஓட வைக்கிறது.
படத்தில் விளம்பரம் எடுக்கிறார்கள் என்பதால் இந்த படத்தின் ஒளிப்பதிவையும் விளம்பரம் போல செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுதாகர் எஸ்.ராஜ். 2 மணி நேரம் படம் என்றாலும் “படம் எப்போது முடியும்” என்கிற நிலையில், இந்த படத்தை வெட்டி ஒட்டிய படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரனுக்கு நன்றி. இசையமைப்பாளரும் “அவர்கள் மட்டும் தான் கத்துவார்களா” நானும் என் பங்குக்கு நான்கு அடி அடித்துக் கொள்கிறேன் என்று காதுகளை பதம் பார்க்கிறார்.
திரைக்கதை, காட்சி அமைப்பு என்று எந்த சிரத்தையும் போடாமல் இப்படி ஒரு படத்தை எடுத்தது யார் என்று எவரும் தேடக் கூடாது என்பதால் கேமியோவில் தலையைக் காட்டி இருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் ராஜ். சந்தானம் இப்படம் வெளிவரும் முன்னர் “இந்த படத்தை ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தோடு ஒப்பிட வேண்டாம். அது ஹாரர் காமெடி. இந்த ‘கிக்’ வேற மாதிரி இருக்கும். இது சந்தானம் படம் என்று சொல்வதை விட இயக்குநர் பிரசாந்த்ராஜின் படம் என்றுதான் சொல்ல வேண்டும்.” என்றார். “அப்போ புரியல இப்போ புரியுது” சாந்தானம் சாரே!
மொத்தத்தில் படத்தில் வேலை செய்த நபர்களின் உழைப்பையும், ரசிகர்களின் ரசனையையும் குறைவாக மதிப்பிட்டு காமெடி கலாட்டா என்கிற பெயரில் “2 மணி நேரம் 5 நிமிட” நேரவதம் செய்திருக்கிறார்கள். ஆக இந்த “கிக்”(அடி) யாருக்கு? என்றால், படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு தான்! என்றால் மிகையாகாது.
+ There are no comments
Add yours