பாலிவுட்டின் பிரபல நடிகையான ஹூமா குரேஷி ரஜினியின் `காலா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர்.
‘காலா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் அஜித்தின் ‘வலிமை’ படத்தில் நடித்திருந்தார். ‘வலிமை’ படத்திற்குப் பிறகு பாலிவுட்டில் தொடர்ந்து பல படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் பிஸியாக நடித்து வருகிறார். திரையுலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்த ஹூமா குரேஷி, உடல் எடை காரணமாக பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வந்தார். அதற்கான பதிலடிகளையும் சமூக வலைதளங்களில் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நல்ல கதைகளை மட்டுமே அவர் தேடுவதாகவும், முன்னணி நடிகர்களை அவர் தேடுவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய ஹூமா குரேஷி, “பிற மொழித் திரையுலகிலிருந்து சிறந்த கதைகளில் நடிக்க எனக்கு அழைப்புகள் வருகின்றன. அதனால் அந்தக் கதைகளில் யார் நடிக்கிறார்கள் என்றெல்லாம் பார்ப்பதில்லை.
சூப்பர் ஸ்டார்களைத் தேடிச் செல்லாமல், சூப்பர் கதைகளை மட்டுமே தேடிச் செல்கிறேன். கொரானாவிற்குப் பிறகு உலகம் முழுவதும் உள்ள பொழுதுபோக்குத் துறையில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. சிறந்த கதைகளைப் படமாக்கும் மாற்றத்துக்குப் பலரும் வந்துவிட்டார்கள்.
இதனால் தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் இது உற்சாகமான காலம். ஒரு தயாரிப்பாளராக, ஆரோக்கியமான கதைகளைச் சொல்லவே விரும்புகிறேன். இந்தியாவில் அற்புதமான கதைகள் உள்ளன. மக்களுக்கு அதிகாரம் அளிக்கும், நேர்மறையான தாக்கத்தை அளிக்கும் கதைகளைச் சொல்ல விரும்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
+ There are no comments
Add yours