ஜவான் படத்தின் இரண்டாம் பகுதியை படம் துவங்கும்போதே மாற்றி திரையிட்ட லண்டன் திரையரங்கம்
14 செப், 2023 – 12:45 IST
கடந்த சில நாட்களுக்கு முன்பு அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியானது. ஒரே நேரத்தில் உலகெங்கிலும் பல இடங்களில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இரண்டு தினங்களுக்கு முன்பு லண்டனில் ஒரு திரையரங்கில் ஜவான் படம் திரையிடப்பட்டபோது தவறுதலாக இடைவேளைக்குப்பின் துவங்கும் படத்தை ஆரம்பத்திலேயே மாற்றி திரையிட்டுள்ளனர். படம் பார்க்க வந்த பெரும்பாலானோருக்கு அது இடைவேளைக்கு பிந்தைய காட்சிகள் என்பதே தெரியவில்லை.
இங்கிருந்து தான் படம் ஆரம்பிக்கிறது என்கிற எண்ணத்தில் படத்தை பார்த்தவர்களுக்கு இடைவேளை முடியும்போது ஷாருக்கான், விஜய்சேதுபதி ஆகியோரின் கிளைமாக்ஸ் காட்சி வந்தபோது தான் படம் தவறுதலாக மாற்றி திரையிடப்பட்டுள்ளது என்பதே தெரியவந்துள்ளது. இந்த காட்சியின் போது படத்தைப் பார்த்த ஒரு பெண் இப்படி இடைவேளை வரை தவறுதலாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்து தெரியாமல் படம் பார்த்த அனுபவத்தை தனது சோசியல் மீடியாவில் ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
“இந்த படத்திற்கான டிக்கெட் தொகையை திருப்பித் தருவது மட்டுமல்ல இப்படி ஒரு மோசமான அனுபவத்தை தந்ததற்காக இனி வரும் நாட்களில் வெளியாகும் ஷாரூக்கான் படங்களுக்கு கட்டணம் வசூலிக்காமலேயே எங்களை அனுமதிக்க வேண்டும்.. அந்த அளவிற்கு ஜவான் படத்தில் எங்களுக்கு மோசமான அனுபவத்தை இந்த திரையரங்கம் கொடுத்திருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.
ஒருவேளை நம் ஊரைப்போல மீண்டும் மீண்டும் பார்க்கும் ரசிகர்கள் யாரேனும் ஒருவர் அந்த காட்சியை பார்த்து இருந்தால் ஒருவேளை இது தவிர்க்கப்பட்டிருக்கலாமோ என்னவோ ? துரதிஷ்டவசமாக எல்லோருமே அன்றுதான் ஜவான் படத்தை புதிதாக பார்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours