ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த `இறைவன்’ இம்மாதம் 28-ம் தேதி திரைக்கு வருகிறது. கடந்த 10-ம் தேதி அவரது பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியான `சைரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ஜெயம் ரவி சில புதிய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சுவாரஸ்யம் என்னவென்றால் அவை அனைத்துமே வித்தியாசமான ஜானர் மற்றும் கதைக்களங்களைக் கொண்டவை. அந்தப் படங்கள் குறித்த அப்டேட்ஸ் இங்கே…
தனது 25வது படமான ‘பூமி’யை முடித்துவிட்டு, அடுத்து தன் அண்ணன் மோகன் ராஜாவின் இயக்கத்தில் ‘தனி ஒருவன் 2’ஐத் தொடங்கிவிடலாம் என நினைத்திருந்தார் ஜெயம் ரவி. அந்தச் சமயத்தில் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக ரவியை அழைக்கவும், ‘தனி ஒருவன் 2’ஐ பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று ‘பொன்னியின் செல்வன்’ பாகங்களுக்குள் சென்றார் ரவி. அதன் பின்னர் கதைகள் தேர்வில் இன்னும் அக்கறை செலுத்த ஆரம்பித்தார். அந்தக் கதைக்கான ஹோம் ஒர்க்கிற்கு இடையேதான் ‘அகிலன்’ படத்தில் நடித்தார்.
இறைவன்
அதன்பின்னர் அகமத் இயக்கத்தில் ‘ஜன கண மன’வைத் தொடங்கினார்கள். டாப்ஸி ஹீரோயின். சில காரணங்களால் அந்தப் படத்தை அப்படியே வைத்துவிட்டு, ‘இறைவன்’ படத்தைத் தொடங்கினார் அகமத். அதுதான் இந்த மாதம் வெளியாகிறது. இதில் தொடர் கொலைகள் செய்யும் சீரியல் கில்லரைத் தேடும் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. வில்லனாக ‘விஸ்வரூபம்’ ராகுல் போஸ் நடித்துள்ளார்.
சைரன்
அஜித்தின் ‘விஸ்வாசம்’, விஷாலின் ‘இரும்புத்திரை’ படங்களுக்கு வசனம் எழுதிய அந்தோணி பாக்யராஜ் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘சைரன்.’ சென்னை, காரைக்குடி உட்படப் பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இந்தப் படத்திற்காக ஒன்றரை வருடங்கள் உழைத்திருக்கிறார் ரவி. அவரது பிறந்த நாள் பரிசாக வெளியாகியிருக்கும் அவரது ‘கைதி’ தோற்றத்திற்கு நேரெதிராக படத்தில் இன்னொரு கெட்டப்பும் அவருக்கு இருக்கிறது. இளமையும் துள்ளலுமான ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ ரவியும் அதில் இருக்கிறார் என்கிறார்கள்.
ஜெயம் ரவி – இயக்குநர் ராஜேஷ் படம்
ரவியின் 30வது படத்தை ‘சிவா மனசுல சக்தி’ ராஜேஷ்.எம் இயக்கிவருகிறார். இன்னமும் தலைப்பு வைக்கப்படாமல் இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் எனத் தகவல். ரவியின் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைய ஒரு ஷெட்யூல் மட்டும் மீதம் இருக்கிறது.
ஜீனி
இதற்கிடையே `வேல்ஸ்’ ஐசரி கணேஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அர்ஜுனன் இயக்கத்தில் ‘ஜீனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி என மூன்று ஹீரோயின்கள். பேன்டஸி படமான இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சென்னையில் இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்துவருகிறது. தன் பிறந்த நாளை இந்தப் படப்பிடிப்பில்தான் கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்தார் ஜெயம் ரவி.
கிருத்திகா உதயநிதி படமும் தனி ஒருவன் 2-வும்…
இதனை அடுத்து கிருத்திகா உதயநிதியின் படத்தில் நடிக்கிறார் ரவி. அநேகமாக நவம்பரில் அதன் படப்பிடிப்பு இருக்கலாம். அதனை முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அவரின் அண்ணன் மோகன் ராஜா இயக்கும் ‘தனி ஒருவன் 2’ படப்பிடிப்பைத் தொடங்குகிறார்கள். ‘தனி ஒருவன்’ முதல் பாகத்தில் அரவிந்த்சாமி வில்லனாக ஸ்கோர் செய்திருந்தார். இப்போது பாகம் 2-ல் பகத் பாசில் நடிக்கலாம் எனத் தெரிகிறது. ‘வேலைக்காரன்’ படம் மூலமாக பகத் பாசிலைத் தமிழுக்கு அழைத்து வந்தவர் மோகன் ராஜாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours