பாலிவுட் நடிகர் ஆமிர் கான் தற்போது படங்களில் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக பிரேக் எடுத்துக்கொண்டுள்ளார். அவருக்கு இரா கான் என்ற மகள் இருக்கிறார். ஆமிர் கானின் முன்னாள் மனைவி ரீனா தத்தாவிற்குப் பிறந்தவர்தான் இரா கான். இவர், கடந்த சில ஆண்டுகளாக நுபுர் சிகாரே என்பவரைக் காதலித்து வருகிறார். அவர்களுக்கு ஆமிர் கான் முன்னிலையில் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. எப்போது திருமணம் என்று அறிவிக்கப்படாத நிலையில் தற்போது அக்டோபர் 3ம் தேதி அவர்களின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3ம் தேதி மும்பையில் கோர்ட் மூலம் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து திருமண சடங்குகள் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடக்க இருக்கின்றன. மணமக்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொந்தங்கள் முன்னிலையில் உதய்ப்பூரில் 3 நாள்கள் திருமண நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில் பாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு இல்லை என்று தெரிகிறது. ஆனாலும் ஆமிர் கான் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுப்பார் என்று தெரிகிறது.
ஆமிர் கான் தற்போது திருமண வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இரா கானுக்கு 17 வயதாக இருந்த போதே நுபுர் அறிமுகமாகிவிட்டார். நுபுர் ஓர் உடற்பயிற்சியாளர். அவரிடம் உடற்பயிற்சி எடுத்துக்கொண்ட போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியது.
ஆமிர் கான் – ரீனா தத்தா ஜோடிக்கு ஜுனைத் கான் என்ற மகனும் உண்டு. அவர் தற்போது யஷ் ராஜ் பிலிம்ஸ் பேனரில் நடிகராகக் களமிறங்கவிருக்கிறார். இந்தப் படம் தமிழில் சூப்பர்ஹிட்டான ‘லவ் டுடே’ படத்தின் ரீமேக் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தற்போது முதல் படம் முடிவதற்குள்ளாகவே ஜுனைத் கான் தன் அடுத்த படத்திலும் கமிட்டாகி உள்ளார். இந்தப் படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிப்பார் என்று தெரிகிறது.
ஆமிர் கான் இரண்டாவது திருமணமாக கிரண் ராவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், இதுவும் விவாகரத்தில் முடிந்துள்ளது. இவர்களுக்கு ஆசாத் ராவ் கான் என்ற மகனும் உண்டு.
+ There are no comments
Add yours