ராணுவ வீரரான அப்பாவுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்கப் பெண்கள் படையுடன் களமிறங்கும் `ஜெயிலர்’ மகனின் கதையே இந்த `ஜவான்’ (Jawan).
பெண்கள் சிறையில் ஜெயிலராக இருக்கும் ஆசாத் ரத்தோர் (ஷாருக்கான்), ஆறு பேர் கொண்ட பெண் கைதிகள் படையுடன் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். மெட்ரோ ரயிலைக் கடத்துவது, அமைச்சரைக் கடத்துவது என இவரின் செயல்களைத் தடுக்க காவல் அதிகாரியான நர்மதா (நயன்தாரா) போராடுகிறார். ஆசாத் ஏன் இப்படியான செயல்களைச் செய்கிறார், அவருடன் இருக்கும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்ன, இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஆசாத்தின் அப்பா (விக்ரம் ரத்தோர்) உண்மையில் என்னவானார் போன்ற கேள்விகளுக்கு எல்லாம் கமெர்ஷியல் மசாலா தடவிய புல்லட்களைப் பறக்கவிட்டு விடைகளைச் சொல்கிறார் இயக்குநர் அட்லி.
மகன் ஆசாத் ரத்தோர், இளமைத் துள்ளும் வழக்கமான ஷாருக் என்றால், அப்பா விக்ரம் ரத்தோர், மாஸ் பேக்கேஜ். அதிரடி ஆக்ஷன், துடிப்பான உடல்மொழி, கேலி, கிண்டல் என ஷாருக்கான் இதில் தன் வழக்கமான ஏரியாவை விட்டு வெளியே வந்து அசத்தியிருக்கிறார். ஸ்டன்ட் காட்சிகளிலும் அவருடைய அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது. நாயகியாக நயன்தாராவுக்குப் பாடல்களில் தோன்றுவதைத் தாண்டி கதையிலும் முக்கியப் பங்களிப்பு இருப்பது ஆறுதல். காவல் அதிகாரிக்கு உரிய மிடுக்குடன் திரையில் தன் இருப்பைச் சிறப்பாகவே நிலை நிறுத்தியிருக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி என்றாலும் கெட்டப்பைத் தாண்டி புதிதாகவோ சவாலாகவோ எதுவுமில்லை. ஆங்காங்கே அவர் வீசும் கவுன்ட்டர்கள் மட்டும் ரசிக்க வைக்கின்றன.
ஷாருக் தலைமையில் செயல்படும் பெண்கள் டீமில் சான்யா மல்ஹோத்ரா மட்டும் கவனம் ஈர்க்கிறார். ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு, குழந்தைகள் மரணம் உள்ளிட்ட காட்சிகளில் வேண்டிய எமோஷன்களைக் கொடுத்து நம்மையும் பதற வைக்கிறார். பிரியாமணிக்கு அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. இவர்களைத் தவிர, சில காட்சிகளுக்கு மட்டும் வரும் யோகி பாபு, சஞ்சய் தத் ஆகியோரின் பாத்திரங்களை இன்னுமே பயன்படுத்தியிருக்கலாம். கேமியோவில் வரும் தீபிகா படுகோனுக்கு வழக்கமான ‘பிளாஷ்பேக் அம்மா’ ரோல்தான் என்றாலும் தன் நடிப்பால் அந்தப் பாத்திரத்தை முக்கியமான ஒன்றாக மாற்றுகிறார்.
பாலிவுட்டில் கால் பதித்திருக்கும் இயக்குநர் அட்லி, சமீபமாக இந்தியில் யாரும் பெரிதாகத் தொட்டுவிடாத ஒரு கதைக்கருவைக் கையில் எடுத்திருக்கிறார். அரசு மற்றும் அதிகாரத்தைக் கேள்வி கேட்பது, தனி மனிதன் vs அரசாங்கம், இருப்பவர்களிடமிருந்து எடுத்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பது என ராபின் ஹுட் பாணியிலான ஒரு படைப்பைக் கொடுத்திருக்கிறார்.
குறிப்பாகப் பிரமாண்டமான மேக்கிங், ஆக்ஷன் – சென்டிமென்ட் என மிக்ஸியில் அரைத்துக் கதை சொல்லும் யுக்தி, எங்குமே தேங்கி நிற்காத திரைக்கதை போன்றவற்றால் குறைகள் பெரிதாகத் தெரியாதபடி பார்த்துக் கொள்கிறார். விவசாயிகளின் கடனை அடைப்பது, மெட்ரோ ரயில் கடத்தல் காட்சிகளில் வரும் ட்விஸ்ட் போன்றவை ரசிக்க வைக்கின்றன.
ஒரு ஹீரோயிஸ பிம்பம் கொண்ட கதையில் சமகால பிரச்னைகளான ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டால் குழந்தைகள் மரணம், போபால் மரணங்கள், விவசாயிகள் தற்கொலை போன்றவற்றை நுழைத்திருப்பது பாராட்டத்தக்கது. அதே சமயம் அனைத்து பிரச்னைகளுமே தேசிய அளவில் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றுதான் என்றாலும் அதீத கழிவிரக்கம் கோரும் வகையில் அவற்றைக் காட்சிப்படுத்தியிருப்பது சற்றே ஓவர்டோஸ். படம் பார்ப்பவர்களை அழ வைத்தே ஆகவேண்டும் என்ற முனைப்பில் அதீத செயற்கைத்தனம் மற்றும் சென்டிமென்ட் நிறைந்த காட்சிகளால் பிளாஷ்பேக்குகள் நிரம்பி வழிகின்றன. அவை நிதர்சனம் தாண்டி வெகு தூரத்தில் இருப்பதும் கூடுதல் நெருடல்.
80, 90களின் தேச பக்தி தமிழ்ப் படங்கள், இயக்குநர் ஷங்கரின் படங்கள் தொடங்கி `வில்லு’, `கத்தி’, `ஆரம்பம்’, `மெர்சல்’, `ரங் தே பசந்தி’, `சர்தார்’ எனப் பல படங்கள் கண்முன்னே வந்துபோகின்றன. உடம்பு முழுக்க தமிழ் சினிமா ஊறிப்போன ஒருவரால்தான் இத்தனை கிளிஷேக்களுடன் படம் இயக்க முடியும் என்கிற அளவுக்கு ஏகப்பட்ட ரெஃபரன்ஸ்கள் எட்டிப் பார்க்கின்றன. இதனாலேயே நிறையக் காட்சிகள் `இது அதுல்ல…’ என்று யோசிக்க வைக்கின்றன. ஏழு ஸ்வரம்தான் என்றாலும் வெவ்வேறு இசைக்கருவிகளையேனும் பயன்படுத்தி இருக்கலாமே பாஸ்!
எழுத்தில் இப்படியான சிக்கல்கள் இருந்தாலும் ‘இயக்குநர்’ அட்லி தன் மேக்கிங் மற்றும் பிரமாண்ட செட் பீஸ்கள் கொண்டு இவற்றை எல்லாம் மறக்கடிக்க முயற்சி செய்திருக்கிறார். வடகிழக்கு மாநிலத்தின் கிராமம் ஒன்றில் நடக்கும் அந்த ஆரம்பச் சண்டைக்காட்சி, ஜெயில் செட் மற்றும் அதற்குள் அரங்கேறும் காட்சிகள், லாரிகளுடனான அந்த சேஸிங் காட்சிகள் போன்றவற்றில் பிரமிக்க வைக்கும் உழைப்பைப் போட்டிருக்கிறது படக்குழு. ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு, மூன்றரை மணிநேரமாவது ஓடும் படத்தைச் சுருக்கி இரண்டே முக்கால் மணி நேரத்துக்குள் சுருக்கிய ரூபனின் படத்தொகுப்பு எனத் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையுமே தாராளமாகப் பாராட்டலாம்.
அனிருத்தின் இசையில் `வந்த இடம்’, `ஹையோடா’ பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன. ஆனாலும் கதையை அப்படியே நிறுத்தி வைத்துவிட்டு இன்ட்ரோ சாங், டூயட் என்றெல்லாம் அலைபாய்வதைத் தவிர்த்திருக்கலாம். பின்னணி இசையில் `ஜவான்’ தீம் மியூசிக்கில் தன் ராக் ஸ்டார் முத்திரையை அழுத்தமாகப் பதிக்கிறார் அனிருத்.
முதல் பாதி பரபரப்பாக, குறைகளைக்கூட நின்று யோசிக்க விடாமல் அடுத்தடுத்த காட்சிகளுக்குத் தாவிவிடுகிறது. ஆனால், இரண்டாம் பாதியில் வேகம் குறைந்து பார்த்துப் பழக்கப்பட்ட டெம்ப்ளேட்டுக்குள் கதை சென்றவுடன் லாஜிக் குறைகள் அப்பட்டமாக வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன. வாக்கு இயந்திரங்களை அத்தனைச் சுலபமாகக் கடத்த முடியுமா, என்னதான் கார்ப்பரேட் வில்லன் என்றாலும் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகள் இத்தனை வளைந்துகொடுப்பார்களா, இந்திய ராணுவத்தையே ஏமாற்றிய ஒருவரை இப்படித்தான் ஜாலியாக விசாரிப்பார்களா எனப் பல கேள்விகள் படம் பார்த்து வெளியே வந்ததும் மண்டைக்குள் ஓடுகின்றன.
பாலிவுட்டை நோக்கி உருட்டிய பழைய மசாலா உருண்டையைக் கொஞ்சம் கிளிஷேக்கள் களைந்து லாஜிக்குடன் உருட்டியிருந்தால், நாமுமே அதை ரசித்து ருசித்திருக்கலாம். மற்றபடி மேக்கிங்கிற்காகவும், ஷாருக்கின் அசுரத்தனமான நடிப்புக்காகவும் மட்டும் இந்த `ஜவான்’ கவனம் பெறுகிறான்.
+ There are no comments
Add yours