பிற மாநில பிரபல நடிகர்களை நடிக்க வைத்தது, நல்ல ஒற்றுமைக்கு உதாரணம்.
அவர்களும் தங்கள் பணியைக் கச்சிதமாகச் செய்துள்ளார்கள். இசையமைப்பாளர் அனிருத் உலகப் பிரபலமாகி உள்ளார். வில்லன் என்றால் பிறமொழியும் பேசுவது தற்போது ட்ரண்டாகி வருகிறது. எல்லா இடத்திலும் பிரபலம் என்பதைக் காட்டும் உத்தியோ!
ரசிகர்களைக் கவர்கிறோம் என்று சொல்லி, தற்காலத் திரைப்படங்கள் பெரும்பாலானவை வயலன்சையே அச்சாணியாகக் கொண்டு இயங்குவதைப் பார்க்கையில், வருத்தமாக இருக்கிறது.
நல்ல கதையம்சமுள்ள, அன்பையும், பாசத்தையும், பொறுமையையும் போதிக்கும் படங்களை எப்போது பார்ப்போமென்று ஏக்கமாக இருக்கிறது.’பழிக்குப் பழி’என்ற ரீதியில் அமையும் கதைகள் சமுதாய மாற்றத்திற்கோ, முன்னேற்றத்திற்கோ நிச்சயமாக உதவ மாட்டா.
திரைப்படம் பொழுது போக்கிற்குத் தானே! என்று சிலர் வாதிடக் கூடும். அந்தப் பொழுது போக்கிலும் நல்ல கருத்துக்களைக் கூறினால் அது சமுதாய மாற்றத்திற்கு வித்திடும். அதிலும் ரஜினிகாந்த் போன்றவர்கள் கூறுபவற்றைப் பின்பற்ற பெருவாரியான மக்கள் உண்டல்லவா?
இன்னொன்று. உலக அளவில் பல பொழுது போக்கு இடங்களிலும் நொறுக்குத் தீனியாக இருப்பது ‘பாப்கார்ன்’ மற்றும் ‘காட்டன் கேன்டி’ என்று வெளி நாடுகளிலும், பஞ்சு மிட்டாய் என்று நம் நாட்டிலும் அழைக்கப்படும் இரண்டுந்தான். இதனை அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நானே நேரடியாகப் பார்த்துள்ளேன்.
நான் சென்ற தியேட்டரில் பாப்கார்னின் குறைந்த பட்ச விலை ₹280/-அதிக பட்ச விலை ₹880/- கார்களில் ‘டாப் வேரியன்ட்’ என்று சொல்வதைப் போல விலைகளை நிர்ணயிப்பது யார் என்று தெரியவில்லை. வெளியில் அதே பாப்காரன் ₹20/- விலைக்குக் கிடைக்கும். அதில் அதை, இதைக் கலக்கிறோம் என்று சொன்னாலும், அவ்வளவு விலை ஏற்றுக் கொள்ளக் கூடியதன்று. இவ்வளவுக்கும் சோளம் பயிரிடும் எந்த விவசாயியும் , தக்காளி பயிரிட்டு லட்சாதிபதி ஆனேன் என்று சமீபத்தில் சிலர் கூறியதைப்போல, எங்கும் கூறியதாகச் செய்திகள் இல்லை.
ரஜினி சார் மேலும் மேலும் உச்சத்தைத் தொட வேண்டுமென்ற எண்ணத்தில் இது எழுதப்பட்டதே தவிர வேறு எந்த எண்ணத்துடனும் இது எழுதப்படவில்லை.
அவர் இன்னும் பல உச்சங்களைத் தொட வாழ்த்துக்கள்.
-என்றும் மாறாத அன்புடன்…
-ரெ.ஆத்மநாதன்,
கூடுவாஞ்சேரி
+ There are no comments
Add yours