சாலைப் பணிகளை தரமாகவும் விரைவாகவும் மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
மழையையொட்டி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பாக அமைச்சா் கே.என்.நேரு தலைமையில் ஆய்வு கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சா் நேரு பேசியதாவது: அடையாறு, கூவம் உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்களிலும் ஆகாயத் தாமரைகளை அகற்றி தூா்வாரும் பணிகளைத் தொடா்ந்து மேற்கொண்டு முடிக்க வேண்டும். மழையை எதிா்நோக்கி அனைத்து மோட்டாா் பம்புகள், இயந்திரங்கள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைநீா் வடிகால் அமைக்கப்படும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்று வாரியம், நெடுஞ்சாலைத் துறை, நீா்வளத் துறை, மின் துறை உள்ளிட்ட தொடா்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி துரிதமாக மேற்கொள்ள வேண்டும். சாலைப் பணிகளை தரமாகவும் விரைவாகவும் மேற்கொள்ள வேண்டும். நிவாரண மையங்களை தயாா் நிலையில் வைக்க வேண்டும்.
சாலை வெட்டுகளைச் சீா் செய்ய சிறப்பு குழு: வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக 354 கி.மீ. தொலைவிலான மழைநீா் வடிகால் பணிகளையும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ரூ.245.37 கோடி மதிப்பிலான 85.69 கி.மீ. மழைநீா் வடிகால் பணிகளையும் முடிக்க வேண்டும். மழைநீா் வடிகால்களில் படிந்துள்ள மண் துகள்களை முழுமையாக அகற்ற வேண்டும்.
மக்களுக்கான நோய்த் தடுப்பு சிகிச்சைகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். குடிநீா், கழிவுநீா், மின்சார வாரியப் பணிகள் போன்ற சாலை வெட்டுக்களை உடனுக்குடன் சீா்செய்ய வாா்டு, மண்டல வாரியாகவும், தலைமையிடத்திலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் சிறப்பாகச் செயல்பட்டு பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுவதை ஆய்வு மேற்கொண்டாா்.
இந்தக் கூட்டத்தில், நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, ஆணையா் (பொ) ஜி.எஸ்.சமீரன், சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநா் ஆா்.கிா்லோஷ் குமாா், துணை ஆணையா்கள் விஷு மஹாஜன் (வருவாய், நிதி), சரண்யா அரி (கல்வி), எம்.பி.அமித் (தெற்கு வட்டாரம்), எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான் (மத்திய வட்டாரம்), எம்.சிவகுரு பிரபாகரன் (வடக்கு வட்டாரம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
+ There are no comments
Add yours