சென்னை:
Penalty For Savukku Shankar:
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறாக ட்வீட் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், இடைக்காலத் தடை உத்தரவை மீறியதாக சவுக்கு சங்கருக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ள நிலையில், இனி அவர் ட்வீட் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும் சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை மீறி அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக சவுக்கு சங்கருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம், எதிர்காலத்தில் கருத்துக்களை பதிவிடும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென கூறி இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
சவுக்கு சங்கர், தன்னை பற்றி தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், அதற்கு தடைவிதிக்க கோரியும், மான நஷ்ட ஈடாக 2 கோடி ரூபாய் வழங்கவும் உத்தரவிடக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தொடர்ந்து அவதூறு
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி, அவதூறு கருத்துகளை பதிவிட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
தடையும் நீக்கம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் அவதூறு கருத்து பதிவிட்டதற்காக சவுக்கு சங்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும், தனது பதிவு குறித்து சவுக்கு சங்கர் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்ட நீதிபதி, இனி கருத்துக்களை பதிவிடும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கருத்து தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்றம் தடைச்சட்ட வழக்கில் அமலாகத்துறையால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவருக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இதய ரத்தநாளங்களின் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர். இதனிடையே அவரை வரும் ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அவரை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், அவர் நேற்று சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலும், அமலாக்கத்துறை அவரை காவலில் எடுக்கக்கோரி தாக்கல் செய்த மனுவும், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவிடும் என தெரிவித்திருந்தது.
+ There are no comments
Add yours