“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மறுப்பு” – அமலாக்கத்துறை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.!

Estimated read time 1 min read

சென்னை:

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், அவரை 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கியது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று, அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தது. இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.

மருத்துவமனையில் இருந்து காணொலி வாயிலாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அமலாக்கத்துறையின் மனு நகல், தங்களுக்கு அனுப்பப்பட்டதா என்ற நீதிபதியின் கேள்விக்கு, தனக்கு கிடைக்கவில்லை என அவர் பதிலளித்தார். இதனையடுத்து, அமலாக்கத்துறையின் மனுவை செந்தில் பாலாஜியிடம் அளித்து கையொப்பம் பெற நீதிமன்ற பணியாளருக்கு நீதிபதி அல்லி அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிட்டார். போக்குவரத்துக் கழக நியமனங்களுக்கு முறைகேடாக பெற்ற தொகை குறித்த முழு விவரங்களை பெற வேண்டி உள்ளது என்றும், செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, காவலில் வைத்து விசாரிக்க கோரும் மனுவை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைத்ததாக அமலாக்கத்துறையின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இதனை அடுத்து இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது வழக்கு தொடர்பான உத்தரவுகளை வாசித்த நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும்  அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாகத்துறை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி அளித்தார். பின்னர் வழக்கை ஜூன் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அல்லி, அன்று செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours