சென்னை: Senthil Balaji Arrest News
மின்சார துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்ததீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் நேற்று சோதனை நடத்தினர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில் இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்காக நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்து சென்ற போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு அமைச்சர்கள், திமுகவினர், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கையை தடுப்பது சரி அல்ல. அமலாக்கத்துறை சோதனைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறிய செந்தில் பாலாஜிக்கு கைதாவதில் என்ன பிரச்சினை உள்ளது. சட்டவிரோத பார்கள் மூலம் அரசின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மதுவிற்பனையால் அரசின் கருவூலத்திற்கு வரும் வருவாய் பாதிப்பு.
சட்டவிரோத பார்கள் மூலம் ரூ.2,000 கோடி முறைகேடு நடந்துள்ளது. முறைகேடால் கிடைத்த பணம் ஒரே குடும்பத்திற்கு சென்றுள்ளது. இதற்கு காரணம் அமைச்சர் செந்தில் பாலாஜியே காரணம். அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை உடனடியாக முதல்-அமைச்சர் நீக்க வேண்டும். அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நபரை அமைச்சர்கள் சந்திப்பது விதிமுறை மீறல். எய்ம்ஸ் மருத்துவர்களை அழைத்து வந்து செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்ய வேண்டும். அமலாக்கத்துறை வசம் இருக்கும் செந்தில் பாலாஜியை முதல்-அமைச்சர் சந்திப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. செந்தில் பாலாஜி மீது முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறினார்.
+ There are no comments
Add yours