சேலம்:
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த மாதம் 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடந்தது. இதனை காண ஏற்காட்டுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். இதனால் சேலம் பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காட்டுக்கு 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் நேற்று முன்தினம் வரை ஏற்காட்டுக்கு இயக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் நேற்று மாலை 3 மணிக்கு ஏற்காட்டுக்கு சேலத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 3 அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. மேலும் தனியார் பஸ்களும் சரிவர இயங்கவில்லை. இதனால் நூற்றுக்கணகான சுற்றுலா பயணிகள் ஏற்காடு பஸ் நிலையத்தில் காத்து கிடந்தனர்.
அப்போது அவர்கள் சேலத்துக்கு செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தரக்கோரி அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஏற்காட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன், கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் ஆகியோர் சாலைமறியலில் ஈடுபட்ட சுற்றுலா பயணிகளை சமாதானப்படுத்தினர்.
மேலும் பஸ் வசதி ஏற்படுத்தி கொடுப்பதாக உறுதி அளித்தனர். அதில் சமாதானமடைந்த சுற்றுலா பயணிகள் சாலைமறியலை கைவிட்டனர். பின்னர் இரவு 7 மணி அளவில் சிறப்பு பஸ்கள் ஏற்காட்டுக்கு வந்தன. 4 மணி நேரமாக காத்திருந்த பயணிகள், பஸ்சில் முண்டியடித்து ஏறி, இடம் பிடித்தனர். இந்த சம்பவம் நேற்று ஏற்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
+ There are no comments
Add yours