கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தோப்புக்கொல்லை தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் அருள் (வயது 35), கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி(32). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஹரிணி(8), ஹேமலதா(6) என்ற 2 மகள்களும், குமுதன்(5) என்ற மகனும் உள்ளனர்.
அருள் தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்- மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த அருளின் தாய் தமிழேந்தி, கணவன்-மனைவி இருவரையும் சமாதானப்படுத்தினார். பின்னர் இரவில் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தனர். இதற்கிடையே நேற்று அதிகாலை 5 மணி அளவில் தூங்கி எழுந்த அருள் மீண்டும் மனைவியிடம் தகராறு செய்து, அவரை தாக்கியுள்ளார்.
இதனால் தமிழேந்தி தனது பேர பிள்ளைகளை அருகில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் முத்துலட்சுமி திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருள், முத்துலட்சுமியிடம் இருந்த கேனை பிடுங்கி தன் மீதும் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டார். அந்த சமயத்தில் முத்துலட்சுமி தீக்குச்சியை கொளுத்தியதால், இருவர் மீதும் தீப்பற்றி எரிந்தது. இதில் இருவரது உடலிலும் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் வலியால் அலறி துடித்தபடி வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீக்காயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். போலீஸ் விசாரணை இதுகுறித்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours