நகைக்கடையில் பணியாற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், தன் அம்மா தீபா ஷங்கர், வாய் பேச முடியாத அக்கா லட்சுமி பிரியா சந்திரமௌலி, உடம்புக்கு முடியாத அப்பா ஆகியோருடன் போராட்டமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். நகைக்கடையின் பம்பர் பரிசாக ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்று இவர்களைத் தேடிவர, அதைவைத்து அக்காவின் திருமணத்தை முடித்துவிடத் திட்டமிடுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால், கார் வந்தவுடன் பிரச்னைகளும் கூடயே வருகின்றன. வீட்டைவிட்டு ஓடிப்போன அண்ணன், தன் மச்சானுடன் வந்து காருக்கு உரிமைக்கொண்டாடி சண்டைபோட, பிரச்னை காவல்நிலையம் வரை செல்கிறது. லட்சுமி பிரியா தன் வருங்கால கணவனுடன் காரில் ஒரு ரகசியத்தையும் மறைத்துவைத்திருக்க, அதைக் காக்கவும், காரை மீட்கவும் போராடுகிறது ஐஸ்வர்யா ராஜேஷ் தலைமையிலான மூன்று பெண்கள் கொண்ட படை. அதில் அவர்கள் வென்றார்களா, காரிலிருந்த ரகசியம் என்னவானது?
வீட்டின் கடைசிப் பெண்ணாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் பாதியில் வழக்கமான ஒரு கதாபாத்திரமாக மட்டுமே வந்துபோனாலும், இரண்டாம் பாதியில் வரும் சதி திட்டங்கள், புத்திசாலித்தனமான ப்ளானிங் போன்றவற்றுக்குச் சிறப்பானதொரு பங்களிப்பை அளித்திருக்கிறார். ஸ்டன்ட் காட்சிகளிலும் தன் உழைப்பைக் கொடுத்து மாஸ் ஹீரோயினாக பாஸாகிறார். லட்சுமி பிரியா சந்திரமௌலி நன்றாகவே நடித்திருந்தாலும் அவரின் பாத்திரத்தை இன்னமும் பயன்படுத்தியிருக்கலாம் என்பது மட்டுமே குறை.
+ There are no comments
Add yours