15 கோடி மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷ் கைதாவாரா?
11 ஏப், 2023 – 18:41 IST
தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது ‘ஆருத்ரா மோசடி வழக்கு’. பல மடங்கு வட்டி தருவதாக சொல்லி பொதுமக்களிடம் ஆயிரம் கோடிக்கு மேல் பண வசூல் செய்துள்ள ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில் 16 பேரை குற்றவாளிகளாக அறிவித்து உள்ளனர். அவர்களில் 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மீதி 5 பேரை தலைமறைவு குற்றவாளிகளாக அறிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த வரிசையில் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷூக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதற்கு சிகிச்சை அளிப்பதற்காக வெளிநாடு சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையில் இந்த மோசடிக்கும் ஆர்.கே.சுரேசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆர்.கே.சுரேஷ் சார்பில் போலீசில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் அளித்துள்ள விளக்கத்தில் “ஆர்.கே.சுரேஷ் பொதுமக்களிடம் இருந்து ஆருத்ரா நிறுவனம் சார்பாக முதலீட்டுத் தொகை எதையும் பெறவில்லை. ஆனால், ஆருத்ரா நிறுவனத்திடம் இருந்து அவர் ரூ.15 கோடியை பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அது தொடர்பாகவே அவரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது.
ஆருத்ரா நிறுவனத்திடம் இருந்து அவர் பெற்ற ரூ.15 கோடிக்கும் விளக்கம் அளிக்க வேண்டும். அவர் இந்த வழக்கில் தற்போதுவரை குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை. அவர் கண்டிப்பாக ஆஜராகி அவர் பெற்ற ரூ.15 கோடிக்கும் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேசுக்கு நேரடி தொடர்பில்லை என்றாலும், ஆருத்ரா நிறுவனத்தை பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றுவதாக கூறி அந்த நிறுவனத்திடமிருந்து 15 கோடி ரூபாய் அவர் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இது நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஆர்.கே.சுரேசும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.
+ There are no comments
Add yours